6 தொகுதிகளில் மட்டும் போட்டியிட ஒப்புக்கொண்டது ஏன்? திருமாவளவன் விளக்கம்
தி.மு.க. கூட்டணியில் 6 தொகுதிகளில் மட்டும் போட்டியிட ஒப்புக்கொண்டது ஏன் என்று திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார்.
அரியலூரில் தி.மு.க. கூட்டணி கட்சி வேட்டபாளருக்கு ஆதரவாக வி.சி.க.தலைவர் திருமாவளவன் இன்று திறந்த வேனில் நின்று பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசும்போது,
“இந்தத் தேர்தல் இதற்கு முன்பு சந்தித்த தேர்தல் போன்றதல்ல. அ.தி.மு.க., தி.மு.க. இரு துருவங்களாக மோதுகிறோம் என்றாலும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைக் குறிவைத்து பா.ஜ.க. காய்களை நகர்த்தி தேர்தலைச் சந்திக்கிறது.
அ.தி.மு.க., பா.ம.க. தோள்களில் ஏறி பா.ஜ.க. களத்திற்கு வந்துள்ளது. அக்கட்சியால் நேரடியாகத் தமிழகத்தில் ஒரு ஒன்றிய கவுன்சிலர் பதவி கூட வெற்றி பெற முடியாது. கருணாநிதி மற்றும் ஜெயலலிதா இல்லை என்பதால், தமிழகத்தில் எப்படியாவது காலூன்றி விடலாம், தி.மு.க.வு.க்கு அடுத்த இரண்டாவது பெரிய கட்சியாக வளர்ந்து விடலாம் என்று பா.ஜ.க. நினைக்கிறது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரோடு மோதக்கூட பா.ஜ.க.வுக்குத் தகுதியில்லை. இவர்களால் தி.மு.க.வுடன் எவ்வாறு மோத முடியும்? அதனால்தான் அ.தி.மு.க., பா.ம.க. முகமூடி போட்டுக்கொண்டு பா.ஜ.க. வருகிறது.
தமிழக மக்கள் எப்படிப் போனால் என்ன? தமிழகத்தில் ஆட்சிக்கு மீண்டும் வரவேண்டும். சேர்த்த சொத்துகளைப் பாதுகாக்க வேண்டும். வருமான வரி சோதனையிலிருந்து தப்பித்துக்கொள்ள வேண்டும் என்பதால்தான் அ.தி.மு.க.வும், பா.ம.க.வும், பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்துள்ளன. ஸ்டாலின் மகள் வீட்டில் சோதனை செய்த வருமான வரித்துறை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் வீட்டில் சோதனை செய்ய வேண்டியதுதானே? தாய் 8 அடி பாய்ந்தால், குட்டி 16 அடி பாயும் என்பதை அறியாமல் ஸ்டாலினுடன் மோதுகின்றனர்.
பா.ஜ.க.வுக்குத் தமிழகத்தில் இடம் இல்லை என்பதே விடுதலைச் சிறுத்தைகளின் அரசியல். பா.ஜ.க.வை எதிர்த்தே தி.மு.க. கூட்டணியில் 6 சீட்டுக்கு முதல் கையெழுத்து இட்டேன். மாநிலக் கட்சிகள் இருக்கக் கூடாது என பாஜக நினைக்கிறது. தேர்தலுக்குப் பிறகு அ.தி.மு.க மற்றும் பா.ம.க.வை பா.ஜ.க. விழுங்கிவிடும். அதிமுக கூட்டணியை ஆதரித்தால் தமிழகத்தை மோடிதான் ஆட்சி செய்வார்’’.
இவ்வாறு அவர் பேசினார்.