அன்புமணியா.? எல்.கே.சுதீஷா.? காலியாகும் மாநிலங்களவை பதவி- இபிஎஸ் எடுக்கப்போகும் முடிவு என்ன.?
சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக மாநிலங்களவை தேர்தல் தமிழகத்தில் நடைபெறவுள்ளது. காலியாகும் 6 இடங்களில் திமுக 4 இடங்களை கைப்பற்றும் நிலையில், அதிமுக 2 இடங்களை யாருக்கு ஒதுக்கும் என்ற் கேள்வி எழுந்துள்ளது.

தேர்தல் களத்தில் தமிழக அரசியல் கட்சிகள்
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக தமிழகம் இன்னொரு தேர்தலை சந்திக்கவுள்ளது. இந்த தேர்தல் அதிமுகவிற்கு கடும் நெருக்கடியை கொடுக்கும் தேர்தலாக அமைந்துள்ளது. சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 5 மாத காலமே உள்ள நிலையில், கூட்டணியை பலப்படுத்த திமுக,அதிமுக, தவெக திட்டமிட்டு வருகிறது. அந்த வகையில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட், மதிமுக, முஸ்லிம் லீக், மநீம, மமக உள்ளிட்ட கட்சிகளோடு பலம் வாய்ந்த கூட்டணியாக திமுக உள்ளது. கடந்த 8 வருடங்களில் தொடர் வெற்றியை பெற்று வெற்றிக்கூட்டணியாகவும் உள்ளது. ஆனால் எதிர்கட்சியான அதிமுகவில் கூட்டணி தொடர்பாக தொடர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
பிப்ரவரியில் ராஜ்யசபா தேர்தல் அறிவிப்ப
இதில் தற்போது வரை பாஜகவை மட்டும் தங்கள் அணியில் இணைத்துள்ளது. மேலும் பாமக, தேமுதிக ஆகிய கட்சிகளையும் கூட்டணியில் இணைக்க காய் நகர்த்தப்பட்டு வருகிறது. ஆனால் கூட்டணிக்கு வர வேண்டும் என்றால் ராஜ்யசபா சீட் வேண்டும் என இரண்டு தரப்பும் நிபந்தனையை விதித்து வருகிறது. ஆனால் அதிமுகவிடம் இருப்பது இரண்டு ராஜ்யசபா இடங்கள் மட்டுமே, எனவே எடப்பாடி பழனிசாமி என்ன முடிவு எடுக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அந்த வகையில் தமிழகத்தின் 6 மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவி இடங்கள் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் காலியாகிறது. இதன் காரணமாக 6 இடங்களுக்கு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக தேர்தல் நடத்த வேண்டிய சூழல் உருவாகியுள்ளது
6 பேரின் பதவி காலியாகிறது
கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் திமுக சார்பாக திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், என்.ஆர். இளங்கோ , கனிமொழி சோமு ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இதே போல அதிமுக சார்பில் தம்பிதுரையும் கூட்டணி கட்சியாக இருந்த தமாகா தலைவர் ஜி.கே.வாசனும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பின்னர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த 6 பேரின் பதவிக்காலம் வருகிற ஏப்ரல் மாதம் முடிவடையவுள்ளது. எனவே தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக நடத்தி முடிக்க வேண்டிய நிலை உள்ளது. பிப்ரவரி மாதம் ராஜ்யசபா தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படவுள்ளது.
இதில் திமுக சார்பாக 4 இடங்களுக்கு வேட்பாளரை அறிவிக்கப்படவுள்ளது. அதில் கூட்டணி கட்சியான காங்கிரஸ் அல்லது விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒரு இடம் கொடுக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மீதமுள்ள 3 இடங்களில் திமுக வேட்பாளர்களை அறிவிக்கவுள்ளது. அதே நேரம் அதிமுகவுடன் தேர்தலில் கூட்டணி அமைக்க ராஜ்யசபா சீட் துருப்பு சீட்டாக உள்ளது. ஏற்கனவே கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற ராஜ்யசபா தேர்தலில் தேமுதிகவிற்கு சீட் கொடுக்கவில்லை என்ற காரணத்தால் அதிமுகவிற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தது. எனவே தேமுதிகவை சமாதானப்படுத்த 2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ராஜ்யசபா தேர்தலில் சீட் அளிக்கப்படும் என உறுதி அளித்தது.
அதிமுக யாருக்கு சீட் கொடுக்கும்.?
ஆனால் தேமுதிக அதிமுக கூட்டணியில் தற்போது இல்லையெனவும் தேர்தல் நெருக்கத்தில் தான் அறிவிப்போம் என கூறிவிட்டது. இதே போல திமுகவிடமும் ராஜ்யசாப சீட் மற்றும் கூட்டணி தொடர்பாக தேமுதிக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அதே நேரம் பாமக தலைவராக உள்ள அன்புமணியும் ராஜ்யசபா சீட் கேட்டுள்ளார். ஆனால் அதிமுக நிர்வாகிகள் அன்புமணிக்கு சீட் கொடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
அன்புமணியா.? எல்.கே.சுதீஸ்.?
கடந்த முறை அன்புமணிக்கு சீட் கொடுக்கப்படும் வரை கூட்டணியில் இருந்து விட்டு, அடுத்த நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணையாமல் பாஜகவிற்கு பல்டி அடித்தார். எனவே அன்புமணிக்கு கொடுக்கப்படுமா என்பது கேள்வியை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரம் கூட்டணியை வலுப்படுத்த பாமகவிற்கு ஒரு சீட் ஒதுக்க வேண்டிய கட்டாயத்தில் அதிமுக தள்ளப்பட்டுள்ளது. எனவே இரண்டு இடங்களையும் கூட்டணி கட்சிகளுக்கு விட்டுக்கொடுக்குமா.? அல்லது பாமக அல்லது தேமுதிக ஆகிய இரு கட்சிகளில் ஒரு கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்படுமா.? என்பதை எடப்பாடி பழனிசாமி எடுக்கும் முடிவில் தான் உள்ளது.





















