தி.மு.க பொருளாளர் டி.ஆர்.பாலுவுக்கு கொரோனா தொற்று
தி.மு.க. பொருளாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான டி.ஆர்.பாலுவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா பரவல் அச்சுறுத்தும் வகையில் அதிகரித்து வருகிறது. தினசரி கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 1.60 லட்சத்திற்கும் அதிகமாக அதிகரித்துவருகிறது. இந்நிலையில், தி.மு.க பொருளாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான டி.ஆர்.பாலுவிற்கு கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
அவருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, அவரது மகனும், எம்.எல்.ஏவுமான டி.ஆர்.பி.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில்,“எனது தந்தை டி.ஆர்.பாலுவுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது, அவரது உடல்நிலை சீராக உள்ளது. கடந்த ஒரு வாரமாக அவரைச் சந்தித்தவர்கள் தயவுகூர்ந்து கொரோனா பரிசோதனை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகனும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியின் எம்எல்ஏவும், திமுக வேட்பாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதவிர, தமிழக தேர்தலில் போட்டியிட்ட 10-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

