MK Stalin: ஓய்வூதிய பிரச்சினையை தீர்த்தது திமுகதான்; மகிழ்ச்சியில் அரசு ஊழியர்கள்- முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
TN Assembly Session 2026: அரசு ஊழியர்களின் ஊதியத்தைப் பற்றி எடப்பாடி பழனிசாமி கொச்சைப்படுத்தி பேசியதை யாரும் மறந்துவிட மாட்டார்கள்- முதல்வர் ஸ்டாலின்.

அரசு ஊழியர்களின் 23 ஆண்டுகால ஓய்வூதியப் பிரச்சினையைத் தீர்த்து வைத்துள்ளோம். அதனால்தான் கோட்டையில் எனது அறைக்கே வந்து இனிப்பை ஊட்டினார்கள் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் அரசு ஊழியர்களின் போராட்டம் குறித்து அதிமுக எம்எல்ஏ தங்கமணி கேள்வி எழுப்பி எழுப்பினார். இதற்கு பதிலளித்து முதல்வர் ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
’’அரசு ஊழியர்கள் மீதான உங்களின் அக்கறை ஏன் உங்கள் ஆட்சியில் இல்லை?
அரசு ஊழியர்களுக்கு எதிராக எஸ்மா, டெஸ்மா சட்டங்களை கொண்டு வந்தது யார்? போராட்டத்தில் ஈடுபட்டவர்களை இரவோடு இரவாக கைது செய்தது யார்? சிறையில் அடைத்தது யார்? இதெல்லாம் கடந்த கால அதிமுக ஆட்சியில் நடந்தது.
கொச்சைப்படுத்திய ஈபிஎஸ்
அரசு ஊழியர்களின் ஊதியத்தைப் பற்றி எடப்பாடி பழனிசாமி கொச்சைப்படுத்தி பேசியதை யாரும் மறந்துவிட மாட்டார்கள்.
அரசு ஊழியர்களின் 23 ஆண்டுகால ஓய்வூதியப் பிரச்சினையைத் தீர்த்து வைத்துள்ளோம். அதனால்தான் கோட்டையில் எனது அறைக்கே வந்து இனிப்பை ஊட்டினார்கள். அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியாக இருப்பது அதிமுகவுக்குப் பிடிக்கவில்லை.

அரசு வேடிக்கை பார்க்காது
ஆசிரியர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்களின் போராட்டங்களை அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது. தீர்த்து வைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. ஆசிரியர்களின் கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும்’’.
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
சட்டப்பேரவைத் தேர்தல் குறித்த அறிவிப்பு விரைவில் வர உள்ள நிலையில், ஆசிரியர்கள் உள்ளிட்ட பல்வேறு அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றி வருவது குறிப்பிடத்தக்கது.






















