Annamalai: "பாஜகவுக்கு பயமில்ல.. திராவிட சித்தாந்தத்தையே பேசும் விஜய்" ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை!
திராவிட கட்சிகளின் சித்தாந்தத்தையே விஜய் பேசுகிறார் என லண்டனில் இருந்து சென்னை திரும்பிய அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை லண்டனில் தனது படிப்பை முடித்து இன்று சென்னை திரும்பினார். சென்னை திரும்பிய அவர் விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது, "பாஜக புதிய கட்சிகளுக்கு பயப்படாது.
நடிகர் விஜய் அக்டோபர் மாதத்திற்கு பிறகு எத்தனை முறை வெளியில் வந்திருக்கிறார்? திராவிட கட்சிகளின் சித்தாந்தத்தையே விஜய் பேசுகிறார். திமுகவும், ஆம் ஆத்மியும் வித்தியாசமான பாதையில் இந்தியாவில் பயணிக்கிறது.
"பாஜகவுக்கு பயம் இல்ல"
திராவிட கட்சிகளின் வாக்கு மூன்றாக பிரிகிறது எனறே பார்க்கிறேன். அண்ணன் சீமானின் பாதை வேறு. பாஜகவின் பாதை வேறு. 2026 தேர்தல் சரித்திர தேர்தலாக அமையும்" இவ்வாறு அவர் பேசினார்.
தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்ட பின்னர், அவரின் அதிரடி நடவடிக்கைகள் பேச்சுகளால் அனுதினமும் அரசியல் களத்தை பரபரப்பாக வைத்துக்கொண்டிருந்தார். ஆனால், அவர் லண்டன் புறப்பட்டு சென்ற பிறகு இந்த மூன்று மாதங்களில் அதிமுக, திமுகவுக்கு எதிராக பாஜக செய்து வந்த அரசியலும், அந்த வீரியமும் குறைய தொடங்கியது.
அதனால், பரபரப்பு செய்திகளுக்கும் – காரசார வார்த்தை மோதல்களுக்கும் இந்த நாட்களில் ஒரு இடைவேளை ஏற்பட்டது. பாஜக மூத்த தலைவரான H. ராஜா, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்ட போதிலும், அண்ணாமலை அளவுக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை.
விஜய் vs அண்ணாமலை:
தேர்தலில் வெற்றி பெறவில்லை என்றாலும் அண்ணாமலையின் நடவடிக்கைகள் அனுதினமும் பேசுபொருளாக இருந்தது. இந்த இடைப்பட்ட காலத்தில்தான், ஒட்டுமொத்த அரசியல் கவனத்தையும் தன் மீது திருப்பியுள்ளார் விஜய்.
விஜய்யின் ஒவ்வொரு நடவடிக்கையும் தமிழ்நாடு அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கட்சி மாநாட்டில் பேசிய அதிரடி பேச்சு தொடங்கி செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வரை திமுக, பாஜகவுக்கு எதிராக தனது காய்களை நகர்த்தி வந்தார்.
அதிமுகவை விமர்சிக்காத நிலையில், அக்கட்சியுடன் தவெக கூட்டணி அமைக்க போவதாக தகவல்கள் வெளியாகின. பின்னர், தவெக சார்பில் அதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இப்படிப்பட்ட சூழலில், அண்ணாமலை தமிழகம் திரும்பி இருப்பது அரசியல் களத்தில் மேலும் சுவாரஸ்யத்தை கூட்டியுள்ளது.
இதையும் படிக்க: Rohit Sharma: இவ்ளோ கோபமா..! கேட்ச் விட்ட சர்ஃப்ராஸ் கான், மைதானத்திலேயே அடித்த ரோகித் சர்மா..! வீடியோ வைரல்