TVK VIJAY: விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் “தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை சிறப்பு குழு” அமைக்கப்படுகிறது. இந்த தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை குழுவுக்கான பல்வேறு கடமைகள் குறித்து விஜய் முடிவெடுக்க தவெக கூட்டத்தில் தீர்மானம்

அரசியல் களத்தில் விஜய்
தமிழக சட்டமன்ற தேர்தல் இன்னும் 4 முதல் 5 மாத காலத்திற்குள் நடைபெறவுள்ள நிலையில், தேர்தலுக்கான பணியை அரசியல் கட்சிகள் தொடங்கியுள்ளது. அந்த வகையில் திமுகவிற்கு போட்டியாக களத்தில் இறங்கியுள்ள நடிகர் விஜய், தமிழக வெற்றிக்கழகத்தை தொடங்கியுள்ளார். இரண்டு மாநில மாநாட்டை நடத்தி முடித்தவர் அடுத்ததாக மக்கள் சந்திப்புக்கான நிகழ்வுகளை திட்டமிட்டார். இதன் படி, திருச்சி, அரியலூர், நாகை, திருவாரூர், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் நடைபெற்றது. இதனையடுத்து கரூரில் நடைபெற்ற கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
மீண்டும் மக்களை சந்திக்கும் விஜய்
இந்த சம்பவத்தையடுத்து சுமார் 72 நாட்கள் அமைதி காத்திருந்த விஜய் நேற்று முன்தினம் புதுச்சேரியில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சில் கலந்துகொண்டார். விரைவில் தமிழகம் முழுவதும் மக்கள் சந்திப்பு நிகழ்விற்கு திட்டமிடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தவெக மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 4 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தீர்மானம் 1 :
ஊழல் மலிந்த திமுக ஆட்சியை அகற்றி, புதியதோர் தமிழகத்தை சிறப்புற உருவாக்க வேண்டும். அதற்காக நமது வெற்றித் தலைவர் விஜய் அவர்களை முதலமைச்சராக ஏற்றுக் கொண்டு, அவரின் தலைமை விரும்பி வருவோரை கூட்டணிக்கு அரவணைப்போம். மேலும் நமது கூட்டணி குறித்த அனைத்து இறுதி முடிவுகளையும் எடுக்க, தலைவர் அவர்களுக்கு முழு அதிகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
தீர்மானம் 2:
தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் “தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை சிறப்பு குழு” அமைக்கப்படுகிறது. இந்த தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை குழுவுக்கான பல்வேறு கடமைகள் குறித்து நமது வெற்றித் தலைவர் அவர்களே முடிவெடுக்க தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
தீர்மானம் 3 :
இருண்டு கிடக்கும் தமிழகத்தை மீட்க, நம் தமிழக மக்களைக் காக்க, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் “தேர்தல் வாக்குறுதிகள் உருவாக்கும் சிறப்பு குழு” அமைக்கப்படுகிறது. இந்த குழுவுக்கான பல்வேறு கடமைகள் குறித்து நமது வெற்றித் தலைவர் அவர்களே முடிவெடுக்க தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
தீர்மானம் 4 :
அவதூறு பரப்பும் எதிரிகளின் அறைகூவல் பொய்யுரைகளை தோலுரித்து, எதிரிகளை எதிர்கொண்டு தோற்கடிக்க, ஒரு வலிமையான பரப்புரையை முன்னெடுக்க தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.





















