OPS : ஒற்றைத் தலைமை விவகாரம்.. 4-வது நாளாக ஓபிஎஸ் ஆலோசனை
ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பாக 4ஆவது நாளாக தி.நகரில் உள்ள தனது இல்லத்தில் ஆலோசனை
ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பாக 4-ஆவது நாளாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இக்கூட்டத்தில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், மனோஜ்பாண்டியன் எம்.எல்.ஏ, முன்னாள் எம்.பி மைத்ரேயன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். வரும் ஜூன் 22ஆம் தேதி முதல் ஜூன் 25ஆம் தேதி வரை அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னையில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. இதற்கான ஆலோசனைக்கூட்டம் கடந்த 14ஆம் தேதி ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் தலைமை கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் உடன் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் ஆலோசனை மேற்கொண்டனர்.
ஒற்றைத் தலைமை பிரச்னை
இக்கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "பொதுக்குழுவுக்கு முன்பாக தற்போது நடைபெற்ற கூட்டத்தில், ஒற்றைத் தலைமை குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தெரிவித்த கருத்து சர்ச்சையை கிளப்பியது. ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆதரவாளர்கள் தனித்தனியே ஆலோனை மேற்கொண்டனர். மேலும் சென்னை, தேனி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஒற்றைத் தலைமை ஓபிஎஸ்தான் என அவரது ஆதரவாளர்கள் போஸ்டர்களை ஒட்டினர்.
’’ஒற்றைத் தலைமை தேவையில்லை’’
இந்த நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், மாவட்ட செயலாளர்களோ, கட்சி நிர்வாகிகளோ தலைமையை தேர்ந்தெடுக்க வேண்டும். கட்சிகளின் விதிகளின்படி, அடிப்படை நிர்வாகிகள்தான் பொதுச்செயலாளரை தேர்வு செய்ய வேண்டும். தொடர்ந்து, எந்த காரணத்திற்காகவும் அதிமுக இரண்டாக உடையக் கூடாது. பேச்சுவார்த்தைக்கு நான் தயார். இன்றைய சூழலில் ஒற்றைத் தலைமை என்பது தேவையில்லை.அதிமுகவில் இருந்தும், அதிமுகவின் தொண்டர்களிடம் இருந்தும் என்னை ஓரங்கட்ட முடியாது. பொதுச்செயலாளர் பதவிக்கு வேறு ஒருவரை கொண்டு வருவது ஜெயலலிதாவிற்கு செய்யும் துரோகம். ஒற்றைத் தலைமை விவகாரத்தில் யாரையும் குறிப்பிட்டு நான் நோகடிக்க விரும்பவில்லை. ஒரு அறையில் பேச வேண்டிய 'ஒற்றைத் தலைமை' விவகாரத்தை அம்பலத்திற்கு கொண்டுவந்து பேசி விவாதம் ஆக்கியிருக்கிறார்கள். மீண்டும் அதிமுக ஆட்சியை நிலைநிறுத்த பணியாற்ற வேண்டுமே தவிர, தற்போது இந்த பிரச்சனை தேவையா...? என்று கேள்வி எழுப்பி இருந்தார்.
திருவண்ணாமலையில் ஈபிஎஸ், ஆலோசனையில் ஓபிஎஸ்
திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், தற்போது ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பாக 4ஆவது நாளாக தி.நகரில் உள்ள தனது இல்லத்தில் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்