வாக்காளர் பட்டியலில் இருந்து சசிகலா பெயர் நீக்கம்
தமிழகத்தில் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், வாக்காளர் பட்டியலில் இருந்து சசிகலாவின் பெயர் நீக்கப்பட்டுள்ளது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு, அ.தி.மு.க.விலும், தமிழக அரசியலிலும் பெரும் மாற்றம் ஏற்படக் காரணமாக இருந்தவர் சசிகலா. அதன்பின்பு. சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைத்தண்டனை கடந்த சில வாரங்களுக்கு முன்பே சசிகலா விடுதலை ஆனார். அவர் சட்டசபை தேர்தலில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட தருணத்தில், அரசியலில் இருந்து ஒதுங்குவதாக சசிகலா அறிக்கை வெளியிட்டார். அவரது அறிவிப்பு அவரது ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சி அளித்தது.
இந்த நிலையில், தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான பணிகளில் தேர்தல் ஆணையமும், அதிகாரிகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், வாக்காளர் பட்டியலில் இருந்து சசிகலாவின் பெயர் நீக்கப்பட்டுள்ளது.
சசிகலா சிறைக்கு செல்லும் முன்னர் ஜெயலலிதாவுடன் போயஸ்கார்டனில் உள்ள வேதா இல்லத்தில் வசித்து வந்தார். ஜெயலலிதா மறைவிற்கு பிறகு, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு அவரது இல்லத்தை நினைவில்லமாக மாற்றியது. இதனால், வேதா இல்லத்தில் வசித்தவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்தும் நீக்கப்பட்டது. இதன்காரணமாகவே, சசிகலாவின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சசிகலாவுடன் சேர்த்து வேதா இல்லத்தில் வசித்து வந்த இளவரசியின் பெயரும் நீக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ள நிலையில், சசிகலாவின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சசிகலா கடந்த சட்டமன்ற தேர்தலில் ஜெயலலிதாவுடன் இணைந்து ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் வாக்களித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.