இளங்கோவன் வீட்டு ரெய்டில் சிக்கியது என்ன? நள்ளிரவு வரை நடந்தது இது தான்!
பரபரப்பான சூழலில் இளங்கோவன் வீட்டில் இந்த சோதனையானது இரவு 12 மணி வரை நீடித்தது. ஆனால் இதில் எந்த ஆவணமும் , பணமும் கைப்பற்றப்படவில்லை.
தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன் வீடு உள்ளிட்ட 36 இடங்களில் நடைபெற்ற சோதனை இரவு 12 மணிக்கு நிறைவு பெற்றது.
சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்த புத்திரகவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த இளங்கோவன், அதிமுக-வில் சேலம் புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளராக இருக்கிறார். இவர், தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவராகவும், சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவராகவும் இருந்து வருகிறார். அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு மிகவும் நெருக்கமான, தீவிர ஆதரவாளராக இருந்து வருகிறார். இந்நிலையில், இளங்கோவனும் (57), அவரது மகன் பிரவீன்குமார் (27) ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக சேலம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இதைத் தொடர்ந்து, இளங்கோவன், அவரது மாமானார் சாமமூர்த்தி, சகோதரி ராஜகுமாரி உள்பட உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்டோருக்கு சொந்தமாக சேலம் மாவட்டத்தில் சேலம், ஆத்தூர், புத்திரகவுண்டம்பாளையம், திருச்சி, சென்னை உள்பட சில மாவட்டங்களில் மொத்தம் 26 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் நேற்று சோதனை மேற்கொண்டனர்.
வாழப்பாடியை அடுத்த புத்திரகவுண்டம்பாளையம் கிராமத்தில் உள்ள அவரது வீட்டுக்கு லஞ்ச ஒழிப்புத்துறை திருவண்ணாமலை மாவட்ட டிஎஸ்பி., மதியழகன், இன்ஸ்பெக்டர் மைதிலி உள்ளிட்டோர் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட போலீஸார் அதிகாலை 5.30 மணிக்கே வந்தனர். ஆனால், அவரது வீடு ‘பயோமெட்ரிக் லாக்கிங்’ முறையில் பூட்டப்பட்டிருந்தால், வீட்டினுள் செல்ல முடியாமல் போலீஸார் காத்திருந்தனர். போலீஸார் ரெய்டுக்கு வந்த தகவலை அறிந்த அதிமுக எம்எல்ஏ.,-க்கள் ஜெயசங்கரன், நல்லதம்பி, சித்ரா, பாலசுப்ரமணியன், முன்னாள் எம்பி., பன்னீர் செல்வம், முன்னாள் எம்எல்ஏ., வெங்கடாசலம், முன்னாள் அமைச்சர் உதயகுமார் உள்பட அதிமுக-வினர் 100-க்கும் மேற்பட்டோர் இளங்கோவன் வீட்டின் அருகே திரண்டு காத்திருந்தனர்.
சென்னையில் இருந்த இளங்கோவனுக்கு தகவல் தெரிவித்து, அவர் நண்பகல் 12 மணிக்கு மேல் புத்திரகவுண்டம்பாளையம் வந்தார். அவர் வீட்டுக்கு வந்தபோது, அதிமுக-வினர் போலீஸார் மற்றும் திமுக அரசைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பியபடி, இளங்கோவன் வீட்டு போர்டிகோவினுள் கூட்டமாக நுழைந்தனர். லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர், நண்பகல் 12.30 மணிக்கு தான், லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் சோதனையைத் தொடங்கினர்.
இளங்கோவன் 2013 மற்றும் 2018-ம் ஆண்டுகளில் சேலம் மத்திய கூட்டுறவு வங்கி, தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கி ஆகியவற்றின் தலைவராக பதவியில் இருந்தபோது, 2013 மற்றும் 2020-ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் மொத்தம் ரூ.3 கோடியே 78 லட்சத்து 31 ஆயிரத்து 755- மதிப்புக்கு சொத்துகளை சேர்த்து. வருமானத்துக்கு அதிகமாக 131 சதவீதம் சொத்துகளை சொத்து சேர்த்துள்ளதாக, இளங்கோவன் மற்றும் அவரது மகன் பிரவீன்குமார் ஆகியோர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் பரபரப்பான சூழலில் இளங்கோவன் வீட்டில் இந்த சோதனையானது இரவு 12 மணி வரை நீடித்தது. இந்தச் சோதனையில் 21.2 கிலோ தங்கம், 282 கிலோ வெள்ளி, ரூ.29.77 லட்சம் பணம், 10 சொகுசு கார்கள், 2 சொகுசு பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டது.
சோதனைக்கு மட்டுமே அனுமதி உள்ள நிலையில் அதிகார வரம்பை மீறி லஞ்ச ஒழிப்புத்துறையினர் இளங்கோவனிடம் விசாரணை நடத்தியதாகவும், சட்ட ஆலோசனைக்காக வழக்குரைஞர் உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டதாகவும் அதிமுக சட்ட ஆலோசனைக்குழு உறுப்பினர் இன்பதுரை குற்றம்சாட்டினார். தமிழகத்தில் தொடர்ந்து அதிமுகவினர் வீடுகளில் நடத்தப்படும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனையை மிகவும் கண்டிக்கத்தக்கது என்று அதிமுக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டார். 12 மணி நேர சோதனையில் தனது வீட்டில் எதுவும் எடுத்துச் செல்லப்பட வில்லை என்று இளங்கோவன் செய்தியாளர்களிடையே தெரிவித்தார்.