"கல்லை வீசினேன்.. தீ வைத்து கொளுத்தினோம்.."ஏன் என்ற காரணத்தை உடைத்த திலகபாமா!
மதுக்கடைகளுக்கு எதிராக போராடச் சென்ற பெண்களை ஆபாசமாக திட்டியதால் கல்லை வீசி, மதுபாட்டில்களை தீ வைத்து கொளுத்தினோம் என்று பாமக பொருளாளர் திலகபாமா பேசியுள்ளார்.

பாமக பொருளாளர் திலகபாமா இப்படிக்கு திலகபாமா என்ற நூலை எழுதி இன்று வெளியிட்டார்.
இந்த நூல் வெளியீட்டு விழாவில் அவர் திலகபாமா பேசியதாவது,
ராமதாஸ், அன்புமணி:
திலகபாமா அரசியல், இலக்கியம் என இரண்டும் கலந்து நிற்பவள். எனக்கு இரண்டும் வேறு, வேறு அல்ல. அய்யா பெயரையும், சின்னய்யா பெயரையும் புத்தகத்தில் போட்டிருக்கிறீர்கள் என கேட்கிறார்கள். இன்றைக்கு மாற்றுக் கருத்துகள் இருக்கலாம்.
சிவகாசியில் இருந்து ஒருவர் என்னைக் கண்டெடுத்தார் என்றால் அது மருத்துவர் அய்யா தான், அதனை மறக்க முடியாது. கருத்து வேறுபாடுகள் வரலாம். ஆனால் மனிதர்கள் மேலான வெறுப்பாக ஒருபோதும் மாற்றிக்கொண்டது இல்லை. அது இலக்கியம் எனக்கு தந்த பண்பு.
சாதி:
பட்டிவீரன் பட்டியில் இருந்து நான் வந்த போது எந்த சாதி எனக்கு சொல்லித் தரப்படவில்லை. அங்கிருந்து வெளியே வந்து கிராமங்கள் தோறும் பயணிக்கும் போது சாதி என்ற ஒன்று உள்ளது. அதனை, சாதியில் இருந்து எப்படி வெளியே வர வேண்டும் என கற்றுக்கொண்டேன்.
தென் மாவட்டங்களில் ஆண்ட சமூகம் எனக்கூறுபவர்கள் கூட ஒரு இடத்தில் அன்றாடம் காட்சியாக உட்கார்ந்திருப்பதை பார்க்க முடிகிறது. அப்படியானால் சமூக அமைப்புகள், சங்கங்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றன? அரசியல் இதை எப்படி சரி செய்கிறது என பல கேள்விகளை எனக்குள் வைத்துக் கொண்டே, சிலவற்றை மட்டும் எழுதி பார்த்திருக்கிறேன்.
எதுவும் செய்யாத திமுக:
10 ஆண்டுகளுக்குப் பிறகு 2021யில் திமுக ஆட்சிக்கு வந்த போது, மக்களுக்கு ஏதாவது நல்லது செய்யமாட்டார்களா?, அவர்களையும் பாராட்டிவிட மாட்டோமா? என நினைத்தேன். ஆனால் 5 ஆண்டுகளாக எதுவும் செய்யாமல் அப்படியே முடித்துவிட்டார்கள்.
“இலவசங்கள் எல்லாம் ஏமாற்று வேலை” என்ற கட்டுரையை எழுதிய பிறகு தான், இலவசம் என்ற வார்த்தையை விலையில்லாத என்ற வார்த்தையை அரசு மாற்றியது. அப்படி என்றால் எனது ஒரு சொல் வினையாற்றியிருக்கிறது.
கல்லை வீசி, தீ வைத்து கொளுத்தினோம்:
இன்று ஆசிரியர் பணிக்கே லட்சக்கணக்கில் பணம் கொடுத்து தான் போக வேண்டியுள்ளது. அப்புறம் எப்படி அந்த ஆசிரியர் என் பிள்ளைகளுக்கு உண்மையை சொல்லிக் கொடுப்பார்? மதுக்கடையை மூட ஆணை வாங்கி வைத்த போதும் அதனை மீறி கடையை திறந்தார்கள்.
அதை எதிர்த்து போராட சென்ற போது பெண்களை அசிங்கமாக திட்டினால் ஓடிப்போய்விடுவார்கள் எனக்கூறிய போது, எனக்கு கோபம் வந்தது, கல்லை எடுத்து வீசினேன். கடையில் இருந்த மது பாட்டில்களை தீயிட்டு கொளுத்திவிட்டு தான் வந்தோம். அன்று என்னுடன் கைதான பெண்கள் அனைவருமே அரசியல், போராட்டம் என்றால் என்னவென்றே தெரியாத பெண்கள், கைக்குழந்தைகளை வைத்திருந்த பெண்கள்.
இன்று இவர்களை கைது செய்தால் தான் அரசியலுக்கு வரமாட்டார்கள் என கைது செய்யப்பட்டார்கள். இந்த சமூகத்தை மாற்ற வேண்டிய முதல் நபராக இருக்க வேண்டும் என்ற ஆசை எப்போதும் இருக்கிறது. ஒவ்வொரு இடத்திலும் எனது சொற்களை விதைத்துக் கொண்டே இருக்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.























