கரூரில் பன்னீர்செல்வம் அணி உற்சாகம் - பழனிசாமி அணி கலக்கம்..!
சில மாவட்டங்களில் இருந்து பொறுப்பிலுள்ள அதிமுகவினர் கூட பன்னீர் பக்கம் தங்களின் பாசப்பார்வையை காட்ட தொடங்கியுள்ளனர்.
அதிமுகவில் நீடித்து வரும் உள்கட்சி பிரச்சனையில் எடப்பாடி பழனிசாமி ஒரு அணியாகவும், ஓ.பன்னீர்செல்வம் ஒரு அணியாகவும் அணிவகுத்து நிற்கின்றனர். அதில், கட்சியின் பொதுக்குழுவை அதிரடியாக கூட்டி, பழனிசாமி கட்சியின் தற்காலிக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். தேர்வான பழனிசாமி, என்னை பழைய பழனிச்சாமி என்று நினைத்து விடாதீர்கள் என்று வசனம் பேசி, திமுக தலைவர் ஸ்டாலினை நேரடியாகும், பன்னீர் செல்வத்தை மறைமுகமாகவும் அட்டாக் செய்தார். இந்நிலையில் பொதுக்குழு தொடர்பான வழக்கில் பழனிசாமி கூட்டிய பொதுக்குழு செல்லாது என்றும், அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும் செல்லாது என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் தளர்ந்திருந்த பன்னீர்செல்வத்தின் கை சற்று ஓங்க, அவரின் ஆதரவாளர்கள் உற்சாகம் ஆனார்கள். அதே சமயம் பழனிசாமி அணியை சேர்ந்தவர்கள் சற்று கலக்கம் அடைந்தனர்.
இந்நிலையில் ஒன்றுபட்ட அதிமுகவை உருவாக்கிட பழனிசாமியும், அவருடன் இருப்பவர்களும் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள், வெளியேறியவர்கள் என்று அனைவரும் ஒன்றிணைைய வேண்டும் என்று பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்தார். ஆனால், பழனிசாமி தரப்போ பன்னீர்செல்வத்தின் அழைப்பை ஏற்காததோடு, ஒற்றை தலைமை தான் என்பதில் உறுதியாக இருப்பதாகவும், நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்ல உள்ளதாகவும் தெரிவித்தனர். தமிழகத்தில் பெரும்பான்மையான மாவட்டங்கள் எங்கள் கையில் என்று பழனிசாமி தரப்பினர் மகிழ்ச்சி கடலில் நீந்தி வந்த நிலையில், இப்போது ஒவ்வொரு மாவட்டத்திலும் இருந்தும் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள், தானாக வெளியேறியவர்கள், அதிருப்தியில் இருப்பவர்கள் போன்றவர்களுக்கு நேரில் அழைப்பு விடுத்து, அடுத்த கட்ட அரசியல் செய்ய பன்னீர் தரப்பு வேலையை தொடங்கி விட்டனர். அதன் காரணமாக சில மாவட்டங்களில் இருந்து பொறுப்பிலுள்ள அதிமுகவினர் கூட பன்னீர் பக்கம் தங்களின் பாசப்பார்வையை காட்ட தொடங்கியுள்ளனர்.
அவ்வகையில் கரூர் மாவட்டம் பழனிசாமியின் எக்கு கோட்டை என்றும், இங்கு ஒரு தொண்டர் கூட பன்னீர்செல்வம் பக்கம் இல்லை என்றும் அதிமுகவினர் கூறிவந்த நிலையில், அரவக்குறிச்சி தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ கந்தசாமி தலைமையில் சிலர் பன்னீர்செல்வத்தை ஆதரித்து கரூர் நகரில் ஆங்காங்கே திடீரென்று போஸ்டர் ஒட்டியுள்ளனர். இதற்கு அடுத்தபடியாக அதிமுக முன்னாள் எம்எல்ஏ காமராஜ் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் கிருஷ்ணராயபுரம் தொகுதியில் மீண்டும் களம் இறங்க வாய்ப்பு கேட்டிருந்தார். ஆனால் அந்த தொகுதியில் தனுஷ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதனால் அதிருப்தியில் இருந்த காமராஜ் திமுகவில் தன்னை அதிரடியாக இணைத்துக்கொண்டு, தேர்தல் பணி மேற்கொண்டார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் தேனி சென்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்தை சந்தித்து தன்னை மீண்டும் அதிமுகவில் இணைத்துக் கொண்டார். இப்படி கரூர் மாவட்டத்தில் பழனிசாமியின் எக்கு கோட்டை என்று அதிமுகவினரால் வர்ணிக்கப்பட்ட அதிமுக கோட்டையில் சிறிய அளவிலான ஓட்டை விழத் தொடங்கி இருப்பது அதிமுகவினரிடையே பரபரப்பான பேசும் பொருளாகியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்