வைத்திலிங்கமும் திமுகவில்? ஓபிஎஸ்-ஐ விட்டு விலகும் முக்கிய தலைவர்! அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு
அரசியல் தன்னை நிலைநாட்டிக்கொள்ள தீவிர திராவிட சிந்தனை கொண்ட திமுகவுடன் வைத்திலிங்கம் சேர வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

மனோஜ் பாண்டியனை தொடர்ந்து வைத்திலிங்கமும் திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு இபிஎஸ் அணி, ஓபிஎஸ் அணி என இரண்டு அணிகள் உருவானது. இருதரப்புக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வந்த நிலையில், அது உச்சநீதிமன்றம் வரை சென்று இறுதியாக கட்சி எடப்பாடி பழனிசாமி வசமானது. இது முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனைத்தொடர்ந்து, அதிமுக உரிமை மீட்பு குழுவை உருவாக்கிய ஓ.பன்னீர்செல்வத்துடன் வைத்திலிங்கம், வெல்லமண்டி நடராஜன், கு.ப.கிருஷ்ணன், மனோஜ் பாண்டியன், பெங்களூர் புகழேந்தி உள்ளிட்ட சிலர் கைகோர்த்து பயணித்தனர்.
இதில் இருந்த அனைவரும் (வைத்திலிங்கம் தவிர) ஓபிஎஸ் இடம் விலகினர். அதிமுகவை ஒன்றிணைக்க தான் பாடுவதாக தன்னை காட்டிக்கொண்ட ஓ.பன்னீர்செல்வம் என்டிஏ கூட்டணியில் விலகி, திமுகவுக்கு ஆதரவாக செயல்படுவதே இவர்களின் விலகலுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியனின் மகனான மனோஜ் பாண்டியன் இன்று காலை திமுகவில் இணைந்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை புகழ்ந்து பேசிய மனோஜ் பாண்டியன், இன்றைய காலக்கட்டத்தில் திராவிட கொள்கைகளை முழுமையாக பாதுகாக்கிற ஒரு தலைவராகவும், தமிழக உரிமைகளுக்காக போராடுகிற ஒரு தலைவராகவும், தமிழகத்தின் உரிமைகளை எங்கும் அடகு வைக்காத தலைவராகவும், எந்த சூழலிலும் தான் எடுக்கும் முயற்சிகளை எவ்வளவு சோதனைகள் வந்தாலும் அதை தாங்கி சிறப்பாக முடிக்ககூடிய ஒரு தலைவராக முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளார் என்றும் இதன் காரணமாகவே திமுகவின் தான் இணைந்ததாகவும் கூறினார்.

ஆனால், பசும்பொன்னில் சசிகலாவை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்ததே மனோஜ் பாண்டியன் முடிவுக்கு காரணம் என்றும் கூறப்படுகிறது. இதனிடையே, ஆலங்குளம் தொகுதி எம்எல்ஏ பதவியையும் மனோஜ் பாண்டியன் ராஜினாமா செய்தார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் அப்பாவுவிடம் வழங்கினார்.
ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏ மனோஜ் பாண்டியன் விலகியதை தொடர்ந்து, ஓபிஎஸ் அணியின் நன்கு தெரிந்த முகமாக இருப்பவர் வைத்திலிங்கம் மட்டுமே. இவரும் அதிருப்தியில் இருப்பதாகவே அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. என்டிஏ கூட்டணியில் இருந்து விலகியது, தினகரன், சசிகலாவுடன் சந்திப்பு என ஓபிஎஸ் இருப்பதால், இனி அவருடன் இருப்பது எதிர்காலத்தில் தம்மை எங்கு கொண்டு போய் சேர்க்கும் என்று வைத்திலிங்கம் எண்ணுவதாக சொல்லப்படுகிறது.
அதனால், அரசியல் தன்னை நிலைநாட்டிக்கொள்ள தீவிர திராவிட சிந்தனை கொண்ட திமுகவுடன் வைத்திலிங்கம் சேர வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. மனோஜ் பாண்டியன் போல இவரும் விரைவில் சேருவதற்கான வாய்ப்புள்ளதாகவும் கூறுகின்றனர்.
மேலும், ஒரத்தநாடில் திமுகவின் ராமச்சந்திரன் 2016 சட்டமன்ற தேர்தலில் வைத்திலிங்கத்தை தோற்கடித்தார். அதன்பிறகு, அந்த தொகுதியில் வைத்திலிங்கம் வென்றார். தற்போது அங்கு ராமச்சந்திரனின் மவுசு குறைந்துள்ளதால் திமுகவில் இணைந்து, மீண்டும் அந்த தொகுதியை கைப்பற்ற முயற்சியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.





















