MP Elections 2024: பாஜகவுடன் இனி ஒட்டும் இல்லை உறவும் இல்லை - அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டம்
மக்களவைத் தேர்தலையொட்டி இன்று அதிமுக கூட்டணி கட்சிகளுடனான தொகுதிப் பங்கீடு தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்தியது.
மக்களவைத் தேர்தலையொட்டி இன்று அதிமுக கூட்டணி கட்சிகளுடனான தொகுதிப் பங்கீடு தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்தியது. அதன் பின்னர் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், “ பாஜகவுடன் இனி ஒட்டும் இல்லை உறவும் இல்லை. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தன்னை முன்னிலைப்படுத்தி வருகின்றார். ஒட்டுமொத்த தமிழ்நாடு மக்களையும் ஏமாற்றி வருகின்றார். பாஜக என்பது கழற்றிவிடப்பட்ட பெட்டி, அதனை மீண்டும் இணைத்துக்கொள்ள மாட்டோம். அண்ணே! அண்ணே! என்று அண்ணாமலைபோல் நாங்கள் கூழைக்கும்புடு போடமாட்டோம். வரும் மக்களவைத் தேர்தலில் அதிமுகவின் கூட்டணி தொடர்பாக விரைவில் அறிவிப்போம். தேர்தல் கூட்டணி தொடர்பாக இப்போது பேசுவது சரியானதாக இருக்காது. தேர்தல் நெருங்கும்போது கூட்டணி குறித்து வெளிப்படையாக தெரிவிப்போம்.
அண்ணாமலையைப் பொறுத்தவரை அவர் பாஜகவை முன்னிலைப் படுத்தவில்லை, தன்னை முன்னிலைப் படுத்திவருகின்றார். கூழைக்கும்புடு போட்டு தமிழ் நாடு முழுவதும் உள்ள ஒட்டுமொத்த மக்களையும் ஏமாற்றி, இங்கே காலுன்றலாம் என நினைத்தால், அது விழலுக்கு இரைத்த நீர்போல. அது வீணாகத்தான் முடியும். அதனால் எந்த பயனும் இல்லை. கத்தறவங்க கத்தீட்டு இருக்கட்டும் அதுகுறித்து எங்களுக்கு கவலை இல்லை. எங்களிடம் எப்போது கேட்டாலும் சரி, எங்கு கேட்டாலும் சரி, தூக்கத்தில் இருந்து எழுப்பிக் கேட்டாலும் சரி, பாஜகவுடன் ஒட்டும் இல்லை உறவும் இல்லை. அதிமுக தலைவர்கள் டெல்லிக்குச் சென்று பாஜக தலைமையின் காலில் விழுந்து அண்ணாமலையை நீக்குங்கள் என கூறியதாக செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு மேற்கண்டவாறு பதில் அளித்திருந்தார்.
இதையடுத்து வரும் மக்களவைத் தேர்தலில் அதிமுக தனது பிரச்சாரத்தில் மத்திய அரசை விமர்சனம் செய்து பிரச்சாரம் மேற்கொள்ளுமா அல்லது மாநில அரசை எதிர்த்து பிரச்சாரம் மேற்கொள்ளுமா என்ற கேள்விக்கு, யார் தவறு செய்திருந்தாலும் சரி, அதனைச் சுட்டிக்காட்டி மக்களின் உரிமைகளை பெற்றுத் தரும் இயக்கமாக அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். இது அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தின் கொள்கையும் கூட. மாநிலத்தின் நலனை புறக்கணிப்பவர்களையும் மாநிலத்திற்கு மத்தியில் இருந்து கொண்டு துரோகம் செய்வபவர்களையும் அடையாளம் காட்டுவோம். கடந்த 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த பாஜக மாநில நலன்களை புறக்கணித்ததையெல்லாம் கண்டிப்பாக கூறுவோம்.
முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் குறித்து பேசுகையில், “ அதிமுகவின் தனித்தன்மையை எடப்பாடி பழனிசாமி நிலைநிறுத்தியுள்ளார். இது (ஓ.பன்னீர் செல்வம்) கொத்தடிமையா இருக்கு. இது போல எல்லாரும் இருக்க முடியுமா? இந்த கொத்தடிமையின் பேச்சு மூலம் தமிழ்நாட்டிற்கு தெரிவித்துவிட்டார். அவர் பாஜகவின் கொத்தடிமை என்பது தெளிவாகியுள்ளது அதுதான் உண்மையும் கூட “ என பதில் அளித்தார்.
மக்களவைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் நாடு முழுவதும் உள்ள கட்சிகள் மிகவும் மும்முரமாக செயல்பட்டு வருகின்றனர்.