நான்தான் அடுத்த முதல்வர் என்பதில் சந்தேகமும் வேண்டாம் - ரங்கசாமி பேச்சு
புதுவையின் முதல்வராக நான்தான் வருவேன் என்றும், அதில் எந்த சந்தேகமும் வேண்டாம் என்றும் முன்னாள் முதல்வர் ரங்கசாமி பரப்புரையில் பேசினார்.
புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க., பா.ஜ.க. ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து சட்டசபை தேர்தலை சந்திக்கிறது. இந்த நிலையில், காரைக்கால் தொகுதியில் இன்று என்.ஆர்.காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதல்வருமான ரங்கசாமி பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது, அவர் பேசும்போது,
''கடந்த 5 ஆண்டு கால காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி ஆட்சியில், புதுச்சேரி 15 ஆண்டு காலம் பின்னோக்கிச் சென்றுவிட்டது. 5 ஆண்டுகளில் 10 பேருக்கு கூட வேலை வாய்ப்புகளை வழங்கவில்லை. ஆனால், எத்தனை பேர் வேலை இழந்துள்ளனர் என்றுதான் கணக்கெடுக்க வேண்டியிருக்கிறது. பள்ளி மாணவர்களுக்கான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை. முதியோர் உதவித்தொகை உயர்த்தப்படவில்லை. எந்தவொரு பிரிவு மக்களுக்கான நலத்திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை.
எதிர்க்கட்சிகள் மீதும், ஆளுநர் மீதும் பழி போட்டுக்கொண்டு, போராட்டங்கள் நடத்திக்கொண்டே 5 ஆண்டுகளைக் கடத்தி விட்டனர். ஆளுங்கட்சி எம்.எல்.ஏக்களே அரசை எதிர்க்கும் ஆட்சியாகத்தான் இந்த ஆட்சி இருந்தது. புதுச்சேரியில் துணைநிலை ஆளுநருக்குதான் அதிகாரம் என்பது தெரிந்திருந்தும் ஆளுநர் மீது குறை கூறினர். மக்களைப் பற்றி அவர்கள் சிந்திக்கவே இல்லை.
புதுச்சேரியில் அனைத்து மக்களின் நலன்களும் பாதுகாக்கப்பட வேண்டும். அதற்கு இந்தத் தேர்தலில் வெற்றி பெற்று புதிய நல்லாட்சியைக் கொண்டுவர வேண்டும். அதற்கு என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க., அ.தி.மு.க., பா.ம.க. உள்ளிட்ட கூட்டணியை ஆதரிக்க வேண்டும். முதல்வராக இவர் வருவாரா என்று சிலர் கேட்கலாம். கூட்டணியில் அதிக தொகுதிகளைப் பெற்று போட்டியிடுவது என்.ஆர்.காங்கிரஸ்தான். அதனால் நிச்சயமாக முதல்வராக நான்தான் இருப்பேன். அதில் சந்தேகமே வேண்டாம்''.
இவ்வாறு அவர் பேசினார்.