மேலும் அறிய
மதுரை மாநகராட்சி சொத்து வரியில் 200 கோடி இழப்பு ; சிபிஐ விசாரணைக்கு மாறுமா? பரபரப்பு தகவல் !
மதுரை மாநகராட்சியில் நடைபெற்ற மோசடி தொடர்பாக, சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட்டது தொடர்பாகவும், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் பதில் மனுவாக தாக்கல் செய்ய மதுரை அமர்வு உத்தரவு.

மாநகராட்சி மதுரை மாநகர்
Source : whats app
நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது - அரசுத்தரப்பு.
மதுரை மாநகராட்சியில் மோசடி
100 வார்டுகளை கொண்ட மதுரை மாநகராட்சியில் அதிகளவு மக்கள் தொகை கொண்டுள்ளது. இந்த சூழலில் மாநாகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் கட்டங்களுக்கு வரிகுறைப்பு செய்து மோசடி நடைபெற்றது, பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் 5 மண்டல தலைவர்கள், நிலைக்குழு தலைவர்கள் என 7 நபர்கள் ராஜினாமா செய்துள்ளனர். பில்கலெக்டர்கள் முதல் மேல் அதிகாரிகள் வரை 8 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சூழலில் மாநகராட்சியில் நடைபெற்ற முறைகேட்டில் ”பாஸ்வேர்டை மேலதிகாரிகள் திருட்டுத்தனமாக பயன்படுத்தினார்கள்” - என பணியிடை நீக்கம் செய்யப்பட்ட பில் கலெக்டர்களின் குற்றஞ்சாட்டியது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் மதுரை மாநகராட்சி சொத்துவரி முறைகேடு தொடர்பான வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றக் கோரிய பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.
பொதுநல வழக்கு
மதுரை 83 வது வார்டு அதிமுக கவுன்சிலர் ரவி உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "சமீபத்தில் மதுரை மேயர் தலைமையில் பெரிய அளவிலான சொத்து வரி முறைகேடு நடைபெற்றது தெரியவந்தது. இதனால் பலரும் பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களுக்கு முறையான வரியை செலுத்தாதது தெரியவந்தது. இதனால் மாநகராட்சிக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக மதுரை மாநகராட்சி ஆணையரின் கவனத்திற்கு கொண்டு சென்று விசாரணை குழு அமைக்கப்பட்டது. மாநகராட்சி ஆணையர் மதுரை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்ததன் அடிப்படையில் வழக்கு பதிவும் செய்யப்பட்டது.
200 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது
2022 முதல் 2024 ஆம் ஆண்டு வரை மேயர் மற்றும் மண்டல குழு தலைவர்களுக்கு தெரிந்தே இந்த முறைகேடு நடைபெற்றுள்ளது. கட்டடத்தின் அளவை குறைவாக காட்டுவது, வணிக கட்டடங்களை, பகுதி வணிக கட்டடங்களாக காட்டுவது, கட்டடங்களில் சில மாற்றங்களை செய்வது ஆகியவற்றின் மூலம் வரிக்குறைப்பு செய்ததன் மூலமாக மதுரை மாநகராட்சிக்கு 200 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதில் சம்பந்தப்பட்ட கவுன்சிலர்களும், மாநகராட்சி அலுவலர்களும் பயன் பெற்றுள்ளனர். வழக்கை விசாரிக்கும் காவல்துறையினரும், இந்த முறைகேட்டில் ஈடுபட்டவர்களும் ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் என்பதால் இந்த வழக்கை மதுரை மாநகர காவல் துறையினர் விசாரித்தால் உண்மை வெளிவராது. ஆகவே மதுரை மாநகராட்சி சொத்துவரி முறைகேடு தொடர்பான வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
நடவடிக்கைகள் குறித்தும் பதில் மனுவாக தாக்கல் செய்ய உத்தரவு
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ். எம். சுப்பிரமணியம், மரிய கிளாட் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், "நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது" என தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து நீதிபதிகள், "சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட்டது தொடர்பாகவும், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் பதில் மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement





















