MK Stalin: "போராட்டம்.. சிறை.. தியாகம்" - இதுதான் திமுக.. முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி!
கண்கூடாக தெரியும் இந்த உண்மைகளை சிலர் மறைக்க நினைத்து திராவிடம் என்ன செய்தது என கேட்கிறார்கள். நாம் திராவிட மாடல் என சொல்ல சொல்ல எதிரில் இருப்பவர்களுக்கு எரிகிறது என முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

வாசிப்பும், வளர்ச்சியும் இருப்பதால் தான் கலவரத் தீயை தமிழ்நாட்டில் பற்ற வைக்க முடியவில்லை என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், “வெள்ளி விழா, பொன் விழா, பவள விழா காலங்களில் தொடர்ந்து ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் திராவிட முன்னேற்றக் கழகம் நூற்றாண்டு விழா காலத்திலும் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும். தமிழ்நாட்டை முன்னேற்றப் பாதையில் அழைத்து செல்லும். அதற்கான வலிமை கோடிக்கணக்கான உடன்பிறப்புகளுக்கு இருக்கிறது. உழைப்பு மட்டுமல்ல உயிரை கொடுத்தவர்களாலும் உருவாக்கப்பட்டது திமுக. அந்த தியாக வரலாற்றை இளைய தலைமுறையினர் நிச்சயம் அறிய வேண்டும்.
திமுக என்றால் என்ன என வரலாற்றை திரும்பி பார்த்தால் போராட்டம்.. சிறை.. தியாகம் என்று தான் இருக்கும். நம் மண், மொழி, மானம் காக்க திமுக எதிர்கொண்ட வலிகள் ரொம்ப அதிகம். அத்தனையும் கடந்து 6வது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்க காரணம் தொண்டர்கள் தான். அரசியலில் பலரும் சொகுசு எதிர்பார்த்து வருவார்கள். சிறிய எஃப்.ஐ.ஆர். வழக்குகளுக்கு கூட கட்சி விட்டு கட்சி தாவுவார்கள். ஆனால் கொடூரமான அடக்குமுறை, வன்மம், அவதூறை எதிர்கொண்டு திமுகவை லட்சியமாக கொண்டு தொண்டர்கள் வாழ்ந்து வருகிறார்கள்.
வரலாற்றில் எதிர்ப்பாளர்களை எல்லாம் குப்பையில் தூக்கியெறிந்து கோட்டையை பிடித்தது திமுக. காலங்கள் மாறுது, எதிரிகள் மாறுகிறார்கள். ஆனால் திமுக மட்டும் நிலைத்து நிற்கிறது. அரசியல் எதிரிகளை ஒற்றைக் கையில் எதிர்கொள்கிறோம். நாம் சூரியனைப் போல நிரந்தரமான ஒளியை வழங்குகிறோம். நம்முடைய அறிவுப் பாரம்பரியம் தொடரும் வரை வந்த வழி மறந்த அடிமைகள், அறிவற்ற அரைகுறைகள் என யாரும் இந்த ஆலமரத்தை அசைத்துப் பார்க்க முடியவில்லை. வாசிப்பும், வளர்ச்சியும் இருப்பதால் தான் கலவரத் தீயை தமிழ்நாட்டில் பற்ற வைக்க முடியவில்லை.
நீங்கள் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் தினமும் அரைமணி நேரமாவது புத்தகம் வாசிக்க வேண்டும். மற்ற மாநிலங்களை விட நாம் 20 ஆண்டுகள் முன்னோக்கி இருக்கிறோம். கண்கூடாக தெரியும் இந்த உண்மைகளை சிலர் மறைக்க நினைத்து திராவிடம் என்ன செய்தது என கேட்கிறார்கள். நாம் திராவிட மாடல் என சொல்ல சொல்ல எதிரில் இருப்பவர்களுக்கு எரிகிறது. அதனை திரும்ப திரும்ப சொல்வோம். நூற்றாண்டுகளுக்கு முன் நம்முடைய தமிழ்நாடு எப்படி இருந்தது, இன்றைக்கு எப்படி இருக்கிறது என்பதை சிந்திக்க வேண்டும்" என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் உள்ளிட்ட பலரும் கலந்துக் கொண்டனர்.





















