Jana Nayagan: சிக்கலில் சிக்கிய ஜனநாயகன்.. விஜய்க்கு பலமா? பலவீனமா? ஓர் அலசல்
ஜனநாயகன் படம் திட்டமிட்டபடி வெளியாகாமல் சென்சாரில் சிக்கியிருப்பது விஜய்க்கு சாதகமா? பாதகமா? என்பதை கீழே விரிவாக காணலாம்.

தமிழக வெற்றிக் கழகத்தைத் தொடங்கிய பிறகு திரைப்படங்களில் நடிப்பதில் இருந்து நிரந்தரமாக விலகுவதாக விஜய் அறிவித்தார். இது அவரது ரசிகர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியது. இந்த சூழலில், அவரது கடைசி படமான ஜனநாயகன் உருவாகி ரிலீசிற்காக காத்திருக்கிறது.
சென்சாரில் சிக்கிய ஜனநாயகன்:
ஜனநாயகன் படம் பொங்கல் வெளியீடாக ஜனவரி 9ம் தேதி வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சென்சார் விவகாரம் காரணமாக படம் திட்டமிட்டபடி வெளியாகவில்லை. சென்சார் சான்றிதழுக்காக படத் தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகிய நிலையில், காலையில் நீதிபதி பிடி ஆஷா பட நிறுவனத்திற்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கிய நிலையில், உடனடியாக மேல்முறையீடு செய்த மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்திற்கு சாதகமாக மாலையில் தீர்ப்பு வந்தது. இதனால், ஜனநாயகன் படம் வெளியாவதில் சிக்கல் எழுந்துள்ளது.
விஜய்க்கு சாதகமா? பாதகமா?
கரூர் சம்பவத்திற்கு பிறகு மீண்டும் உத்வேகமாக அரசியல் களத்திற்கு வந்த விஜய் தவெக-வின் அரசியல் பணிகளை தீவிரப்படுத்தி வருகிறார். இந்த நிலையில், ஜனநாயகனின் ரிலீஸ் விவகாரத்தால் எழுந்துள்ள சிக்கல் விஜய் மீதான ஆதரவை மக்கள் மத்தியில் மேலும் அதிகரித்துள்ளதாகவே தகவல் வெளியாகி வருகிறது.
ஜனநாயகன் படம் திட்டமிட்டபடி வெளியாகாமல் இருப்பதற்கு, பின்னணியில் பாஜக இருப்பதாக தொடர்ந்து பல தரப்பினரும் குற்றம் சாட்டி வருகின்றனர். இதற்கு முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் விளக்கம் அளித்திருந்தாலும், மத்திய திரைப்பட தணிக்கை குழு உடனடியாக மேல்முறையீடு செய்ததற்கு மத்திய பாஜக-வே காரணம் என்று தவெக ஆதரவாளர்களும், விஜய் ரசிகர்களும் குற்றம் சாட்டி வருகின்றனர்.
பராசக்தி - ஜனநாயகன்:
அதேசமயம், இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தை மையமாக கொண்டு உருவாகியுள்ள பராசக்தி படமும் பல்வேறு திருத்தங்களுடன் தணிக்கைச் சான்றிதழ் பெற்று நாளை திட்டமிட்டபடி வெளியாகிறது. டாவ்ன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள ரெட்ஜெயண்ட் மூவீஸ் விநியோகித்துள்ள இந்த பராசக்தி படம் ஜனநாயகனுக்கு போட்டியாக நாளை வெளியாகிறது. பராசக்தி - ஜனநாயகன் போட்டியை திமுக - தவெக போட்டியாகவே ரசிகர்களும், இணையவாசிகளும் ஒப்பிட்டனர்.
இந்த நிலையில், திமுக-வின் கொள்கையான இந்தி திணிப்பு எதிர்ப்பை மையமாக கொண்ட பராசக்தி படம் வெளியாகும் நிலையில், ஜனநாயகன் மட்டும் வெளியாகாததும் விஜய் மீது ஒரு வித அனுதாபத்தை மக்களுக்கு ஏற்படுத்தியுள்ளது. மேலும், தேர்தல் தேதிக்கு முன்பாக ஜனநாயகன் வெளியாகாவிட்டால் இந்த படத்தில் இடம்பெறும் அரசியல் வசனங்கள் பலவும் நீக்கப்படும் சூழலும் உண்டாகியுள்ளது.
தமிழ்நாட்டில் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட நடிகர் விஜய். தன்னுடைய ரசிக பலத்தை மூலதனமாக கொண்டு அரசியல் களத்தில் அடியெடுத்து வைத்தவர் விஜய். தவெக-வை அவர் தொடங்கி 2 ஆண்டுகளாக இருந்தாலும், அவர் கடந்த மே மாதத்திற்கு பிறகு முதலே தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.
பஞ்சாயத்தில் சிக்கிய பரப்புரை படம்:
திமுக-வை அரசியல் எதிரி என்றும், பாஜக-வை கொள்கை எதிரி என்றும் குறிப்பிட்டு தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணத்தை அவர் தொடங்கிய நிலையில், கரூர் சம்பவம் தவெக-வையும், விஜய்யையும் முடக்கியது. கரூரில் 41 பேர் உயிரிழந்த விவகாரத்தை விஜய்யும், தவெக-வையும் கையாண்ட விதம் விமர்சனத்தை ஆளாக்கியது.
இந்த விவகாரத்திற்கு பிறகு மீண்டும் தீவிரமாக செயல்படத் தொடங்கிய விஜய், ஜனநாயகனை தன்னுடைய பரப்புரை படமாக மாற்ற முடிவு செய்தார். ஆனால், சென்சார் விவகாரத்தில் சிக்கி அரசியல் வட்டாரத்தில் இன்று பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.





















