இந்திய அணியின் முன்னாள் கேப்டன் முதுகுளத்தூரில் போட்டி
முதுகுளத்தூர் சட்டசபை தொகுதியில் இந்திய லங்காடி அணியின் முன்னாள் கேப்டன் தேவசித்தம் சுயேட்சையாக போட்டியிடுகிறார்.
இந்திய லங்கடி ( நொண்டியாட்டம்) அணியின் முன்னாள் கேப்டன் தேவசித்தம். இவர், ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரைச் சேர்ந்தவர். இவரது தலைமையில் இந்திய அணி 2014-ல் பூடானில் நடந்த தெற்கு ஆசியா கோப்பை, 2015-ல் நேபாளத்தில் நடந்த ஆசியா கோப்பை, 2017-ல் சிங்கப்பூரில் நடந்த உலகக்கோப்பையை வென்றுள்ளது. தற்போது 33 வயதாகும் தேவசித்தம் முதுகுளத்தூர் சட்டசபை தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
இதுதொடர்பாக, தேவசித்தம் கூறியதாவது, மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் ராமநாதபுரம் மாவட்ட இளைஞர்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்று எனக்கு அறிவுறுத்தியுள்ளார். லங்கடி விளையாட்டை ஊக்குவிக்க பல்வேறு அரசியல் தலைவர்களை சந்தித்து வலியுறுத்தினேன். ஆனால், யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. வெற்றி பெற்றால் வறட்சியான முதுகுளத்தூர் தொகுதியை முன்னேற்றவும், லங்கடி விளையாட்டை ஊக்குவிக்கவும் நடவடிக்கை எடுப்பேன் என்று கூறினார். தேவசித்தத்திற்கு அரசு வேலை வழங்குவதாக மறைந்த முதல்வர் ஜெயலலிதா உறுதியளித்து இருந்தார். ஆனால், அ.தி.மு.க. ஆட்சிநிறைவு பெற்றும் அவருக்கு அரசு வேலை வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.