பிரதமரை பரப்புரைக்கு அழைக்கும் தி.மு.க. வேட்பாளர்கள்
தங்களது தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவாக பரப்புரையில் ஈடுபட வர வேண்டும் என்று தி.மு.க. வேட்பாளர்கள் பிரதமருக்கு டுவிட்டரில் அழைப்பு விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் வாக்குப்பதிவிற்கு இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில், தேர்தல் பரப்புரை நாளை மறுநாளுடன் நிறைவு பெற உள்ளது. தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள பா.ஜ.க.வினர் 20 தொகுதிகளில் போட்டியிடுகின்றனர். அ.தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவாக பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா ஆகியோரும் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும், அ.தி.மு.க.வினர் தங்களது தேர்தல்
பரப்புரையில் மோடி, அமித்ஷாவின் புகைப்படங்களை பயன்படுத்துவதை தவிர்த்து வருகின்றனர். இது சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டது.
இந்த நிலையில், தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது தொகுதியில் தங்களை எதிர்த்து போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரதமர் மோடி பரப்புரையில் ஈடுபட டுவிட்டரில் அழைப்பு விடுத்துள்ளனர்.
ஏற்கனவே கோவை தொண்டாமூத்தூர் தொகுதி வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாதிபதி எஸ்.பி. வேலுமணிக்கு ஆதரவாக வந்து பரப்புரை செய்யுமாறு அழைப்பு விடுத்தார். இந்த நிலையில் தாம்பரம் தொகுதியில் போட்டியிடும் எஸ்.ஆர். ராஜா, பல்லாவரம் தொகுதியில் போட்டியிடும் கருணாநிதி, கிருஷ்ணகிரி தொகுதி வேட்பாளர் செங்குட்டுவன், பர்கூர் தொகுதி வேட்பாளர் மதியழகன், முதுகுளத்தூர் தொகுதி வேட்பாளர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன், திருச்சி தொகுதி வேட்பாளர் இனிகோ இருதயராஜ், ராணிப்பேட்டை தொகுதி வேட்பாளர் ஆர்.காந்தி மற்றும் தி.மு.க. வேட்பாளர்களாகிய செல்வப்பெருந்தகை, எழிலரசன், எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, சிவகாம சுந்தரி, சுந்தர், கயல்விழி செல்வராஜ், வேங்கிடு மணிமாறன், எஸ்.எஸ். அன்பழகன், அம்பேத்குமார், அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் பாபு ஆகிய தி.மு.க. வேட்பாளர்களும் பிரதமர் மோடிக்கு டேக் செய்து அவரை பரப்புரைக்கு அழைத்துள்ளனர். தி.மு.க. வேட்பாளர்களின் இந்த செயல் அ.தி.மு.க.வினருக்கு பரப்புரையில் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.