அம்பேத்கரின் அரசியல் அமைப்பு சட்டம்தான் பாஜகவின் முதல் எதிரி - திருமாவளவன்
பகுத்தறிவு மூலமாக மக்கள் சிந்திக்கக் கூடாது என்பதற்காக இராமாயண, மகாபாரத புராண இதிகாச குப்பைகளை மக்களின் மூலையில் திணித்துள்ளனர்
புதுச்சேரியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கூட்டாட்சிக் கோட்பாடும் நாடாளுமன்ற சனநாயகமும் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தலைமையில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில், புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், காட்டுமன்னார்கோயில் சட்டமன்றத் உறுப்பினர் சிந்தனை செல்வன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநிலச் செயலாளர் சலீம், திமுக சார்பில் எதிர்க்கட்சி சட்டமன்றத் தலைவர் சிவா உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி தலைவர்கள் பங்கேற்றனர். தமிழக சட்டமன்றத்தில் நீட் தேர்விற்கு எதிராக இயற்றப்பட்ட மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியதின் எதிரொலியாக இந்த கருத்தரங்கம் ஏற்பாடு செய்யத் திட்டமிட்டதாக திருமாவளவன் மேடையில் தெரிவித்தார்.
மாநில அரசின் சட்ட அதிகாரம் குறித்து விவாதிக்க வேண்டும்
மாநில அரசுகளுக்குச் சட்டம் இயற்றக் கூடிய ஒத்திசைவு பட்டியலில் இடம்பெற்றுள்ள துறைகள் தொடர்பாக சட்டம் இயற்றக் கூடிய அதிகாரம் உண்டா? இல்லையா? மாநில அரசுகளுடைய அதிகாரங்கள் என்ன? ஒன்றிய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையேயான உறவு என்ன? இந்திய அரசியலமைப்பு சட்டம் வலியுறுத்தக் கூடிய கூட்டாட்சி கோட்பாடு எந்த நிலையில் இருக்கிறது? இது விவாதிக்கப்பட வேண்டிய பேருரையாடலாக மாற்றப்பட வேண்டிய, தேசிய அளவிலான உரையாடலாக முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டிய ஒரு தேவை உள்ளது என்பதாலேயே விடுதலை சிறுத்தைகள் கட்சி இந்த கருத்தரங்கை ஒருங்கிணைத்துள்ளது, என்றார் அவர்.
இராமாயண, மகாபாரத என்று இதிகாச குப்பைகளை திணித்துள்ளனர்
இந்த சனாதன இந்தியாவில் சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரம், நீதி கிடையாது. சகோதரத்துவம் இருந்தால்தான் சமத்துவம் வரும், சுதந்திரம் இருந்தால் தான் சகோதரத்துவம் இருக்கும். நீதி கிடைத்தால் தான் இந்த மூன்றும் கிடைக்கும். இவைகள் மூன்றுமே ஒன்றோடொன்று தொடர்புடையது. ஆகவே சனாதனத்தை இடிப்பதற்கு, இவர்கள் பாபர் மசூதிக்கு போனதை போன்று கடப்பாரையைத் தூக்கிக் கொண்டு போக வேண்டிய அவசியமில்லை. அம்பேத்கரின் அரசியலமைப்பு சட்டம் ஒன்று போதுமானது.
ஆண்டாண்டு காலமாக, தலைமுறை தலைமுறையாக கோலோற்றி கொண்டிருந்த இவர்கள் உழைக்கின்ற மக்களை எய்த்துக் கொண்டிருந்தார்கள். மக்கள் பகுத்தறிவு மூலமாக சிந்திக்கக் கூடாது என்கிற வகையிலே புராண குப்பைகளை மூலையில் திணித்தார்கள். இந்திய சமூகக் கட்டமைப்பை இந்த நிலைக்கு ஆளாக்கியதற்கு இரண்டு புராணக் குப்பைகள், இதிகாசங்கள் என்ற பெயரால் மிக பெரிய பாத்திரத்தை வகித்திருக்கின்றன. அதில் ஒன்று இராமாயணம் மற்றொன்று மகாபாரதம்.
இந்த இரண்டு இதிகாசங்களும் தான் இந்திய சமூகத்தை, சகோதரத்துவத்தை, சுதந்திரத்தைச் சிதைத்து, தனித்தனி குழுக்களாகக் காட்டுமிராண்டி சமூகங்களைப் போல எந்த தொடர்பும் இல்லாமல், ஆங்காங்கே தனித் தனித் தீவுகளாக இந்த சமூகங்களை மாற்றியமைத்ததை இந்த இரண்டு இதிகாசங்களும் பெரும்பங்குண்டு உள்ளது. மேலும், ஆனா, ஆவன்னா அரிச்சுவடி கூட படித்திருக்க மாட்டான். அவனுக்கு ராமன் லட்சுமணன் கதை தெரியும். பள்ளிக்கூடம் பக்கம் போயிருக்க மாட்டான். அவனுக்கு மகாபாரதத்தின் ஐந்து பஞ்ச பாண்டவர்கள் பற்றிய கதை தெரியும். இப்படிப் படிக்காதவன் உள்ளத்தில் இதை கொண்டு போய் விதைத்தார்கள்.
மேலும் அவர், "குலத்துக்கு ஒரு நீதி என்று சமூக கட்டமைப்பில் பிறப்பின் அடிப்படையில் உயர்வு தாழ்வு, பிராமணனே எல்லாருக்கும் மேலானவன், உயர்ந்தவன், என்கிற இந்த கதைகள் எல்லாம் கற்பிதமாக நிலை நிறுத்தினார்கள். இந்த சமூக கட்டமைப்பு மீது யாராலும் கை வைக்க முடியவில்லை. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் நிறுவப்பட்ட இந்த சமூக ஒழுங்கை அம்பேத்கரின் இந்திய அரசமைப்பு சட்டம் சிதைத்துக் கொண்டிருக்கிறது," என்று பேசினார் திருமாவளவன்.
கட்சியை கலைத்து அரசியலை விட்டு வெளியேறுவேன்
"ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்தவன் பாஜகவில் இருக்கிறான் என்றால் அவன் அப்பட்டமான சுயநலவாதி என்று அர்த்தம். தனிப்பட்ட முறையில் பதவி வாங்கலாம் ஆனால் இந்த சமூகத்திற்கு என்ன பலன் உள்ளது. அவர்களால் சாதியை ஒழிக்க முடியுமா? என்றாவது ஒழிப்போம் என்று சொல்லச் சொல்லுங்கள். இந்தியாவில் நாங்கள் சாதியை ஒழிப்போம், சகோதரத்துவத்தை நிலை நாட்டுவோம், அம்பேத்கரின் அரசியலமைப்பு சட்டம் சொல்கிற சமத்துவத்தை வென்றெடுப்போம் என்று பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்த ஒருவரைப் பேச சொல்லுங்கள் நான் இந்த அரசியலை விட்டே வெளியேறுகிறேன். விடுதலை சிறுத்தைகள் கட்சியைக் கலைத்து விடுகிறேன். ஆனால் அதை அவர்கள் சொல்ல மாட்டார்கள்," என்று தெரிவித்தார்.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தை சிதைக்கும் முயற்சி
தொடர்ந்து பேசிய அவர் பாஜகவின் முதல் எதிரி இந்திய அரசியலமைப்பு சட்டம் தான் அதைச் சிதைக்க பாஜக, ஆர்.எஸ்.எஸ் முயல்வதாக தெரிவித்தார். பாஜக, ஆர்.எஸ்.எஸ் பொறுத்தவரை மத மாற்றத்தைத் தடுத்து. காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கியை நீர்த்துப் போகச் செய்யவேண்டும் என்ற இரண்டை காரணங்களுக்காக தலித் மற்றும் பழங்குடியின மக்களுடன் நெருங்கி நெருங்கி வருகிறார்கள். இந்தியர்களை மதத்தின் பெயரால், இந்துக்களை சாதியின் பெயரால் பிரிக்கிறார்கள். தலித்துக்களைச் சேர்த்துக்கொண்டு சிறுபான்மையினரை வெறுக்கின்ற வெறுப்பு அரசியலை விதைக்கிறார்கள். வன்முறைகளை யுக்திகளாக கையாளுகிறார்கள்.
பாஜகவின் கனவு திட்டம் செயல் திட்டம் என்னவென்றால் இந்தியாவை ஒரே தேசம் ஒரே கலாச்சாரம், ஒரே தேசம் ஒரே மொழி, ஒரே தேசம் ஒரே கட்சி, ஒரே தேசம் ஒரே ஆட்சி என்பதாகும். இங்கே மாநில கட்சிகள் வளர்ந்து வருகிறது. ஒரு கட்சி ஒரு ஆட்சி என்று நினைக்கும் இவர்கள் மாநில கட்சிகளே இருக்கக்கூடாது என்று நினைக்கிறார்கள். குறிப்பாக இவர்கள் லோக்சபாவில் தனிப் பெரும்பான்மையாக வந்தாலும் ராஜ்யசபாவில் தேசிய கட்சியாக இருக்கக்கூடிய பாஜகவிற்குப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அப்படி இரண்டு சபையிலும் ஒரு மசோதா நிறைவேறினால் தான் அது சட்டமாகும். அதனால் இவர்கள் குதர்க்கமான யுக்தியைக் கையாளுகிறார்கள்.
தற்போது இந்தியா முழுவதும் ஒரே கட்சி ஆள வேண்டும். ஆனால் அதை இந்த அரசியலமைப்பு சட்டம் ஒத்துக்கொள்ளாது. ஆகவே இந்த அரசியலமைப்பு சட்டம் தான் பாஜகவின் முதல் எதிரி என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். அம்பேத்கரால் வகுத்து அமைக்கப்பட்ட இந்திய அரசியலமைப்பு சட்டம் தான் சன்பரிவார் கும்பலின் முதல் எதிரியாக இருக்கிறது. அதற்கு பிறகு இரண்டாவது தான் காங்கிரஸ் கட்சியை எதிரியாக பார்க்கின்றனர். பாஜக, ஆர்.எஸ்.எஸ்-க்கும் முதல் எதிரியே இந்திய அரசியலமைப்பு சட்டம் தான். அவைதான் இந்த சமூக கட்டமைப்பைச் சிதைத்து, வர்ணாசிரமத்தை தகர்த்துக் கொண்டு இருக்கிறது. ஆகவே அவர்களின் மறைமுக நோக்கமே இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைத் தூக்கியெறிவதாகும், என்று திருமாவளவன் மேடையில் பேசியுள்ளார்.