‛துரோகி எடப்பாடி... ஓபிஎஸ்-ஐ சமாதானப்படுத்த வராதீங்க...’ மாஜி அமைச்சர்களை சூழ்ந்த ஓபிஎஸ்., ஆதரவாளர்கள்!
ஓபிஎஸ்., வீட்டிற்கு சமரச பேச்சு வார்த்தைக்கு வந்த மாஜி அமைச்சர்களை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சூழ்ந்து, எடப்பாடி பழனிச்சாமியை கடுமையாக விமர்சித்தனர்.
அதிமுகவில் இதுவரை இருந்த இரட்டைத் தலைமையை, ஒற்றைத் தலைமையாக மாற்றும் கோரிக்கை வலுப்பெற்றுள்ளது. முன்பு இது போன்ற கோரிக்கை வந்த போது, அது தேவையற்ற ஒன்று என, இரு தலைமைகளான ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆகிய இருவருமே கருத்த தெரிவித்து முற்றுப்புள்ளி வைத்தனர். ஆனாலும், ஒற்றைத் தலைமை கோரிக்கை, ஒவ்வொரு சமயத்திலும் எழுந்து கொண்டே தான் இருக்கிறது.
கட்சி சார்ந்த முடிவுகளை அறிவிப்பதில், எடுப்பதில் இரட்டைத் தலைமை செயல்பாடு சரிவராது என்கிற கோரிக்கை தான் அதற்கு காரணம். அதன் அடிப்படையில் அதிமுகவில் அடிக்கடி இரட்டைத் தலைமைக்குள் உரசல் இருந்து கொண்டே இருந்தது. அவ்வாறு உரசல் வரும் போதெல்லாம், ஓபிஎஸ் வீடு, இபிஎஸ் வீடு என இரு தலைமையின் வீடுகளுக்கு முன்னாள் அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் மாறி மாறி தூது செல்வதும், சமாதனம் செய்வதும் தொடர்ந்து கொண்டே இருந்தது.
ஆளுங்கட்சியாக இருக்கும் போதும், எதிர்கட்சியாக இருக்கும் போதும், இதே நிலையே தொடர்ந்தது. நேற்று நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஒற்றைத் தலைமை கோரிக்கையை ஒரே நேரத்தில் அனைவரும் முன்மொழிந்தனர். ஜூன் 23ல் அதிமுகவின் பொதுக்குழு, செயற்குழு நடைபெறவிருக்கும் நிலையில் அதில் அதிமுகவின் ஒற்றைத் தலைமை முடிவு அறிவிக்கப்பட வேண்டும் என்கிற முனைப்பு தெரிந்தது. ஆனால், இந்த முடிவு இபிஎஸ் தரப்பு முடிவாகவே தெரிகிறது. ஓபிஎஸ்.,க்கு இது நடக்கும் என்பது கூட தெரிந்திருந்ததாக நடப்பதை வைப்பது கணிக்க முடிகிறது.
இபிஎஸ்., கட்சியின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்க அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. வழக்கம் போல, இம்முறையும் ஓபிஎஸ்.,யை சமாதானம் செய்து, அதிமுகவை ஒற்றை தலைமையின் கீழ் கொண்டு வர இன்று தீவிர முயற்சியை எடுத்துள்ளனர், மூத்த நிர்வாகிகள். இதற்காக ஓபிஎஸ்-இபிஎஸ் வீடுகளுக்கு மாறி மாறி முன்னாள் அமைச்சர்கள் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். நேற்று இந்த விவகாரம் வெளியானதிலிருந்து ஓபிஎஸ் இல்லத்தில் அவரது ஆதரவாளர்கள் குவியத் தொடங்கியுள்ளனர்.
ஓபிஎஸ்.,க்கு ஆதரவாக ஒட்டப்பட்ட போஸ்டர்கள் கிழிக்கப்பட்டதை கண்டித்து சிலர் மறியலும் செய்தனர். இப்படி பல்வேறு பரபரப்பான கட்டங்களுக்கு மத்தியில், சமரசத்துடன் இந்த விவகாரத்தை முடிவுக்கு கொண்டு வர மூத்த நிர்வாகிகள் முயன்று வருகின்றனர். அவ்வாறு ஓபிஎஸ் வீட்டுக்கு வந்த முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், உதயக்குமார் , கன்னியாகுமரி எம்.எல்.ஏ., தளவாய் சுந்தரம் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் பன்னீர் செல்வத்தை சந்தித்து பேசி, இபிஎஸ் வீட்டிற்கு காரில் புறப்பட்ட முயன்றனர்.
அப்போது, திண்டுக்கல் சீனிவாசனை சூழ்ந்து கொண்ட ஓபிஎஸ் ஆதரவாளர்கள், ‛‛இனிமே யாரும் இங்கே வராதீங்கய்யா... சமாதானப்படுத்தனும் யாரும் வர்றாதீங்க... சமாதானப்படுத்துறேன்னு கட்சியை இது பண்ணாதீங்க... கட்சி நல்லா இருக்கணும், எல்லாரும் நல்லா இருக்கணும்னா ஐயா தலைமையில் கொண்டு வாங்க. நீங்க ஆளுக்கு ரெண்டு பேரு வந்து ஐயாவ சமாதானப்படுத்தி சமாதானப்படுத்தி அவரை உட்கார வெச்சுட்டீங்க; இதுக்கு மேலேயும் உட்கார வைக்காதீங்க... ஐயாவ தலைமையில் உட்கார வையுங்க... நல்லா இருப்பீங்க...’’ என கடிந்து கொண்டனர்.
அந்த தொண்டரை சமரசம் செய்ய முயன்ற திண்டுக்கல் சீனிவாசனால், அதற்கு மேல் பேச முடியவில்லை. இறுதியில், அந்த ஆதரவாளரிடம், ‛‛உங்க கோரிக்கை நிறைவேற்றப்படும்’’ என இபிஎஸ் ஸ்டைலில் பேசிவிட்டு அங்கிருந்து புறப்பட்டார்.
அதே போல, ஓபிஎஸ்.,யை சந்தித்து விட்டு இபிஎஸ்.,யை சந்திக்க காரில் புறப்பட்ட முன்னாள் அமைச்சர் உதயக்குமாரையும் முற்றுகையிட்ட ஓபிஎஸ் ஆதரவாளர்கள், ‛‛நீங்க தான் உள்ளே போய் பேசப்போறீங்க... கரெக்டா பேசுங்க. ஒற்றை தலைமைக்கு ஓபிஎஸ்., தான் சரியானவர். அவர் தான் ஒற்றை தலைமைக்கு வரனும், துரோகி எடப்பாடியிடம் கட்சியை விட்றாதீங்க... எடப்பாடி எப்படி கட்சியை வாங்குனாருனு உங்களுக்குத் தெரியும்...’’ என்று கடுமையாக கூச்சலிட, கார் கதவை பூட்டி அங்கிருந்து உதயக்குமார் எஸ்கேப் ஆனார்.
இதே போல, கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரத்தையும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சூழ்ந்து கொண்டு, ஓபிஎஸ் தலைமையில் ஒற்றை தலைமை ஏற்பட ஆதரவு தெரிவிக்க கூறினர்.