விநாயகர் சிலை தயாரிப்பு மையத்திற்கு சீல்: இந்து அமைப்புகள் கொந்தளிப்பு! மயிலாடுதுறையில் பரபரப்பு..
மயிலாடுதுறையில் சுற்றுச்சூழல் விதியை மீறியதாக கூறி விநாயகர் சிலைகள் தயாரித்த நிலையத்திற்கு கோட்டாட்சியர் சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

வரும் 27-ஆம் தேதி நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ள நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் தயாரிப்பு நிலையம் ஒன்றுக்கு திடீரென சீல் வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுற்றுச்சூழல் விதிமுறைகளை மீறி, ரசாயனப் பொருட்கள் கொண்டு சிலைகள் தயாரிக்கப்பட்டதாகக் கூறி மயிலாடுதுறை கோட்டாட்சியர் விஷ்ணுபிரியா தலைமையிலான குழு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இதற்கு இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து, இது பழிவாங்கும் நடவடிக்கை என குற்றம்சாட்டியுள்ளனர்.

திடீர் ஆய்வு மற்றும் சீல் வைப்பு
மயிலாடுதுறை அருகே மூங்கில்தோட்டம் பகுதியில் கடந்த 11 ஆண்டுகளாக இயங்கி வரும் விநாயகர் சிலை தயாரிப்பு மையத்தில், கோட்டாட்சியர் விஷ்ணுபிரியா தலைமையில் வட்டாட்சியர் சுகுமாறன், ஆய்வாளர் சிவக்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அரசின் சுற்றுச்சூழல் விதிமுறைகளுக்கு மாறாக, சிலைகளைத் தயாரிக்க தடை செய்யப்பட்ட ரசாயனப் பவுடர் பயன்படுத்தப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அந்த மையம் பூட்டி சீல் வைக்கப்பட்டது.
இந்த மையத்தில், வரும் விநாயகர் சதுர்த்தி விழாவுக்காக சுமார் 110 சிலைகள் தயாரிக்கப்பட்டு, டெலிவரிக்குத் தயாராக இருந்தன. ரூ.10,000 முதல் ரூ.15,000 வரை முன்பணம் கொடுத்து சிலைகளை முன்பதிவு செய்த பக்தர்கள், அவற்றை எடுத்துச் செல்ல இருந்த நிலையில், திடீரென சீல் வைக்கப்பட்டதால் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பணியாளர்கள் வாழ்வாதாரம் பாதிப்பு
சிலைகள் தயாரிப்பு மையத்தில் வட இந்தியர்கள் உள்படப் பல குடும்பங்கள் வேலை செய்து வருகின்றன. அதிகாரிகளின் இந்த திடீர் நடவடிக்கையால், குழந்தைகளுடன் இருந்த பெண்கள் மற்றும் ஆண்கள் என அனைவரும் வெளியேற்றப்பட்டு, தற்போது சாலையோரத்தில் தங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த பல ஆண்டுகளாக எவ்விதப் பிரச்சனையும் இல்லாமல் இயங்கி வந்த இந்த நிலையத்தில் மீது, திடீரென எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் நடவடிக்கை எடுத்தது நியாயமற்றது என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக ஆய்வு செய்யாத அதிகாரிகள்
ஆறு மாதங்களுக்கு முன்பே ஆய்வு செய்து, விதிமுறைகள் மீறப்பட்டிருந்தால் அறிவுரை வழங்கி வழிகாட்டி இருக்கலாம் என்றும், சிலைகளைத் தயாரித்து முடித்த பிறகு சீல் வைத்தது ஒரு கலவரத்திற்கு விதை போடுவது போல் உள்ளது என்றும் இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
அரசியல் ரீதியான அழுத்தம்
இந்த விவகாரம் குறித்து அறிந்த பாஜக மற்றும் பல்வேறு இந்து அமைப்புகள், இது இந்துக்களின் விழாவைத் தடுக்கும் நோக்கில், பழிவாங்கும் நடவடிக்கையாக எடுக்கப்பட்டுள்ளது என குற்றம்சாட்டுகின்றனர். இந்த விவகாரத்தில் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார் மற்றும் திமுக மாவட்டச் செயலாளர் ஆகியோர் உடனடியாகத் தலையிட்டு, சிலைகளை அந்தந்த ஊர்களுக்கு எடுத்துச் சென்று வழிபாடு நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த ஆண்டு மயிலாடுதுறை எம்எல்ஏ, விநாயகர் ஊர்வலத்தைத் தொடங்கி வைத்ததை சுட்டிக்காட்டி, 'திராவிட மாடல்' அரசு ஆன்மிகத்திற்கு ஆதரவானது என்ற பிம்பத்தைப் பாதுகாக்க வேண்டும் எனவும், இல்லையேல் இந்துக்களின் விரோதி என்ற பட்டம் வரும் எனவும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் தமிழக அரசுக்கு ஒரு புதிய தலைவலியை உருவாக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. போராட்டத்திற்கும், தொடர் நடவடிக்கைகளுக்கும் இந்து அமைப்புகள் தயாராகி வருகின்றன. அதிகாரிகளின் இந்த செயல் ஒரு பதற்றமான சூழலை உருவாக்கியுள்ளது.






















