2025ம் ஆண்டின் சிறந்த இரவு.. கோலியின் கையில் ஐபிஎல்.. RCB ரசிகர்களின் 18 வருட ஏக்கம்!
IPL 2025 RCB: 18 ஆண்டுகளில் முதன்முறையாக கோப்பையை கைப்பற்றிய ஆர்சிபி அணியின் வெற்றி ஒவ்வொரு ஆர்சிபி ரசிகனுக்கும் 2025ம் ஆண்டை மறக்க முடியாத ஆண்டாக மாற்றியது.

இந்தியாவின் தேசிய விளையாட்டாக ஹாக்கி இருந்தாலும் பெரும்பாலானவர்களின் உணர்வுகளில் கலந்த ஒரு விளையாட்டாக இருப்பது கிரிக்கெட். கிரிக்கெட்டில் பலரின் திறமைகளையும் வெளியில் கொண்டு வர வேண்டும் என்பதற்காக கொண்டு வரப்பட்டதே ஐபிஎல்.
18 ஆண்டுகால ஏக்கம்:
2008ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த ஐபிஎல் தொடரில், கடந்த 18 ஆண்டுகால வரலாற்றில் அதிகளவு விமர்சனங்களையும், ஏளனங்களையும், அவமானங்களையும் எதிர்கொண்ட அணி ஆர்சிபி. டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் என 3 வடிவ கிரிக்கெட்டிலும் கோலோச்சியவரும், ரன் மெஷின், கிரிக்கெட்டின் அரசன் என்றும் ரசிகர்களால் கொண்டாடப்படும் விராட் கோலியின் கைகளில் ஒரு ஐபிஎல் கோப்பை கூட இல்லாததே அந்த விமர்சனத்திற்கு காரணம்.

2024ம் ஆண்டு வரை 2 முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறியும் ஒரு கோப்பை கூட இல்லாத ஆர்சிபி 2025ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் களமிறங்கியபோதும் வழக்கம்போல விமர்சனங்கள், அவமானங்கள், ஏளனங்களுடனே களமிறங்கியது. 2025ம் ஆண்டு ஐபிஎல்-க்காக நடந்த ஏலத்தில் டிம் டேவிட், ஷெப்பர்ட், ஜிதேஷ் சர்மா, லிவிங்ஸ்டன், குருணல் பாண்ட்யா ஆகியோரை ஏலத்தில் எடுத்ததை ரசிகர்கள் மட்டுமின்றி முன்னாள் வீரர்கள் பலரும் கூட கேலி செய்தனர்.
மாஸ்டர் ப்ளான்:
ஆர்சிபி அணியின் வீரராக இருந்த தினேஷ் கார்த்திக் ஆலோசகராவும், ஆன்டி ஃப்ளவர் பயிற்சியாளராக யார் கேப்டன் என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், ரஜத் படிதார் கேப்டனாக அறிவிக்கப்பட்டார். ட்ரீம் லெவனில் கூட அவரை கேப்டனாக போடமாட்டோம் அவரை கேப்டனாக நியமித்துள்ளனர்? என்றும் ஏளனங்கள் குவிந்தது.
ஆனால், விமர்சனங்களுக்கு பதிலடி தரும் வகையிலே முதல் போட்டியிலே ஆர்சிபி அணி நடப்பு சாம்பியனாக வந்த கொல்கத்தாவை அதன் சாெந்த மைதானத்திலே புரட்டி எடுத்தது. அந்தளவு அணியை செதுக்கத் தொடங்கினார் தினேஷ் கார்த்திக். சென்னைக்கு வந்தால் ஆர்சிபியை கதறவிடுவோம் என்ற ஹேட்டர்ஸ்களே ஆச்சரியப்படும் வகையில் பில் சால்ட், படிக்கல், கேப்டன் ரஜத் படிதார், டிம் டேவிட் அதிரடியால் 198 ரன்களை இலக்காக நிர்ணயித்து சென்னை அணியை சேப்பாக்கத்தில் 50 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 17 ஆண்டுகளுக்கு பிறகு சேப்பாக்கத்தில் வெற்றி பெற்றது.
18 ஆண்டுகளில் முதன்முறை:
மற்ற அணிகளின் மைதானங்களில் கோலோச்சி வந்தாலும் சொந்த மைதானமான சின்னசாமியில் தடுமாறியது ஆர்சிபி. மும்பை அணியை அதன் மைதானத்தில் துவம்சம் செய்தது. ஐபிஎல் தொடரின் பேரரசர்களாக திகழ்ந்த சென்னை - மும்பை இரண்டையும் அவர்களது சொந்த மைதானத்திலே வீழ்த்தியது ஆர்சிபிக்கு உத்வேகம் அளிக்க, சொந்த மண்ணில் வீழ்த்திய அணிகளை அவரவர் சொந்த மைதானத்தில் வீழ்த்தி கணக்கை சரி செய்து கொண்டிருந்தது.
ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டி மூலம் மீண்டும் சொந்த மைதானத்தில் தனது வெற்றிக் கணக்கைத் தொடங்க 18 ஆண்டுகளில் முதன்முறையாக சென்னை அணியை சேப்பாக்கம் மற்றும் பெங்களூரில் வீழ்த்தி வரலாறு படைத்தது.
லக்னோ அணிக்கு எதிராக 228 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய ஆர்சிபி அணிக்காக ஜிதேஷ் சர்மாவின் அதிரடியால் 230 ரன்கள் விளாசி பெற்ற வெற்றி ஆர்சிபி ஒரு அசுரத்தனமான அணியாக உருவெடுத்ததை பறைசாற்றியது. அணி ஒருவரை மட்டும் நம்பியில்லாமல் கோலி, பில் சால்ட், படிக்கல், படிதார், குருணல் பாண்ட்யா, சுயாஷ் சர்மா, டிம் டேவிட், ஷெப்பர்ட், ஹேசில்வுட், யஷ் தயாள் என விளையாடிய அனைவரும் பங்களிப்பை அளித்தனர். ஒரு அணியாக பங்களிப்பை அளித்ததே ஆர்சிபியின் பலமாக அமைந்தது.
விறுவிறுப்பான இறுதிப்போட்டி:
3வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறிய ஆர்சிபி அணி அகமதாபாத்தில் பஞ்சாபை எதிர்கொண்டது. ராசியில்லாத அணிகள் என்ற முத்திரையுடன் களமிறங்கிய இரு அணிகளில் ஆர்சிபி-யின் வெற்றிக்காக காத்திருந்த ரசிகர்கள் அளவிற்கு தோல்விக்காக காத்திருந்தவர்களின் எண்ணிக்கையும் இருந்தது. முதலில் ஆடிய ஆர்சிபி அணிக்கு கோலி, அகர்வால், கேப்டன் படிதார், ஜிதேஷ் சர்மா, ஷெப்பர்ட், லிவிங்ஸ்டன் அசத்த 191 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

இளம் பட்டாளமான பிரியன்ஷ் ஆர்யா, ப்ரப்சிம்ரன், கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோரை வேகம், சுழலை வைத்து கட்டுப்படுத்தினார் கேப்டன் படிதார். ஹேசில்வுட் ஆர்சிபியின் மிகப்பெரிய அஸ்திரமாக இருந்தார். ப்ரியன்ஷ் ஆர்யாவை அவர் அவுட்டாக்க இங்கிலிஷ் அச்சுறுத்த குருணல் பாண்ட்யா தனது சுழலில் பிரப்சிம்ரன், இங்கிலிஷை அவுட்டாக்க கடைசியில் ஷஷாங்க் சிங் பயமுறுத்த, கடைசி 5 பந்துகளில் 30 ரன்கள் தேவைப்பட ஹேசில்வுட் ஆட்டத்தை ஆர்சிபிக்கு சாதகமாக பந்துவீசி முடித்துக் கொடுத்தார்.
கோலியின் கையில் கோப்பை:
இறுதியில் 18 ஆண்டுகளில் முதன்முறையாக ஆர்சிபி ஐபிஎல் சாம்பியன் என்ற பட்டத்தை முதன்முறை கைப்பற்றியது. கடைசி ஓவரில் நாம் வெற்றி பெறப்போகிறோம் என்ற மகிழ்ச்சியில் கடைசி ஓவர் முழுவதும் கண்ணீர்விட்டபடியே விராட் கோலி இருந்தார். வெற்றி பெற்றதுமே கேப்டன், பந்துவீச்சாளர்கள், வீரர்கள் என அனைவரும் விராட் கோலியைச் சூழ்ந்தனர்.
இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் இடையே பாதியில் நிறுத்தப்பட்டு மீண்டும் நடத்தப்பட்ட இந்த ஐபிஎல் தொடரில் ஜுன் 3ம் தேதி இரவு விராட் கோலியின் கைகளில் ஐபிஎல் கோப்பை தவழ்ந்ததை கண்டு கோடிக்கணக்கான ஆர்சிபி ரசிகர்கள் ஆனந்த கண்ணீர் வடித்தனர்.
2025ம் ஆண்டின் சிறந்த இரவு:
ஆர்சிபியின் அடையாளமான கிறிஸ் கெயில், டிவிலியர்ஸ் இருவரும் ஆர்சிபி ஜெர்சியில் களத்திற்கே வந்து விராட் கோலியுடன் இணைந்து கோப்பையை கையில் ஏந்தி கொண்டாடினார்கள். 18 ஆண்டு அவமானம், ஏளனங்கள், கண்ணீருக்கு இந்த ஒரு கோப்பை பதில் அளித்தது. 2025ம் ஆண்டின் சிறந்த இரவாக ஒவ்வொரு ஆர்சிபி ரசிகனுக்கும் அந்த ஜுன் 3ம் தேதி அமைந்தது.


















