மயிலாடுதுறை அருகே மாணவி தூக்கிட்டு தற்கொலை - பள்ளி நிர்வாகம் மீது பெற்றோர் புகார்
மயிலாடுதுறை அருகே தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை அருகே தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்த மாணவியை பள்ளி நிர்வாகம் அவமானம் படுத்தியதால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாக மாணவியின் பெற்றோர் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த தனியார் பள்ளி மாணவி
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே சித்தர்காடு பகுதியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவர் தனியார் கட்டுமான நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ராஜலெட்சுமி, இத்தம்பதியினருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இவர்களது மகள் மயிலாடுதுறை அருகே மேலையூரில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார்.
தூக்கிட்டு தற்கொலை
இந்நிலையில் நேற்றுமுன்தினம் பள்ளியில் மாதிரி தேர்வு நடைபெற்றுள்ளது. பள்ளி முடிந்து மாலை வீட்டுக்கு வந்த மாணவி பெற்றோர் வீட்டில் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பெற்றோர் வீட்டிற்கு வந்த போது மகள் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தவர்கள் இதுகுறித்து மயிலாடுதுறை காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவல் அடுத்து மாணவியின் வீட்டிற்கு விரைந்து வந்த மயிலாடுதுறை போலீசார் மாணவி உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளி மீது குற்றச்சாட்டு
இந்நிலையில் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக மாவட்ட ஆட்சியர் வந்த போது மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தனியார் பள்ளி நிர்வாகம் மாணவியை அவமானப்படுத்தியதால் தான் தங்களது மகள் தூக்கிட்டு இறந்ததாக ஆட்சியரிடம் கண்ணீர் மல்க தெரிவித்தனர். நன்றாக படிக்கக்கூடிய மாணவியை தேர்வில் பிட் அடித்ததாக கூறி அனைத்து மாணவ, மாணவிகள் முன்னிலையில் அவமானப்படுத்தியதாகவும், அதனை தாங்காமல் மனமுடைந்த மாணவி தற்கொலை செய்து கொண்டதாகவும் புகார் தெரிவித்தனர்.
INDvsSL: பயிற்சியாளராக வெற்றியுடன் தொடங்குவாரா கம்பீர்? இந்தியா - இலங்கை இன்று மோதல்!
மேலும் மாணவி இறப்புக்கு காரணமாக பள்ளி நிர்வாகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆட்சியரின் காலில் விழுந்து கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தனர். அதனைத் தொடர்ந்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு உறுதியளித்து சென்றார். இச்சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.
பள்ளி தரப்பில் விளக்கம்
மாணவி பிட் அடித்து மாட்டிகொண்டது குறித்து மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்து வீட்டில் நன்றாக படிக்க சொன்னதாகவும், வகுப்பறை வெளியில் நிற்க வைக்கவில்லை. மாணவி உடனே வீட்டிற்கு சென்றதாகவும், தங்களிடம் அது தொடர்பான ஆதாரம் உள்ளதாக பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம்
இதுபோன்ற சூழலில் மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 மன அழுத்தத்தை சாதாரணமாக எண்ணாமல் மன அழுத்தம் ஏற்பட்டால் உடனடியாக இந்த எண்ணில் தொடர்பு கொள்ளவும்.