ஆக்கிரமிக்கப்பட்ட பொதுபாதை; வழியின்றி வாய்க்காலில் செல்லும் மக்கள் - மயிலாடுதுறை அருகே அராஜகம்
பொதுமக்கள் பயன்படுத்தி வந்த போதுபாதையினை அடைத்து ஆக்கிரமிப்பு செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
மயிலாடுதுறை அருகே அரசுக்கு சொந்தமான வாய்க்கால் புறம்போக்கு பாதையை ஆக்கிரமித்து அடைந்ததால் 10 குடும்பத்தினர் நடந்து செல்வதற்கு வழியில்லாமல் 7 ஆண்டுகளாக வாய்க்காலில் இறங்கி செல்வதாக குற்றம்சாட்டி பாதையினை மீட்டு தர கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
ஆக்கிரமிக்கப்பட்ட பொதுபாதை
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த மணக்குடி செட்டி தெருவில் ஏழை எளிய விவசாய கூலி தொழிலாளர் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அவர்கள் பயன்படுத்தி வந்த பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பொது வழியை ஆக்கிரமித்து அடைத்து வைத்ததால் வழி இல்லாமல் வாய்க்காலில் இறங்கி செல்வதாக குற்றம் சாட்டி, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அப்பகுதியில் வசிக்கும் குடும்பத்தினர் மனு அளித்து நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
BYD eMax 7: போட்டியே இல்ல..! புதிய பெயரில் களமிறங்கும் BYD e6, eMax 7 காரின் அம்சங்கள் என்ன?
வழியின்றி வாய்க்காலில் இறங்கி செல்லும் மக்கள்
அவர்கள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: மணக்குடி செட்டி தெருவில் வசித்து தாங்கள் 60 ஆண்டுகளாக பத்து குடும்பத்தினர் குடியிருந்து வருகிறோம். நாங்கள் பயன்படுத்தி வந்த அரசுக்கு சொந்தமான வாய்க்கங்கரை பொதுப் பாதையை அப்பகுதியை சேர்ந்த ரவி என்ற தனிநபர் ஆக்கிரமித்து இரும்பு முள்வேலி வைத்து அடைத்து வைத்துள்ளார். இதனால் தாங்கள் வசிக்கும் வீட்டிற்கும், அங்கிருந்து வெளியில் செல்லவும் வழியின்றி வாய்க்காலில் இறங்கி சென்று வருகிறோம். அதுமட்டுமின்றி தங்களது வீட்டு இறப்பிற்கு கூட இறந்தவர் உடலை வாய்க்காலில் இறங்கிதான் தூக்கிச் செல்ல வேண்டி உள்ள நிலை உள்ளது. பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்களும் மழை காலங்களில் வாய்க்காலில் ஓடும் தண்ணீரில் இறங்கி ஆபத்தான முறையில் உயிரை பணயம் வைத்து சென்று வருகின்றனர்.
கண்டுக்கொள்ளாத அதிகாரிகள்
இதுகுறித்து காவல்துறை, வருவாய்த்துறையினரிடம் பல முறை புகார் மனு அளித்துள்ளோம், இருப்பினும் இது தொடர்பாக எந்த ஒரு சிறு நடவடிக்கைகள் கூட இதுநாள் வரை அதிகாரிகள் எடுக்காமல் அலட்சியம் காட்டி என அந்த மனுவில் அதிகாரிகள் மீது கடுமையான குற்றச்சாட்டை பதிவு செய்துள்ளனர். மேலும் இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் உடனடியாக நேரில் வந்து ஆய்வு செய்து, மழை காலம் துவங்க இன்னும் ஒருமாத காலமே உள்ளதால் உடனடியாக உரிய விசாரணை செய்து அரசுக்கு சொந்தமான பொது பாதையை ஆக்கிரமித்து வைத்துள்ள நபர் மீது நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும் அரசு இடத்தில் அமைந்துள்ள பாதையினை தனி நபர் அடைத்து வைத்துக்கொண்டு பொதுமக்களுக்கு வழி விடமால் அவர்கள் வாய்க்காலில் இறங்கி செல்லும் நிகழ்வு பெரும் சோகத்தையும், அதிர்ச்சியும் ஏற்படுத்தியுள்ளது.