மதுபோதையில் பேருந்தை இயக்கிய ஓட்டுநர் - சுத்து போட்ட மக்கள் - சீர்காழியில் பரபரப்பு
சீர்காழியில் மது போதையில் பேருந்தை ஓட்டி வந்த தனியார் பயணிகள் பேருந்து ஓட்டுநரை பொதுமக்கள் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீர்காழியில் மது போதையில் பேருந்தை ஓட்டி வந்த தனியார் பயணிகள் பேருந்து ஓட்டுநரை பொதுமக்கள் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பூரண மதுவிலக்கு கோரிக்கை
மதுவால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகிறது என்றும், அது மூலம் பல குடும்பங்கள் அழிந்து நடுத்தெருவிற்கு வருவதாகவும் கூறி தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என பல்வேறு கட்சியினரும், பொதுமக்களும் தொடர்ந்து அரசை வலியுறுத்தி வருகின்றன. இருந்த போதிலும் மதுபான விற்பனையை அரசே ஏற்று நடத்தி வருவதால், அரசிற்கு அதன் மூலம் பல்லாயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது. அந்த வருவாயினை கொண்டு அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வரும் நிலையில், பூரண மதுவிலக்கை அமல்படுத்துவது குறித்து அரசு தயக்கம் காட்டி வருவதாக தொடர் குற்றச்சாட்டும் எழுந்து வருகிறது.
அரசு பேருந்துக்கு இடையூறு செய்த தனியார் பேருந்து
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி புதிய பேருந்து நிலையத்தில் தஞ்சாவூரில் இருந்து சீர்காழி நோக்கி வந்த தனியார் பேருந்து பழையாறில் இருந்து சீர்காழி வந்த அரசு பேருந்தும் உள்ளே நுழைய முற்பட்டது. அப்போது தனியார் பேருந்து ஓட்டுநர், அரசு பேருந்து உள்ளே நுழைய விடாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அப்பகுதியில் மற்ற வாகனங்கள் செல்ல வழியின்றி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தட்டிக்கேட்ட பொதுமக்கள்
இதனை கண்ட பாதிக்கப்பட்ட அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகள் மற்றும் பேருந்து நிலையத்தில் இருந்த ஆட்டோ ஓட்டுநர்கள் தனியார் பேருந்து ஓட்டுனரிடம் அரசு பேருந்துடன் என் தேவையில்லாமல் வாக்குவாதம் செய்கிறீர்கள் என தட்டிக்கேடுள்ளனர். அதற்கு தனியார் பேருந்து ஓட்டுனர் ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்களை கடுமையான வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது.
மதுபோதையில் பேருந்து ஓட்டுநர்
அப்போது தனியார் பேருந்து ஓட்டுனர் மீது மது வாசனை அடித்துள்ளது. அதனை அடுத்து அவரை பொதுமக்கள் பரிசோதனை செய்ததில் அவர் மது போதையில் இருந்தது தெரிய வந்தது. தொடர்ந்து பொதுமக்கள் போக்குவரத்தை சரி செய்து, அரசு பேருந்தை சீர்காழி புதிய நிலையத்துக்கு உள்ளே செல்ல வழிவகை செய்தனர். பின்னர் இது தொடர்பாக பொதுமக்கள் சீர்காழி போக்குவரத்து காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
பத்தாயிரம் ரூபாய் அபராதம்
பொதுமக்களின் தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சீர்காழி போக்குவரத்து காவல்துறை உதவி ஆய்வாளர் வேல்முருகன் மற்றும் போலீசார் தனியார் பேருந்து ஓட்டுனர் மது போதையில் உள்ளாரா? என மதுபோதை கண்டறியும் கருவி மூலம் பரிசோதனை செய்தார். சோதனையில் ஓட்டுநர் கும்பகோணம் தாராசுரம் பகுதியைச் சேர்ந்த 32 வயதான தீனதயாளர் மது போதையில் இருந்தது உறுதி செய்யப்பட்டது. அதனை அடுத்து அவர் மேற்கொண்டு பேருந்தை இயக்க அனுமதி மறுத்து, அவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார்.
சீர்காழி பேருந்து நிலையத்தில் மது போதையில் பேருந்தை இயக்கி வந்ததோடு, அரசு பேருந்து ஓட்டுனர் மற்றும் பொதுமக்களிடம் தனியார் பேருந்து ஓட்டுனர் வாக்குவாதம் செய்தது பிரச்சினையில் ஈடுபட்ட சம்பவம் சீர்காழி புதிய பேருந்து நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் சம்பவம் நடைபெற்ற அருகிலேயே சீர்காழி காவல் துணை கண்காணிப்பாளர் போக்குவரத்து காவல் நிலையம் மற்றும் சட்ட ஒழுங்கு காவல்நிலையம் அனைத்தும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.