Mayiladuthurai: அரசு உதவிகளை முழுமையாக கிடைக்காத நிலையிலும் சாதிக்கும் நரிக்குறவர் இன மாணவர்கள்
மயிலாடுதுறை அருகே உலக சாதனை நிகழ்ச்சியில் வெற்றி பெற்று திரும்பிய நரிக்குறவர் சமுதாயத்தை சேர்ந்த மாணவர்களுக்கு பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள பல்லவராயன்பேட்டையில் நரிக்குறவர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உண்டு உரைவிட பள்ளி செயல்பட்டு வருகின்றது. இப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் குத்துச்சண்டை உள்ளிட்ட தற்காப்பு கலை, விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்கி வருகின்றனர். மேலும் மாவட்ட மாநில, அகில இந்திய அளவிலும் பரிசுகள் பல பெற்றுள்ளனர்.
இந்நிலையில் இந்த பள்ளியில் பயிலும் நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்த 10 மாணவர்கள் மயிலாடுதுறை மாவட்டத்தின் சார்பாக தென்காசியில் நடைபெற்ற தண்ணீரின் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்று தலையில் டம்ளரில் தண்ணீர் வைத்தபடி யோகாசனம் செய்தனர். மேலும் 500 பேர் இந்த நிகழ்வில் பங்கேற்ற நிலையில் மாணவர்கள் செய்த இந்த நிகழ்வு உலக சாதனையாக பதிவு செய்யப்பட்டு கேடயம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
இதனிடையே வெற்றி பெற்று இன்று பள்ளிக்கு வருகை தந்த மாணவர்களுக்கு பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் மாணவர்களுக்கு பள்ளி ஆசிரியர்கள் பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டனர். இப்பள்ளியை சேர்ந்த மாணவர்கள் தொடர்ந்து பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் மற்றும் யோகா போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை குவித்து வருகின்றனர். இதனிடையே போதிய இடவசதி இல்லாத காரணத்தால் முறையான பயிற்சி மேற்கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும், தங்களுக்கு உரிய வசதியினை அரசு செய்து தந்தால் மேலும் பல சாதனைகளை நாங்கள் படைப்போம் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
Driverless Metro: பெங்களூர் வந்தது இந்தியாவின் முதல் ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில் பெட்டிகள்!
இப்பள்ளிக்கு வழங்க வேண்டிய விளையாட்டு உபகரணங்களும் சரிவர வழங்கப்படாத காரணத்தால் மேற்கொண்டு மாணவர்கள் பயிற்சி மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே அரசு சார்பில் போதிய இடவசதி ஏற்படுத்தி மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய பயிற்சி உபகரணங்களை வழங்க வேண்டும் என அப்பகுதியை சேர்ந்த பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.