சாலையில் புதைக்கப்பட்ட இறந்தவரின் உடல் - சீர்காழி அருகே அதிர்ச்சி
சீர்காழி அருகே சாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலையின் நடுவே இறந்தவரின் உடலை புதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த ஆச்சாள்புரம் ஊராட்சியை சேர்ந்த கீழகரம் கிராமம் உள்ளது. இங்கு சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் அப்பகுதியில் சாலை, குடிநீர், உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதிகளும் இன்றி வசித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் முதலமைச்சரின் கிராம சாலைகள் இணைப்பு திட்டத்தின் கீழ் 42 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கீழகரம் கிராமத்தில் இருந்து மயானத்துக்கு செல்ல 823 மீட்டர் தொலைவில் கடந்த சில தினங்களாக சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
மேலும் அப்பகுதியில் உள்ள வயல்களுக்கு விவசாயிகள் சென்று வரும் வகையிலும் அப்பகுதியில் முதலைமேடு, அனுமந்தபுரம், உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்லும் இணைப்புச் சாலையாகவும் இருந்து வருகிறது. இதுவரை மண் சாலையாக இருந்து வந்த இந்த சாலை தற்போது தார் சாலையாக மேம்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் 600 மீட்டர் தொலைவுக்கு சாலை அமைக்கும் பணி முடிவுற்று தொடர்ந்து பணி நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், கீழகரம் கிராமத்தைச் சேர்ந்த சௌந்தர்ராஜன் என்பவர் இறந்து விட்டதால், அவரின் உடலை கீழகரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் எடுத்து வந்து மயானத்துக்கு செல்லும் வழியிலேயே சாலையில் குழி தோண்டி புதைத்துள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த சீர்காழி வட்டாட்சியர் இளங்கோவன், கொள்ளிடம் வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்டோர் சம்பவம் இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் தற்போது சாலை அமைக்கப்பட்டுள்ள இடத்தில் தாங்கள் பல தலைமுறைகளாக இறந்தவர்களை அடக்கம் செய்யும் இடம் என்றும் இந்த இடத்தில் சாலை அமைத்தால் தங்களுக்கு இடுகாடு இடப்பற்றாக்குறை ஏற்படும் எனவும், இதனால் இந்த இடத்தில் சாலை அமைக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை அடுத்து அதிகாரிகள் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியரிடம் கலந்தாய்வு செய்து இப்பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்நிலையில் சாலையில் பள்ளம் தோண்டி இறந்தவரின் சடலத்தை புதைத்த சம்பவம் மயிலாடுதுறை மாவட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.