நேரம் தவறிய எம்.எல்.ஏ; பனிப்பொழிவால் சிக்கி தவித்த குழந்தைகள்...
அங்கன்வாடி மையக் கட்டிடத் திறப்பு விழாவிற்கு எம்எல்ஏ தாமதமாக வந்ததால், கடும் பனியில் மழலைகள் பலமணி நேரம் காத்திருக்க வைக்கப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறையில் அங்கன்வாடி மையக் கட்டிடத் திறப்பு விழாவிற்கு சட்டமன்ற உறுப்பினர் தாமதமாக வந்ததால், கடும் பனியில் மழலைகள் சுமார் மூன்று மணி நேரம் காத்திருக்க வைக்கப்பட்ட சம்பவம் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடம்
மயிலாடுதுறை நகராட்சிக்குட்பட்ட 22-வது வார்டு பகுதியில், மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து சுமார் 15 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது. இந்த நவீன வசதிகளுடன் கூடிய கட்டிடத்தின் திறப்பு விழா நேற்று மாலை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
நேரம் தவறிய எம்.எல்.ஏ; தவித்த குழந்தைகள்
இந்தத் திறப்பு விழா நிகழ்ச்சி மாலை 5 மணிக்குத் தொடங்கும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக, அந்த அங்கன்வாடி மையத்தில் பயிலும் சிறுவர்கள், அவர்கள் பெற்றோர்கள் மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் மாலை 4.00 மணிக்கே மையத்திற்கு வருகை தந்தனர்.
ஆனால், விழாவிற்குத் தலைமை தாங்கி ரிப்பன் வெட்டித் திறந்து வைக்க வேண்டிய மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார், மாலை 5 மணிக்கு வரவில்லை. அவர் வேறொரு நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்றதால், இந்த நிகழ்ச்சிக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டது.
மார்கழி பனியில் வாடிய மழலைகள்
தற்போது மார்கழி மாதம் என்பதால், மாலை 5 மணிக்கே அந்தி சாய்ந்து கடும் பனிப்பொழிவு தொடங்கியது. வழக்கமாக மாலை நேரங்களில் வீடுகளுக்குள் இருக்க வேண்டிய சிறுவர்கள், திறந்த வெளியில் கடும் குளிரிலும், பனிப்பொழிவிலும் காக்க வைக்கப்பட்டனர்.
சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்ததால், பல குழந்தைகள் பசியாலும் குளிராலும் அழத் தொடங்கினர். ஒரு கட்டத்தில் களைப்படைந்த ஒரு குழந்தை, தனது தாயின் மடியிலேயே உறங்கிப் போனது. அந்தத் தாய் தன் குழந்தையைப் தன்னுடன் அணைத்து கொண்டு , எம்.எல்.ஏ எப்போது வருவார் என ஏங்கியபடி காத்திருந்த காட்சி அங்கிருந்தோரை கண்கலங்கச் செய்தது.
இரவு 7.30-க்கு வந்திறங்கிய சட்டமன்ற உறுப்பினர்
இறுதியாக, சுமார் இரண்டரை மணி நேரம் தாமதமாக இரவு 7.30 மணியளவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார் விழா நடைபெறும் இடத்திற்கு வந்தார். அதன் பின்னர் நகர்மன்றத் தலைவர் செல்வராஜ், நகர்மன்ற உறுப்பினர் உஷாராணி ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையில் அவர் ரிப்பன் வெட்டி கட்டிடத்தைத் திறந்து வைத்தார்.
நிகழ்ச்சி முடிந்த பின்னர், அவசர அவசரமாகக் குழந்தைகள் அங்கிருந்து அழைத்துச் செல்லப்பட்டனர். நீண்ட நேரம் பனியில் இருந்ததால் குழந்தைகளுக்குச் சளி, காய்ச்சல் போன்ற உடல்நல உபாதைகள் ஏற்படுமோ எனப் பெற்றோர்கள் அச்சம் தெரிவித்தனர்.
பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கண்டனம்
இந்தச் சம்பவம் குறித்து அப்பகுதி பொதுமக்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இது குறித்து சமூக ஆர்வலர் ஒருவர் கூறுகையில், "மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் எந்த ஒரு பொது நிகழ்ச்சியாக இருந்தாலும் தாமதமாக வருவதையே ஒரு கொள்கையாக வைத்திருக்கிறார். பெரியவர்கள் காத்திருப்பதில் சிரமம் இல்லை, ஆனால் கைக்குழந்தைகளையும், மழலைகளையும் கடும் பனியில் 3 மணி நேரம் காத்திருக்க வைத்தது மனிதநேயமற்ற செயல். மக்கள் பிரதிநிதிகள் மக்களின் நேரத்திற்கும், உடல்நலத்திற்கும் மதிப்பு அளிக்க வேண்டும்," என்றார்.
கோரிக்கை
அரசு விழாக்களில் குறிப்பாகக் குழந்தைகள், முதியவர்கள் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளில் மக்கள் பிரதிநிதிகள் சரியான நேரத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், தேவையற்ற தாமதங்களைத் தவிர்க்க வேண்டும் என்றும் மயிலாடுதுறை பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கட்டிடத் திறப்பு விழா மகிழ்ச்சியாக அமைய வேண்டிய சூழலில், குழந்தைகளின் வாடிய முகங்கள் அந்தப் பகுதி மக்களிடையே பெரும் மனவருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.






















