அடுத்து அடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு படையெடுக்கும் கிராம மக்கள்; காரணம் இதுதான்...!
மயிலாடுதுறை நகராட்சியுடன் மன்னம்பந்தல் ஊராட்சியை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராமசபை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் நகலை ஆட்சியரிடம் ஒப்படைக்க கிராம மக்களால் திரண்டதால் பரபரப்பை ஏற்பட்டது.
மயிலாடுதுறை நகராட்சியுடன் மன்னம்பந்தல் ஊராட்சியை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராமசபை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் நகலை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்க 500க்கு மேற்பட்ட கிராம மக்கள் திரண்ட நிலையில், மாவட்ட ஆட்சியர் இல்லாததால் அலுவலகத்தின் முன்பு மனு அளிப்பதற்காக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தின் 38 வது மாவட்டம்
தமிழ்நாடில் கடைசியாக பிரிக்கப்பட்ட 38 வது மாவட்டமான மயிலாடுதுறை மாவட்டம், கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டது. மாவட்டத்தின் முதல் ஆட்சியராக இரா.லலிதா மற்றும் காவல் கண்காணிப்பாளராக ஸ்ரீநாதா ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இதில் ஒவ்வொரு துறையாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து பிரித்து முழுமையாக இங்கு செயல்பட்ட தொடங்கியுள்ளது. இந்நிலையில் மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலகம் வணிக வரி வளாக கட்டிடத்திலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வேறு கட்டிடத்திலும் இயங்கியது.
வளர்ச்சி பணிகள்
மயிலாடுதுறை புதிய மாவட்டம் அறிவிப்பதற்கு முன்பாகவே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கான இடத்தினை தருமபுரம் ஆதீனம் வழங்குவதாக உறுதி அளித்திருந்தார். அதன் அடிப்படையில் பால்பண்ணை என்ற பகுதியில் உள்ள தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான 23 ஹெக்டேர் இடத்தில் ஆட்சியர் அலுவலகம் மற்றும் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், அமைப்பதற்கு தேர்வு செய்யப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நிரந்தர கட்டடம் கட்டுவதற்காக பொதுப்பணித்துறை கட்டட அமைப்பு, கட்டட வட்டம் திருச்சி சார்பில் 114 கோடி திட்ட மதிப்பீட்டில் 7 மாடி கட்டிடமாக கட்டி முடிக்கப்பட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் கட்டடம் கட்டுமான பணிகளும் தற்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அருகாமையில் தொடங்கப்பட்டுள்ளது.
சிறப்புநிலை நகராட்சியாக தரம் உயர்வு
இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்ட தலைநகராக அறிவிக்கப்பட்ட பிறகு மன்னம்பந்தல் ஊராட்சி பகுதியில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டப்பட்டு செயல்பட்டு வரும் சூழலில், மணக்குடி ஊராட்சியில் புதிய பேருந்து நிலையம் கட்டுமான பணிகள் நடைபெற்ற வருகிறது. அதனை தொடர்ந்து மயிலாடுதுறை சிறப்புநிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதால் நகராட்சி வார்டுகள் விரிவாக்கம் செய்யும் பணிகளை நகராட்சி நிர்வாகம் செய்து வருகிறது.
ஊராட்சிகள் இணைப்பு
அதனடிப்படையில் மயிலாடுதுறை நகராட்சியை ஒட்டியுள்ள ரூரல் ஊராட்சியை நகராட்சியுடன் இணைப்பதற்கான ஆயத்தப்பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்ற வருகிறது. இதனை அறிந்த மயிலாடுதுறை ரூரல் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள், ரூரல் ஊராட்சியை மயிலாடுதுறை நகராட்சியில் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த சில தினங்களுக்கு முன்பு கிராமத்தலைவர் தியாகராஜன் தலைமையில் பெண்கள் உள்ளிட்ட கிராமமக்கள் 500 -க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க குவிந்தனர்.
கிராம மக்கள் எதிர்ப்பு
ஒரே கோரிக்கையை வலியுறுத்தி அதிகமான பொதுமக்கள் திரண்டதால் அவர்களை ஆட்சியர் அலுவலக வாயிலில் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். மேலும் முக்கியஸ்தர்களை மட்டும் உள்ளே செல்லுங்கள் என்று கூறினர். ஆனால் அனைவரும் மாவட்ட ஆட்சியரை சந்திக்க வேண்டும் என்று கூறியதை அடுத்து நேரடியாக மக்கள் இருக்கும் இடத்திற்கு வந்து சந்திப்பதாக மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தெரிவித்ததை அடுத்து மாவட்ட ஆட்சியர் கார் அருகே தரையில் அமர்ந்து ஒருமணிநேரத்திற்கு மேலாக காத்திருந்து அங்கு வந்த ஆட்சிரிடம் மனுவை அளித்தனர்.
அந்த மனுவில், ரூரல் ஊராட்சியில் 85 சதவிகிதம் பேர் விவசாய கூலி மற்றும் நூறுநாள் வேலை திட்டத்தில் பணியாற்றி வருவதாகவும், நகராட்சியுடன் இணைத்தால் 85 சதவிகித மக்கள் கடுமையான நிதிநெருக்கடிக்கும், வேலை இழப்பிற்கும் ஆளாக நேரிடும். எனவே, ரூரல் ஊராட்சியை நகராட்சியுடன் இணைக்கும் முடிவை கைவிட அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டுமென்று அதில் தெரிவித்துள்ளனர். அந்த மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியர் மகாபாரதி தங்களின் கோரிக்கை குறித்து பரிசீலனை செய்து நிச்சயம் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்
கிராம சபை கூட்டத்தில் தீர்மானம்
இந்நிலையில் இதேபோன்று மயிலாடுதுறையை ஒட்டியுள்ள மன்னம்பந்தல் ஊராட்சியை இணைப்பதற்கான ஆயத்தப் பணிகள் தொடங்கப்பட்டுள்ள சூழலில். ரூரல் மற்றும் மன்னம்பந்தல் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் மயிலாடுதுறை நகராட்சியுடன் தங்கள் கிராமங்களை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மன்னம்பந்தல் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மயிலாடுதுறை நகராட்சியுடன் மன்னம்பந்தலை இணைக்க கூடாது என ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கிராமமக்கள் முன்மொழிந்து கையொப்பமிட்ட தீர்மானத்தின் நகல்களை இன்று மாவட்ட ஆட்சியர் மகாபாரதியிடம் ஒப்படைப்பதற்காக மன்னம்பந்தல் ஊராட்சி மன்ற தலைவர் பிரியா பெரியசாமி, ஒன்றிய குழு உறுப்பினர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையில் கிராம மக்கள் 500 பேர் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தனர்.
ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா
அப்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் இல்லாததால் கிராம மக்கள் அலுவலக வாசலில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் சிவகுமார் தலைமையில் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட நிலையில் தொடர்ந்து அங்கு வந்த மாவட்ட ஆட்சியரின் பொது நேர்முக உதவியாளர் முத்துவேல் பேச்சுவார்த்தை நடத்தி மனுவை பெற்றுக் கொண்டார். அலுவல் நிமித்தமாக மாவட்ட ஆட்சியர் வெளியே சென்று இருப்பதாகவும், தகவலை சொல்லி நடவடிக்கை எடுக்க பரிந்துரைப்பதாக தெரிவித்ததன் பேரில் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒரே நேரத்தில் 500 க்கும் மேற்பட்ட மக்கள் திரண்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.