கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் போராட்டம் சிபிஎம் கட்சிக்கு ஆதரவு - பாஜகவிற்கு எதிர்ப்பு..!
கள்ளச்சாரயத்திற்கு எதிராக சிபிஎம் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் அருகாமையில் அதே கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்த வந்த பாஜகவினருக்கு காவல்துறையினர் அனுமதி மறுத்து கைது செய்துள்ளனர்.
மயிலாடுதுறையில் கள்ளக்குறிச்சி கள்ளசாரயத்திற்கு எதிராக மார்க்ஸ்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் அருகாமையில் அதே கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்த வந்த பாஜகவினருக்கு காவல்துறையினர் அனுமதி மறுத்து கைது செய்துள்ளனர்.
மாநிலம் முழுவதும் கள்ளச் சாராய விற்பனைக்கு எதிராக போராட்டம்
தமிழ்நாடு முழுவதும் கள்ளச் சாராய விற்பனையை தடுக்காமல் அரசு அலட்சியம் காட்டுவதாக கூறி தமிழ்நாடு அரசை கண்டித்து நேற்று மாநிலம் முழுவதும் பாரதிய ஜனதா கட்சியின் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 150 -க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டனர். மெத்தனால் கலந்த சாராயம் பாக்கெட்டுகளை வாங்கி மது பிரியர்கள் குடித்தின் விளைவாக உடல்நலம் பாதிக்கப்பட்டனர். மேலும் திடீர் வாந்தி, மயக்கம், வயிற்று எரிச்சல் உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டதால் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
57 பேர் உயிரிழப்பு
அதனை தொடர்ந்து பலர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். துரதிர்ஷ்டவசமாக தற்போது வரை 57 பேர் வரை பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும், 100 -க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் கூட சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக தகவல்கள் கூறப்படுகிறது. அவர்களை காப்பாற்ற தேவையான நடவடிக்கை அரசு சார்பில் எடுக்கப்பட்டு வருகிறது.
பாஜக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்
இந்த சூழலில், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு தொடர்பான எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டங்களை அறிவித்துள்ளன. அதனை அடுத்து நேற்று தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஒவ்வொரு மாவட்ட தலைநகரங்களிலும் அந்தந்த மாவட்ட தலைவர்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். மேலும் பல இடங்களில் ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி வழங்கப்படாததால் வாக்குவாதம் ஏற்பட்டு தொடர்ந்து பாஜகவினர் கைது செய்யப்பட்டனர்.
மயிலாடுதுறையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்
அதன் ஒன்றாக மயிலாடுதுறை முத்துவக்கீல் சாலையில் பாஜகவினர் கள்ளகுறிச்சி கள்ளச்சாரயத்திற்கு எதிராக நேற்று மாலை போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர். அந்த அறிவிப்பை தொடர்ந்து முத்துவக்கீல் சாலையில் கள்ளகுறிச்சி கள்ளச்சாரயத்திற்கு எதிராக போராட்டம் நடத்த வந்த பாஜகவினர் அங்கு திரண்டனர். ஆனால் போராட்டத்திற்கு அனுமதி மறுத்த காவல்துறையினர் போராட்டம் நடத்துவதற்கு முன்பே அங்கு வந்த பாஜகவினரை ஒருவர்பின் ஒருவராக கைது செய்து வாகனத்தில் ஏற்றி தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் தங்க வரதராஜன், நகர தலைவர் வினோத் உள்ளிட்ட 40 பாஜகவினரை பேரை போலீசார் கைது செய்தனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு அனுமதி
ஆனால் இதே காரணத்திற்காக மயிலாடுதுறை முத்துவக்கீல் சாலையில் இருந்து சிறிது தூரத்தில் உள்ள கிட்டப்பா அங்காடி முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவுக்கு காரணமாக அனைத்து காவல்துறை மற்றும் அதிகாரிகளை கைது செய்ய வேண்டும், கள்ளச்சாராய வியாபாரம் மேற்கொண்டு வரும் பெரும் புள்ளிகளை கைது செய்ய வேண்டும், கள்ளசாரயம் மற்றும் போதை பொருள் புழக்கத்தை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் உள்ளிட்ட 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு காவல்துறையினர் பாதுகாப்பு அளித்த நிலையில், பாஜகவினருக்கு மட்டும் போராட்டத்திற்கு அனுமதி மறுத்து கைது செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.