மயிலாடுதுறை: கனமழை எச்சரிக்கை! நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு - மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு!
மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக, பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை (அக்டோபர் 21) முதல் தீவிரமடைந்து வருகிறது. தலைநகர் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் மழை கடந்த சில நாட்களாக இடைவிடாது மழையானது பெய்து வருகிறது. இதனால் நகரங்களும், கிராமங்களும் மழைநீரில் தத்தளித்து வருகிறது. சில இடங்களில் மழைநீர் வீடுகள் உள்ளே புகுந்ததால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். சாலைகள் சேறு, தண்ணீரால் மூழ்கியுள்ளதால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கொட்டி தீர்க்கும் மழையால் பெரிய அளவில் நீர் வரத்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக மேட்டூர், பேரியாறு, வைகை, பூம்புகார், பன்னேரி போன்ற முக்கிய அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் பல ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சில கிராமங்களில் மழைநீர் ஊருக்குள் புகுந்துள்ளது.
வடகிழக்கு பருவமழை
தமிழ்நாடு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது, நாளை (அக்டோபர் 22) சென்னைக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் மஞ்சள் மற்றும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடலோர பகுதிகளில் அலைகள் 1.5 முதல் 2.5 மீட்டர் உயரம் வரை எழும்பும் வாய்ப்புள்ளதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாமென எச்சரிக்கப்பட்டுள்ளது.
முதல்வரின் அவசர அறிவுரை
இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அவசர அறிவிப்பை அனுப்பியுள்ளார். அதில் பருவமழையால் ஏற்படக்கூடிய வெள்ளப்பெருக்கு, குடியிருப்பு பகுதிகளில் நீர் தேக்கம், மின்சார கோளாறுகள் போன்றவற்றை கண்காணிக்கவும், அவசர முகாம்களை தயார் நிலையில் வைத்திருக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், மக்கள் அவசர தேவைக்கு உதவி பெற டிஸ்ட்ரிக்ட் கண்ட்ரோல் ரூம் எண்களை பயன்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் நாளைய மழை நிலவரம் (22-10-2025)
தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். விழுப்புரம், செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், சேலம், திருச்சிராப்பள்ளி, வேலூர், திருப்பத்தூர், தர்மபுரி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.
நாளை மறுநாள் (23-10-2025) மழை நிலவரம் ?
வட தமிழகத்தில் அநேக இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் இராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்திற்கு பள்ளி, கல்லூரி விடுமுறை - Mayiladuthurai District Leave
மயிலாடுதுறை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கி கடந்த சில தினங்களாக மிதமான மழை பதிவாகி வந்தது. இந்நிலையில் நாளைய தினம் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலாட் விடுக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை(22.10.2025) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஶ்ரீகாந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார்.






















