நான்கு வழிச்சாலை பணியால் துண்டிக்கப்பட்ட விளைநிலங்கள் - போராட்டத்தில் குதித்த விவசாயிகள்
மயிலாடுதுறை அருகே விளை நிலங்களுக்கு செல்ல நான்கு வழிச்சாலையில் சுரங்கம் அமைத்து இணைப்பு சாலை ஏற்படுத்தி தர வலியுறுத்தி அப்பகுதி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை வழியாக செல்லும் விழுப்புரம் நாகப்பட்டினம் நான்கு வழிச்சாலையால் விளை நிலங்களுக்கு செல்லும் பாதை துண்டிக்கப்பட்டதாக கூறி அப்பகுதி விவசாயிகள் நான்கு வழிச்சாலையில் சுரங்கம் அமைத்து இணைப்பு சாலை ஏற்படுத்தி தர வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் - நாகப்பட்டினம் நான்கு வழிச்சாலை
மயிலாடுதுறை மாவட்டத்தின் வழியே விழுப்புரம் முதல் நாகப்பட்டினம் வரையிலான நான்கு வழி சாலை அமைக்கும் பணிகள் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதற்காக சாலை விரிவாக்க பணிகள், பாலங்கள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் தரங்கம்பாடி தாலுக்கா கருவிழந்தநாதபுரம் பகுதி அருகே சங்கிருப்பு, நடராஜர் பிள்ளை சாவடி, கருவிழந்தநாதபுரம், கிடாரங்கொண்டான் ஆகிய கிராமங்களை சேர்ந்த ஊராட்சிகளளில் வயல்வெளிகளுக்கு செல்லும் பாதை சங்கிருப்பு கிராமத்தில் அமைந்துள்ளது.
விளைநிலங்களுக்கான பாதை துண்டிப்பு
இந்தப் பாதையை அடைத்து நான்கு வழிச்சாலை செல்வதால் விவசாயம் செய்த பொருட்களை வெளியே எடுத்து வருவதற்கும், விவசாயம் செய்வதற்கு டிராக்டர் உள்ளிட்ட கருவிகளை கொண்டு செல்வதற்கும் பாதை இல்லாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால் இப்பகுதியில் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் விவசாம் பாதிக்கப்படுவதோடு, சுமார் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 2000 -க்கும் மேற்பட்ட விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
விவசாயிகள் போராட்டம்
மேலும் விவசாய நிலங்களுக்கு செல்ல ஏதுவாக சுரங்க வழி பாதை மற்றும் நான்கு வழிச்சாலையின் நடுவே திறப்பு ஒன்றை அமைத்து தரும்படி விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தனர். அதனை தொடர்ந்து இணைப்பு சாலை அமைத்து தந்துவிட்டு சாலைப் பணிகளை செய்வதாக தேசிய நெடுஞ்சாலை துறை தெரிவித்தது. ஆனால், இணைப்பு சாலை அமைக்கப்படாமல் பணிகளை தொடர்ந்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த விவசாயிகள், நான்கு வழிச்சாலை பணிகளை தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து அதிகாரிகள் யாரும் பேச்சுவார்த்தைக்கு வராததால் சுரங்கப்பாதை மற்றும் சென்டர் மீடியம் வழி செய்து தரக்கூறி விவசாயிகள் நாகப்பட்டினம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கருவிழந்தநாதபுரம் பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதிகாரிகள் பேச்சுவார்த்தை
இதனை அடுத்து அங்கு வந்த காவல்துறையினர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற விவசாயிகளை தடுத்து நிறுத்தினர். அதனை தொடர்ந்து சாலை மறியலை கைவிட்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சீர்காழி கோட்டாட்சியர் அர்ச்சனா, விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை ஈடுபட்டார்.
விவசாய நிலங்களுக்கு செல்ல வேண்டும் என்றால் பல கிலோமீட்டர் தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதால், நேரம் மற்றும் பொருள் விரயம் ஏற்படும் என்றும், இதனால் விவசாயிகள் ஏற்கனவே பல சிரமங்களுக்கு நடுவில் விவசாயம் செய்து வரும் நிலையில், இதுபோன்ற நிகழ்வால் விவசாயத்தை தொடர முடியாமல் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கும், ஆகையால் உடனடியாக இணைப்பு சாலைகள் அமைத்து தந்து விட்டு சாலைப்பணிகளை தொடர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதனை ஏற்று இணைப்பு சாலை அமைக்க நடவடிக்கை எடுப்பதாக கோட்டாட்சியர் உறுதியளித்ததை தொடர்ந்து விவசாயிகள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.