கம்பீரமாக காட்சியளித்த 50 ஆண்டு புளியமரம் - தரைமட்டம் ஆனது எப்படி?
மயிலாடுதுறை மாவட்டத்தில் நெடுஞ்சாலை ஓரம் இருந்த 50 ஆண்டுகால பழமையான புளியமரம் ஒன்று வேரோடு சாய்ந்து சாலையின் குறுக்கே விழுந்தது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் செம்பனார்கோவிலில் 50 ஆண்டு பழமையான புளியமரம் ஒன்று பிரதான சாலையில் வேரோடு சார்ந்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக கோடை வெயிலின் தாக்கம் பொதுமக்களை பாடாய் படுத்தி வருகிறது. மேலும் தமிழ்நாடில் பல்வேறு மாவட்டங்களில் வரலாறு காணாத வெப்பம் இந்தாண்டு பதிவாகியது. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் திடீரென கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருவதாலும், விவசாயிகளுக்கு சம்பா தாளடி சாகுபடி பணிகளை துவங்க ஏதுவான இந்த மழை அமைந்துள்ளதால் விவசாயிகளும், பொதுமக்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இந்த மழையால் சில பகுதிகளில் சாலைகளில் நீர் தேங்கலாம் என்றும் இதனால் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் பொதுமக்கள் அதற்கேற்ப நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வானிலை மைய அறிவிப்பு
முன்னதாக வானிலை மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 கிலோமீட்டர் முதல் 50 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம், மதுரை, விருதுநகர், சிவகங்கை, தென்காசி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. நாளை மே 17 -ஆம் தேதி தமிழ்நாடில் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மணிக்கு 40 கிமி முதல் 50 கிமீ வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தென்காசி, விருதுநகர், நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது எனவும் தெரிவித்துள்ளது. இதேபோன்று மே 18 -ம் தேதி தமிழ்நாடில் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மணிக்கு 40 கிலோமீட்டர் முதல் 50 கிலோமீட்டர் வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை மைய எச்சரித்துள்ளது.
மயிலாடுதுறை மழை நிலவரம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மிதமான மழையானது அவ்வப்போது பெய்து வந்த நிலையில், மயிலாடுதுறை, கோமல், குத்தாலம், மங்கை நல்லூர், செம்பனார்கோவில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்று நள்ளிரவு முதல் தற்போது வரை அவ்வபோது சிறிய இடைவெளியில் மிதமானது முதல் கனமழை வரை பெய்து வருகிறது. இந்நிலையில் செம்பனார்கோவிலில் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்துள்ளது, அதன் காரணமாக நெடுஞ்சாலை ஓரம் இருந்த 50 ஆண்டுகால பழமையான புளியமரம் ஒன்று வேரோடு சாய்ந்து சாலையின் குறுக்கே விழுந்தது. அதனால் அப்பகுதியில் வாகனங்கள் சாலையை கடக்க முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து தீயணைப்புதுறை வீரர்கள் அங்கு சென்று மரத்தை அறுத்து அப்புறப்படுத்தும் பணியை மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து போக்குவரத்து சீரானது.
மாவட்டத்தின் மழை பதிவு :
மயிலாடுதுறையில் 46.20 மில்லி மீட்டர், மணல்மேட்டில் 32 மில்லி மீட்டர், சீர்காழியில் 22.80 மில்லிமீட்டர், 20 மில்லி மீட்டர் மழையும், அதிகபட்சமாக செம்பனார்கோவிலில் 51.40 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.