கலெக்டர் ஆபீஸ் -க்கே இந்த நிலைமைனா..அப்போ மாவட்டத்தின் மற்ற பகுதியின் நிலை..?
கொடுமை.. கொடுமை.. என கோவிலுக்கு போனால் அங்க ஒரு கொடுமை திங்கு திங்கு ஆடியதாம் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த பொதுமக்கள் புலம்பி செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

மயிலாடுதுறை: வங்கக் கடலில் ஏற்பட்ட டிட்வா புயல் சின்னம் காரணமாக கடந்த நவம்பர் மாதம் 28, 29, 30 ஆகிய தேதிகளில் மயிலாடுதுறை மாவட்டத்தில் பலத்த மழை பெய்தது. கனமழை பெய்து 10 நாட்களுக்கு மேலாகியும், மாவட்டத்தின் மிக முக்கியமான நிர்வாக மையமான மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் மழைநீர் வடியாமல் தேங்கி நிற்பது, அப்பகுதி முழுவதும் சுகாதாரச் சீர்கேட்டை ஏற்படுத்தியுள்ளது. வடிகால் வாய்க்கால்களைத் தூர்வாராத காரணத்தால் இந்த அவல நிலை ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளனர்.
நிர்வாக மையத்தைச் சுற்றிய அவலம்
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைந்துள்ள பகுதி, அரசின் அனைத்து முக்கிய நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் மையப் பகுதியாகும். ஆனால், கடந்த மாதம் பெய்த மழையால் தேங்கிய நீர், ஆட்சியர் அலுவலக வளாகத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து பத்து நாட்களாகியும் வடியவில்லை. மாவட்ட நிர்வாகத்தின் மிக முக்கிய மையத்திலேயே மழைநீர் தேங்கி நிற்பது, மாவட்டத்தில் மழைநீர் வடிகால் பணிகளின் நிலை குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது. தேங்கி நிற்கும் தண்ணீரில் கொசுக்கள் உற்பத்தியாகி, சுகாதாரச் சீர்கேட்டை உருவாக்குவதுடன், பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அலுவலகத்திற்கு வந்து செல்வதற்கும் பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது.
கட்டுமானப் பணிகள் பாதிப்பு
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மூங்கில் தோட்டம் கிராமத்தில், புதிதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் (SP Office) அலுவலகத்துக்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. வளாகத்தைச் சுற்றியுள்ள மழைநீர் வடியாமல் தேங்கியுள்ளதால், இந்தக் கட்டுமானப் பணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
தண்ணீர் தேங்கியுள்ளதால், அஸ்திவாரம் மற்றும் தரைதளப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. மழைநீர் தேக்கம் காரணமாகக் கட்டுமானப் பொருட்களும் பாதிக்கப்பட்டு வருவதாகத் தெரிகிறது. இது, அரசின் முக்கியமான உள்கட்டமைப்புத் திட்டங்களை உரிய காலத்தில் முடிப்பதில் தாமதத்தை ஏற்படுத்தும் நிலை உள்ளது.
வடிகால் வாய்க்கால்கள் தூர்வாரப்படாமல் புறக்கணிப்பு
மழைநீர் வடியாமல் தேங்கி நிற்பதற்குக் காரணமாகச் சுட்டிக்காட்டப்படுவது, அருகிலுள்ள வடிகால் வாய்க்கால்களைத் தூர்வாராததுதான்.
மூங்கில் தோட்டம் கிராமத்தில் உள்ள மன்னன்பந்தல் வாய்க்கால், மூங்கில் தோட்டம் வாய்க்கால், குளிர்ச்சார் வாய்க்கால்கள் ஆகிய முக்கிய வடிகால் வாய்க்கால்கள் முறையாகத் தூர்வாரப்படாத காரணத்தால், மழைநீர் செல்ல வழியின்றித் தேங்கி நிற்கிறது. இதனால், அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களும், தாழ்வான குடியிருப்புகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
பத்து நாட்களுக்குப் பின் அவசர நடவடிக்கை
மழைநீர் தேக்கம் குறித்துப் பொதுமக்களிடம் இருந்தும், சமூக ஆர்வலர்களிடம் இருந்தும் தொடர்ந்து புகார்கள் எழுந்த நிலையில், மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் பத்து நாட்களுக்குப் பிறகு நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.
தற்காலிகமாக மழைநீரை வெளியேற்றுவதற்காக, அருகில் உள்ள பகுதிகளுக்குச் செல்லும் வகையில் தற்காலிக வாய்க்கால் ஒன்றை வெட்டி நீரை வடிய வைக்கும் பணியை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.
சமூக ஆர்வலர்களின் கண்டனம்
பத்து நாட்களுக்குப் பிறகும், அதுவும் மிக முக்கியமான ஆட்சியர் அலுவலக வளாகம் அருகில் மழைநீர் வடியாமல் தேங்கி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் கட்டுமானப் பணிகளைப் பாதிக்கும் அளவுக்குச் சென்ற பின்னரே தற்காலிக ஏற்பாடுகள் செய்யப்பட்டதற்குக் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், "மாவட்டத்தில் மழைநீர் வடிகால் பணிகள் எவ்வளவு விரைவாகவும், முன்யோசனையுடனும் நடைபெற்றுள்ளது என்பதற்கு இந்தச் சம்பவமே சான்று. மாவட்டத்தின் தலைமை நிர்வாக அலுவலகத்தைச் சுற்றியுள்ள வடிகால்களைக்கூட முன்கூட்டியே தூர்வாரித் தயாராக வைத்திருக்கவில்லை என்றால், தொலைதூரக் கிராமங்களின் நிலை என்னவாக இருக்கும்? இனி வரும் காலங்களில் பெய்யும் மழையைச் சமாளிக்க, நிரந்தரத் தீர்வுகளை அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்," என்று வலியுறுத்தியுள்ளனர்.
மாவட்ட நிர்வாகம் இனியாவது விழித்துக்கொண்டு, மாவட்டம் முழுவதும் உள்ள வடிகால் வாய்க்கால்களை முழுமையாகத் தூர்வாரி, எதிர்காலத்தில் இதுபோன்ற சுகாதார மற்றும் கட்டுமான இடர்பாடுகள் ஏற்படுவதைத் தடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.






















