அந்த மூன்று நாட்களுக்கு இங்கு யாருக்கும் அனுமதியில்லை... பெண்களை தனி அறையில் பூட்டும் வினோத பழக்கம்!
தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ள சின்னபொட்டிபுரம் கிராமத்தில், மாதவிடாய் காலத்தில் பெண்களை ஊரை விட்டு ஒதுக்கி வைக்கும் கலாச்சாரம் இன்றும் தொடர்ந்து வருகிறது.
மாதவிடாய் என்பது ஒரு பெண்ணின் உடலில் ஏற்படும் இயற்கையான ஒரு நிகழ்வு. இதற்கு இத்தனை கற்பிதங்களும் தேவையற்ற நியதிகளும் தேவையா? என்ற கேள்வி எழும். ஒரு பெண்ணிற்கு ஏற்படும் மாதவிடாய் நிகழ்வை மதம் ,கலாச்சாரம் ,பண்பாடு போன்றவற்றிலிருந்து இழிவாக பார்க்கப்படும் சூழல் தற்போதும் நடைபெற்று வருகிறது . அப்படி இழிவாக பார்க்கப்படும் நிலையில் மாதவிடாய் காலத்தில் பெண்கள் ஊரைவிட்டு ஒடுக்கப்பட்டு ஒரு தனி வீட்டில் தனிமைப்படுத்தப்படுவர் அதை முக்கு வீடு என கூறப்படுவர். அந்த முக்கு வீடு தற்போதும் பல கிராமங்களில் இருந்து வருகிறதை பார்க்க முடிகிறது.
எதற்காக இந்த முக்கு வீடு என்று பார்த்தால் ஒரு கிராமத்தில் உள்ள ஒரு பெண் மாதவிடாய் ஏற்படும் காலங்களில் தனது வீட்டை விட்டு ஒதுக்கப்பட்டும் ,ஊரைவிட்டு ஒதுக்கப்பட்டும் அவர்களுக்கென அமைக்கப்பட்ட அந்த முக்கு வீடு என கூறப்படும் ஒரு தனி அறையில் மாதவிடாய் காலம் முடியும் வரை தனியாக இருக்க வேண்டும் என்பது நியதியாக இப்போதும் இருந்து வருகிறது. இதற்குப் பெயர்தான் முக்கு வீடு என்று கூறப்படுகிறது. இந்த மூக்கு வீடு கலாச்சாரம் மதுரை ,தேனி போன்ற மாவட்டங்களில் ஒவ்வொரு மாதிரியாக இருந்தாலும் பல்வேறு மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் தற்போதும் இந்த முக்கு வீடு கலாச்சாரம் தொடர்ந்து வருகிறது. ஒரு பெண்ணிற்கு ஏற்படும் இயற்கையான ஒரு நிகழ்வை தற்போதும் ஒரு அருவருப்பான பார்வையில் பார்ப்பதும் தொடர்ந்தவண்ணம் வருகிறது.
பெற்றோர்கள் ஒவ்வொரு வீட்டிலும் தனது பெண் குழந்தைகளுக்கு மாதவிடாய் பற்றிய புரிதலை சரிவர கூறாமல் அறிவியல் மற்றும் உடல்ரீதியான மாற்றங்கள் என கூற மறந்து விடுகின்றனர். அதேபோன்று பள்ளி ,கல்லூரிகளிலும் இதற்கான தனி கல்வியும் கற்பிக்கப்படவில்லை என்பது நிதர்சனம். தேனி மாவட்டம் போடி அருகே தேவாரம் பேருராட்சிக்கு உட்பட்ட சின்னபொட்டிபுரம் எனும் பகுதியில் தற்போது இந்த முக்கு வீடு கலாச்சாரம் இன்றும் இருந்து வருகிறது. சின்ன பொட்டிபுரம் கிராமத்தை சேர்ந்தவர்களுக்கு ஆடி, மாடு மேய்ப்பதை பிரதான தொழிலாக செய்து வருகின்றனர். இங்கிருக்கும் பெண்கள் வயதுக்கு வந்தாலோ அல்லது மாதவிடாய் காலத்திலோ வீட்டை விட்டு வெளியேறி ஊருக்கு ஒதுக்குபுறத்தில் உள்ள ஒரு அறையில் தங்க வேண்டும். மாதவிடாய் காலம் முடியும் வரையில் இந்த அறையில் இருக்க வேண்டும்.
இவர்களுக்கு தேவையான உணவுகளை அவர்கள் குடும்பத்தை சேர்ந்த பெண்கள் தயார் செய்து இந்த அறையின் வெளியே வைத்து விட்டு சென்று விடுவர். யார் முகத்தையும் பார்க்காமல் உணவை எடுத்துச்செல்ல வேண்டும். மாதவிடாய் காலம் முடியும் வரையில் இந்த அறையை விட்டு வெளியே வரக்கூடாது. யார் முகத்தையும் பார்க்க கூடாது. என்ற பழக்கம் தற்போதும் நடைமுறையில் இருந்து வருகிறது. ஏன் மாத விடாய் காலங்களில் பெண்கள் ஊரை விட்டு இந்த முக்கு வீட்டில் தனிமைப்படுத்தப்படுகிறார்கள் என்ன என்று விசாரித்தால் இந்த மாதவிடாய் காலம் என்பது பெண்களுக்கான தீட்டு காலமாம் என்று கூறுகின்றனர் இந்த ஊர் மக்கள்.
தற்போது கூட பரவாயில்லை அரசு கட்டிக்கொடுத்த சமுதாய கூடத்தை முக்கு விடாக பயன்படுத்துகின்றனர். இந்த சமுதாய கூடத்தில் மின் விளக்கு வசதி, கழிப்பிட வசதிகள் என தற்போது உள்ளது. ஆனால் சில வருடத்திற்கு முன்பு ஓலை குடிசையில் விளக்கு வசதி ஏதுமின்றி இருண்ட குடிசைக்குள் தனிமையாக இருக்க வேண்டும். இவர்களுக்கு சிறிய மண்குடுவையில் உணவு வழங்கப்படும் சூழல் இருந்தது. ஆனால் தற்போது இந்த முக்கு வீடு கொஞ்சம் நவீனப்படுத்தப்பட்டுள்ளது எனவும் கூறலாம். மாதவிடாய் பற்றி பெண்களிடம் பேசினாலோ இந்த நிகழ்வு அவர்களுக்கு சந்தோசமான ஒரு அனுபவமாக இல்லையென்றே கூறுகின்றனர். படித்த ,படிக்காத பெண்கள் தங்களது உடலை ஏற்றுக்கொள்ளும் நிலை ஒரு எதிர்மறையாகவே உள்ளதாக என கூறுகின்றனர் பெண்ணடிமை, பெண்களுக்கான சம உரிமை என பல்வேறு விழிப்புணர்வுகள் இருந்து வந்தாலும் இது போன்ற முக்கு வீடு கலாச்சாரம் தற்போதும் தொடர்ந்து வருவது முகம் சுழிக்க வைப்பதாகவே உள்ளது. மாதவிடாய் காலங்களில் ஒதுக்கி வைத்தல் என்ற முக்கு வீடு நிலையை அகற்றி பெண்களுக்கான சமமான ஒரு நிலையை கொண்டுவரவேண்டுமென்பது எதிர்பார்ப்பாகவே உள்ளது.