மேலும் அறிய
Jallikattu: "இனி ஒரு போட்டியில் மட்டும்தான் அனுமதி.." ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான விதிகள் அறிவிப்பு..!
அவனியாபுரம், அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகளில் ஏதேனும் ஒரு இடத்தில் நடைபெறும் போட்டிகளில் மட்டும்தான் மாடுபிடி வீரர்கள் பங்கேற்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டு_போட்டி
மதுரையில் வருகிற 15-ம் தேதி அவனியாபுரத்திலும், 16-ம் தேதி பாலமேட்டிலும், 17-ம் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளது. இந்நிலையில் இதுகுறித்த கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகள் குறித்தும் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது,
"1. போட்டியை பார்வையிட மற்றும் கலந்துகொள்ளவுள்ள அனைவரும் கொரோனா தடுப்பூசி சான்று மற்றும் RTPCR டெஸ்ட் ரிப்போர்ட் கட்டாயம்.
2. காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் ஏதாவது ஒரு போட்டியில் மட்டுமே கலந்துகொள்ள அனுமதி. மதுரை மாவட்டத்தில் வரும் 15 ஆம் தேதி அவனியாபுரத்திலும், 16ஆம் தேதி பாலமேட்டிலும், 17ஆம்தேதி உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியும் நடைபெறவுள்ளது.

இணையதளம்:
இதனிடையே இந்த போட்டிகளில் பங்கேற்கவுள்ள காளைகளுக்கான மருத்துவ தகுதி சான்று வழங்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டு வாடிவாசல் வர்ணம் தீட்டும் பணி உள்ளிட்ட முன்னேற்பாட்டுபணிகள் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான புதிய நெறிமுறைகளை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
அதன்படி ஜல்லிக்கட்டில் கலந்துகொள்ளவுள்ள மாடுபிடி வீரர்கள் madurai.nic.in இணையதளம் மூலம் தங்களது பெயர்களை பதிவு செய்திடல் வேண்டும். ஜல்லிக்கட்டில் கலந்துகொள்ளவுள்ள மாடுபிடி வீரர்கள் இணையதளத்தில் தங்களது பாஸ்போட் சைஸ் புகைப்படம், வயதிற்கான சான்றிதழ், கொரோனா தடுப்பூசி 2 தவணை செலுத்தியதற்கான சான்றிதழ் முதலியவைகளை அப்லோட் செய்ய வேண்டும்.

ஒரு போட்டியில் மட்டுமே பங்கேற்க வேண்டும்:
போட்டியில் கலந்துகொள்ளும் அனைத்து மாடுபிடி வீரர்களும் 2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று மற்றும் போட்டி நடைபெறும் 2 நாட்களுக்குள் கோவிட் தொற்று இல்லை (RT PCR Test) என்பதற்கான சான்றிதழ் இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவர் எனவும், மதுரை அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுகளில் கலந்துகொள்ளும் காளைகளுக்கான பதிவுகளை madurai.nic.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும் என்றும், பதிவு செய்யப்படும் ஜல்லிக்கட்டு காளை அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஆகிய மூன்று ஜல்லிக்கட்டுகளில் ஏதாவது ஒரு போட்டியில் மட்டுமே கலந்துகொள்ள அனுமதியளிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இதேபோன்று ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துகொள்ளவுள்ள காளையுடன் உரிமையாளர் மற்றும் காளையுடன் நன்கு பழக்கமுள்ள ஒரு உதவியாளர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் எனவும். காளையுடன் வரும் இருவரும் 2 தவணை கொரோனா தடுப்பூசி சான்று கட்டாயம் வைத்திருக்க வேண்டும் எனவும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
8 மணி முதல் 3 மணி வரை போட்டி:
இதேபோன்று அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளை காண வரும் பொதுமக்கள் மற்றும் பணிகளில் ஈடுபடும் அனைத்து துறை அலுவலர்கள், பணியாளர்களும் 2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று மற்றும் போட்டி நடைபெறும் நாளிலிருந்து 2 நாட்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட கொரோனா இல்லா சான்று ஆகியவை வைத்திருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
ஜல்லிக்கட்டு போட்டிகள் காலை 8 மணி முதல் பகல் 3 மணி வரை மட்டுமே நடைபெறும். கூடுதல் நேரம் ஒதுக்குவது குறித்து போட்டி நடைபெறும் போது முடிவு செய்யப்படும். ஒவ்வொரு ஜல்லிக்கட்டு போட்டியிலும் 300 மாடுபிடி வீரர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். அவர்கள் 50 பேர் வீதம், 6 சுற்றுகளாக களம் இறக்கப்படுவார்கள்.
300 வீரர்கள்:
மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு மற்றும் வடமாடு நிகழ்ச்சிகளில் மாடுபிடி வீரர்கள் 300 நபர்களுக்கு மிகாமல் கலந்து கொண்டு நிகழ்ச்சி நடத்த அனுமதிக்கப்படுகிறது. எருது விடும் நிகழ்ச்சியில் 150 வீரர்களுக்கு மிகாமல் கலந்து கொண்டு நிகழ்ச்சி நடத்த அனுமதிக்கப்படுகிறது.
தமிழ்நாடு அரசினால் வெளியிடப்படும் கொரோனா தடுப்பு நடைமுறைகளை பின்பற்றி பார்வையாளர்கள், திறந்த வெளி அரங்கின் அளவிற்கேற்ப (Total capacity) சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் அதிகபட்சமாக 150 பார்வையாளர்கள் அல்லது அனுமதிக்கப்பட்ட இருக்கை எண்ணிக்கையில் 50 சதவிகிதத்திற்கு மிகாமல் இவற்றில் எது குறைவோ அந்த எண்ணிக்கையில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடத்த அரசின் முன் அனுமதி பெற்று பிராணிகள் வதை தடுப்பு (ஜல்லிக்கட்டு நெறிமுறைகள்) விதிகள் 2017, அரசினால் வெளியிடப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் ஆகியவற்றுடன் அரசினால் விதிக்கப்படும் கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் அனைத்தும் பின்பற்றப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ள மாவட்ட நிர்வாகம், ஆண்டுதோறும் அவனியாபுரத்தில் நடைபெறும் போட்டியில் பங்கேற்பவர்கள் பாலமேடு, அலங்காநல்லூர் போட்டியிலும் பங்கேற்பார்கள். ஆனால் இந்த ஆண்டு ஏதேனும் ஒரு இடத்தில் நடைபெறக்கூடிய போட்டியில் மட்டுமே வீரர்கள் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















