திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
காவல்துறையினரின் நடவடிக்கையை கண்டித்து அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட முன் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக முக்கிய நிர்வாகிகள் H.ராஜா உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் கைது.

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் மனுதாரர் தீபம் ஏற்ற நீதிமன்றத்தின் உத்தரவுபடி படி மலையடிவாரத்திற்கு வந்த மனுதாரர் - சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என காரணம் கூறி மனுதாரரை மலையில் ஏற அனுமதி மறுத்த காவல்துறையினர்.
திருப்பரங்குன்றம் தீபம்
மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சி மீதுள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கடந்த 1-ஆம் தேதி உத்தரவிட்டார். இந்நிலையில் உத்தரவுபடி தீபத்தூணில் தீபம் நேற்றைய தினம் ஏற்ற வில்லை இதனை கண்டித்து பாஜகவினர் மற்றும் பல்வேறு இந்து அமைப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து மீண்டும் நேற்று மாலை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் நீதிமன்ற அவமதிப்பு மனு விசாரணைக்கு வந்தபோது மனுதாரர் CISF பாதுகாப்புடன் மலை உச்சியில் உள்ள தீப தூணில் தீபம் ஏற்றலாம் என உத்தரவிட்டிருந்தார். இதனிடையே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் மனுதாரர் மற்றும் CISF படையினருக்கு மலை மேல் செல்ல அனுமதி இல்லை என காவல்துறையினர் கூறி திருப்பி அனுப்பி வைத்தனர். இதையடுத்து இன்று உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மற்றும் தனி நீதிபதி உத்தரவுக்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தனி நீதிபதியின் உத்தரவு ரத்து செய்யக்கூடிய தமிழக அரசின் மனுவை இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு தள்ளுபடி செய்தது. இதனையடுத்து நடைபெற்ற நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணையின் போது நீதிபதி G.R சுவாமிநாதன் காவல் ஆணையர் லோகநாதன் காணொளி மூலமாக ஆஜராக உத்தரவிட்டார். பின்னர் காணொளி மூலமாக காவல் ஆணையர் ஆஜராகினார்.
இதையடுத்து 144 தடை உத்தரவை ரத்து செய்தும், மனுதாரர்கள் தீப தூணுக்கு சென்று தீபம் ஏற்ற வேண்டும் எனவும் அதற்கு மாநகர காவல் துறை ஆணையர் லோகநாதன் தலைமையில் பாதுகாப்பு வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். பின்னர் தீர்ப்பு நகலுடன் திருப்பரங்குன்றம் தீபத்தூண் பகுதிக்கு செல்லும் மலை அடிவாரத்திற்கு மனுதாரர் மற்றும் வழக்கறிஞர்களுடன் வந்தனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறை துணை ஆணையர் இனிக்கோ திவ்யன் 144 தடை உத்தரவு மற்றும் தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும் அதனால் தற்போது அனுமதிக்க முடியாது எனவும் கூறினார். இதனால் துணை ஆணையரிடம் மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது உயர்நீதிமன்ற உத்தரவு நிறைவேற்ற வேண்டுமென மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் அருண் சுவாமிநாதன் கூறிய போது சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டு விடும் என்பதால் தங்களால் அனுமதிக்க முடியாது என கூறினார்.
இதனிடையே பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அப்பகுதிக்கு வருகை தந்த நிலையில் காவல்துறையிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட பின்னரும் மலை மேல் யாரையும் அனுமதிக்க முடியாது என காவல்துறையினர் தெரிவித்தனர். இதனையடுத்து காவல்துறையினருக்கு எதிராகவும் தமிழக அரசுக்கு எதிராகவும் இந்து முன்னணியினர் பாஜகவினர் உள்ளிட்டோர் அதே பகுதியில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா , பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்ட பாஜகவினரையும் இந்து முன்னணி அமைப்புகளை சேர்ந்த 150 க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து மனுதாரர் மற்றும் மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் காவல் ஆணையர் நேரில் வரவேண்டும் என கூறிய நிலையில் நீண்ட நேரமாக காத்திருந்த பின்னர் அந்த பகுதியில் இருந்து புறப்பட்டு சென்றனர்.
அப்போது பேசிய வழக்கறிஞர் அருண் சுவாமிநாதன் : நாளை நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு விசாரணையை சந்திக்க உள்ளதாக தெரிவித்தனர். மேலும் எங்கள தரப்பில் கேவியட் மனுக்களும் தாக்கல் செய்துள்ளதாக தெரிவித்தார். நீதிமன்ற உத்தரவு இருந்தும் நீதிமன்றத்தை உத்தரவை தமிழக அரசும் மாநகர காவல் துறையும் மதிக்கவில்லை என்றார்.





















