Upcoming MPVs: குடும்பமா போக.. தரமா, வசதியா, சொகுசா வரும் 5 புதிய எம்பிவிக்கள் - பட்ஜெட்& ப்ரீமியம், ICE & EV
Upcoming MPVs: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அடுத்தடுத்து அறிமுகப்படுத்தப்பட உள்ள எம்பிவி கார் மாடல்கள் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

Upcoming MPVs: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அடுத்தடுத்து அறிமுகப்படுத்தப்பட உள்ள எம்பிவி கார் மாடல்களின் முதற்கட்ட தகவல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
புதுசா வரும் எம்பிவிக்கள்:
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் எம்பிவி எனப்படும் மல்டி பர்பஸ் வெஹைகிள் பிரிவானது மிகப்பெரிய அளவில் விரிவடைய உள்ளது. இதற்காக அடுத்த இரண்டு ஆண்டுகளில் பல புதிய மாடல்களை சந்தைப்படுத்த, முன்னணி ப்ராண்ட்கள் தயாராகி வருகின்றன. இதில் மாருதி சுசூகி, ஹுண்டாய், நிசான் மற்றும் சிட்ரோயன் ஆகியவற்றின் தரப்பிலிருந்து, இன்ஜின் மற்றும் மின்சார எடிஷன்களில் புதிய மாடல்கள் வெளியாக உள்ளன. இவை வெகுஜன சந்தை மட்டுமின்றி ப்ரீமியம் பிரிவையும் குறிவைக்கும் என தெரிகிறது. அந்த வகையில் 2026-27 காலகட்டத்தில் அறிமுகமாக வாய்ப்புள்ள எம்பிவி கார் மாடல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
அடுத்தடுத்து வரப்போகும் 5 எம்பிவிக்கள்:
1. மாருதி சுசூகி காம்பேக்ட் எம்பிவி:
வெளியாகியுள்ள தகவலின்படி, மாருதி சுசூகி நிறுவனமானது காம்பேக்ட் எம்பிவி ஒன்றின் மீது தீவிரமாக பணியாற்றி வருகிறது. இது ப்ராண்டின் போர்ட்ஃபோலியோவில் சப்-4 மீட்டர் கேட்டகிரியில் எர்டிகாவிற்கு கீழே நிலைநிறுத்தப்பட வாய்ப்புள்ளது. 2027-28 காலகட்டத்தில் சந்தைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படும் சூழலில், வடிவமைப்பு மற்றும் இடவசதி ஆகியவற்றில் ஜப்பான் சந்தையில் விற்பனையில் உள்ள ஸ்பேசியா கார் மாடலின் தாக்கத்தை பெறக்கூடும். சிறிய அளவில் இருந்தாலும் கேபின் இடத்தை அதிகளவில் பயன்படுத்திக் கொண்டு, பட்ஜெட்டில் சந்தைப்படுத்துவது நோக்கமாக உள்ளதாம். குறிப்பாக உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட வலுவான ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜினை பெற வாய்ப்புள்ளதாம்.
2. ஹுண்டாய் ப்ரீமியம் எம்பிவி
ஹுண்டாய் அறிமுகப்படுத்த உள்ள புதிய எம்பிவி ஆனது, ப்ரீமியம் பிரிவில் அமரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹுண்டாய் தரப்பில் சர்வதேச சந்தையில் விற்பனையில் உள்ள ஸ்டார்கேசர் மாடலிலிருந்து, டிசைன் மற்றும் பொசிசனிங் விவரங்களின் தாக்கத்தை இந்த எம்பிவி பெறக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த லிமிடெட் செக்மெண்டில் தற்போதைய சூழலில், குறிப்பிட்ட சில ப்ராண்ட்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், ஹுண்டாய் அதை எப்படி சமாளிக்கும் மற்றும் கையாளும் என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.
3. மாருதி சுசூகி YMC:
மாருதி சுசூகி நிறுவனமானது YMC என்ற கோட்நேமை கொண்ட, 3 வரிசை இருக்கைகளுடன் கூடிய புதிய மின்சார எம்பிவி காரை தயாரித்து வருவதாக துறைசார் தகவல்கள் தெரிவிக்கின்றன. ப்ராண்டின் மின்சார கார்களுக்கான போர்ட்ஃபோலியோவில் இந்த எம்பிவியானது விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ள, இ-விட்டாராவிர்கு மேலே நிலைநிறுத்தப்பட உள்ளது. YMC மாடலானது 2026ம் ஆண்டின் இறுதியில் அல்லது 2027ம் ஆண்டின் தொடக்கத்தில் சந்தைப்படுத்தப்படலாம். இதன் பேட்டரி பேக்குகள், எலெக்ட்ரிக் மோட்டார்கள் மற்றும் முக்கிய மின்சார உபகரணங்கள் ஆகியவை, இ-விட்டாராவில் இருந்து அப்படியே கடன் வாங்கப்பட வாய்ப்புள்ளது. எதிர்காலத்தில் இதன் தாக்கத்தில் உருவாக்கப்பட்ட டொயோட்டா எடிஷனும் இந்திய சந்தையில் விற்பனைக்கு வரலாம்.
4. சிட்ரோயன் இ-ஸ்பேஸ்டூரர்
இந்திய சந்தையில் இ-ஸ்பேஸ்டூரர் எம்பிவியை அறிமுகப்படுத்த சிட்ரோயன் நிறுவனம் தயாராகி வருவதாக கூறப்படுகிறது. சர்வதேச சந்தையில் இந்த மின்சார எம்பிவி ஆனது நிலையான மற்றும் நீட்டிக்கப்பட்ட வீல்பேஸ் அளவை கொண்ட, தேவைக்கேற்ற இடவசதிகளுடன் பல தரப்பட்ட கான்ஃபிகரேஷனில் விற்பனை செய்யப்படுகிறது. இதில் இடம்பெற்றுள்ள 75 kWh பேட்டரி பேக்கை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால், 348 கிலோ மீட்டர் தூரம் ரேஞ்ச் அளிக்கும் என கூறப்படுகிறது.
5. நிசான் க்ராவைட்:
ரெனால்ட் ட்ரைபரில் பயன்படுத்தப்பட்ட அதே ப்ளாட்ஃபார்மை கொண்டு, அதற்கு போட்டியாக இந்திய சந்தையில் தனது போர்ட்ஃபோலியோவை வலுப்படுத்தும் விதமாக, நிசான் நிறுவனமானது க்ராவைட் என்ற பெயரில் புதிய மூன்று வரிசை இருக்கை எம்பிவியை அறிமுகப்படுத்த உள்ளது. 2026 புத்தாண்டின் முதல் மாதமான ஜனவரியில் அறிமுகப்படுத்தப்பட்டு, இதற்கான விநியோகம் மார்ச் மாதம் தொடங்க உள்ளது. காரானது உள்ளூர்மயமாக்கப்பட்டு, பட்ஜெட் விலையில் விற்பனைக்கு கொண்டுவரப்பட உள்ளது. இந்த 7 சீட்டரானது மிகவும் பழக்கமான, 1.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜினை, நேட்சுரலி ஆஸ்பிரேடட் மற்றும் டர்போ சார்ஜ்ட் எடிஷனில் கொண்டிருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.





















