Jana Nayagan vs Parasakthi: ரிலீசுக்கு முன்பே மல்லுகட்டும் ஜனநாயகன் - பராசக்தி.. ஒரே நாளில் ஆடியோ லாஞ்ச் ஒளிபரப்பு!
விஜய்யின் ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியும், சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியும் ஒரே நாளில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.

Jana Nayagan vs Parasakthi: தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரமாக உலா வருபவர் நடிகர் விஜய். தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கிய பிறகு சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள விஜய்யின் கடைசி படம் ஜனநாயகன். இந்த படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் 9ம் தேதி உலகெங்கும் ரிலீசாகிறது.
ரிலீசுக்கு முன்பே மல்லுகட்டு:
ஜனநாயகன் படத்திற்கு போட்டியாக 10ம் தேதி ரிலீசாகிறது சிவகார்த்திகேயனின் பராசக்தி. காமெடி படங்கள் மூலமாக தமிழில் கதாநாயகனாக அறிமுகமான சிவகார்த்திகேயன், அமரன் படத்திற்கு பிறகு ஒரு பண்பட்ட கதாநாயகனாகவும், நடிகராகவும் மாறியுள்ளார். இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தை மையமாக கொண்டு உருவாகியுள்ளது இந்த படம்.
இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சி:
விஜய்யின் கடைசி படம் என்பதால் ஜனநாயகன் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ள நிலையில், பராசக்தி அதற்கு போட்டியாக களமிறங்கியுள்ளது. பொங்கல் போட்டியாக இந்த இரண்டு படங்களும் திரையில் 9ம் தேதி, 10ம் தேதி என்று ரிலீசாக உள்ள நிலையில் அதற்கு முன்னதாகவே இசை வெளியீட்டு விழாவில் மோதிக் கொள்கின்றனர்.
மலேசியாவில் பிரம்மாண்டமாக நடந்த விஜய்யின் ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 3ம் தேதி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிலையில், அதே 3ம் தேதி சன் தொலைக்காட்சியில் சிவகார்த்திகேயனின் பராசக்தி இசை வெளியீட்டு விழா ஒளிபரப்பாகிறது.
இணையத்தில் நடக்கும் மல்லுகட்டு:
ஏற்கனவே இணையத்தில் இந்த இரண்டு படங்களின் ரசிகர்களும் ஒருவருக்கு ஒருவர் மோதிக் கொண்டு இருக்கின்றனர். மேலும், ஜனநாயகன் - பராசக்தி படத்தின் மோதல் என்பது விஜய் - சிவகார்த்திகேயன் படங்களின் மோதலாக பார்க்கப்படாமல் தவெக - திமுக மோதலாகவே இணையத்தில் சண்டை நடந்து வருகிறது.
எச்.வினோத் இயக்கியுள்ள ஜனநாயகன் படத்தை கன்னட தயாரிப்பாளரான கேவிஎன் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. சுதா கொங்கரா இயக்கியுள்ள பராசக்தி படத்தை டான் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. ரெட்ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் அதை விநியோகம் செய்கிறது.
காத்திருக்கும் தேர்தல்:
தமிழ்நாட்டில் இந்தாண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தலுக்கு முன்பு தனது படம் மூலமாக மிகப்பெரிய பரப்புரையை மேற்கொள்ள விஜய் வியூகம் வகுத்துள்ளார். பராசக்தி படமும் இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தை மையமாக கொண்டு உருவாகிய படம் என்பதால் இந்த படம் மூலமாக திமுக-வின் இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்ட வரலாறு மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
படம் வெளியாவது வரை, படம் வெளியான ஒரு வார காலத்திற்கு இணையத்தில் இந்த இரண்டு படங்களுக்கான மோதல் அரங்கேறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.





















