50 சதவீத கூலி உயர்வு, 20 சதவிகித போனஸ் வேண்டும் - விசைத்தறி தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்
இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளார்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் நாள் ஒன்றுக்கு 30 லட்சம் ரூபாய் அளவிற்கு ஜவுளி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே விசைத்தறி தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டு வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 2022 ஆம் ஆண்டு போடப்பட்ட கூலி உயர்வு ஒப்பந்தம் டிசம்பர் 31ம் தேதி முடிவடைந்த நிலையில், 50 சதவீத கூலி உயர்வு, 20 சதவிகித போனஸ் கேட்டு ஜனவரி 1ம் தேதி நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கி உள்ள நிலையில், இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளார்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் நாள் ஒன்றுக்கு 30 லட்சம் ரூபாய் அளவிற்கு ஜவுளி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
‘போராட்டம்லாம் இல்லை; புது ரூட் எடுப்போம்’ - அண்ணா பல்கலை விவகாரத்தில் டைம் கேட்கும் விஜய்!
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள டி.சுப்புலாபுரத்தில் செயல்பட்டு வரும் 36 விசைத்தறிக்கூடங்களில் 2000க்கும் மேற்பட்ட விசைத்தறி தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இது தவிர பாவு ஓடுதல், பசை மிசின் இயக்குதல், தப்பா ஓட்டுதல் உள்ளிட்ட சார்பு தொழில்களிலும் 1000 க்கும் மேற்பட்ட உசத்துறை தொழிலாளர்கள் பணி புரிகின்றனர். இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை விசைத்தறி தொழிலாளர்களுக்கு கூலி வேலை மற்றும் போனஸ் குறித்து ஒப்பந்தம் போடப்படுவது வழக்கம். இந்த நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதி முதல் போடப்பட்டு செயல்பாட்டில் இருந்த ஒப்பந்தம் டிசம்பர் 31ம் தேதி முடிவடைந்தது. ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில் புதிய ஒப்பந்தம் போடுவதற்கு விசைத்தறி உரிமையாளர்கள் முன் வரவில்லை.
இதனால் ஜனவரி1ம் தேதி நேற்று பிற்பகல் முதல் விசைத்தறி தொழிலாளர்கள் 50 சதவீத கூலி உயர்வு, 20% கேட்டு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக, திமுக, காங்கிரஸ், பிஜேபி, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அனைத்து தொழிற் சங்கங்களைச் சேர்ந்த விசைத்தறி தொழிலாளர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதால் அனைத்து விசைத் தறி கூடங்களும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் அனைத்து தொழிற்சங்கத்தினர் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் 50 சதவீத கூலி உயர்வு மற்றும் 20 சதவிகித போனஸ் மற்றும் விசைத்தறிக்கூடங்களில் குடிநீர், கழிப்பறை,மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க உறுதி அளிக்கும் வரை காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டது.
நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கி உள்ள நிலையில், இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளார்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் நாள் ஒன்றுக்கு 30 லட்சம் ரூபாய் அளவிற்கு ஜவுளி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் போராட்டம் தொடரும் பட்சத்தில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள உற்பத்தி பாதிக்கப்படுவதோடு தொழிலாளர்களும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். எனவே விசைத்தறி உரிமையாளர்களுடன் தமிழ்நாடு அரசு பேச்சுவார்த்தை நடத்தி ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர் தொழிலாளிகள். கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடர்ந்து 15 நாட்களுக்கு மேல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு, பின்னர் தொழிலாளர்களின் கோரிக்கை ஏற்கப்பட்ட பின்னர் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.