Minister Anbil Mahesh: அரசுப் பள்ளிகள் எங்களின் பிள்ளைகள்; தாரை வார்க்கமாட்டோம்- அமைச்சர் அன்பில் உருக்கம்!
எனது தரப்பு விளக்கம் எதையும் கேட்காமல் கண்டனம் தெரிவிக்கின்றனர். அவ்வாறு செய்வோருக்கு, பள்ளிக் கல்வித்துறை சார்பில் என்னுடைய வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்- அமைச்சர் அன்பில் மகேஸ்.
அரசுப் பள்ளிகள் எங்களின் பிள்ளைகள் என்றும் அவற்றைத் தத்துக் கொடுக்கவில்லை; தாரை வார்க்கவும் மாட்டோம் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றுங்கள், நாங்களே கல்வியைப் பார்த்துக் கொள்கிறோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசுப் பள்ளிகளைத் தனியாருக்குத் தத்துக் கொடுப்பதா?
முன்னதாக அரசுப் பள்ளிகளைத் தனியாருக்குத் தத்துக் கொடுப்பதா? என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்து இருந்தது.
இதற்கு பதிலளித்த தமிழ்நாடு தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு, அரசு பள்ளிகளை தத்தெடுக்கப் போகிறோம் என்று எந்த இடத்திலும் நாங்கள் சொல்லவில்லை, அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகளும் அதுபோன்று எதுவும் கூறவில்லை என்று விளக்கம் அளித்து இருந்தது. சொல்லப்படாத ஒரு வார்த்தையை அரசியலாக்க வேண்டாம் என்றும் வலியுறுத்தி இருந்தது.
இந்த நிலையில் அமைச்சர் அன்பில் மகேஸும் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது அவர் பேசியதாவது:
என்னுடைய வன்மையான கண்டனங்கள்
''செய்திகளின் உண்மைத் தன்மையை அறிந்துகொண்டு பேச வேண்டும். தாரை வார்ப்பு, தத்தெடுப்பு என்று நிகழ்ச்சியில் பேசப்பட்டதா? உண்மையை அறியாமல், தவறுதலாகப் புரிந்துகொண்டு அரசுப் பள்ளிகள் தாரை வார்ப்பு என்று கூறுகின்றனர். கண்டித்து அறிக்கை வெளியிடுகின்றனர்.
எனது தரப்பு விளக்கம் எதையும் கேட்காமல் கண்டனம் தெரிவிக்கின்றனர். அவ்வாறு செய்வோருக்கு, பள்ளிக் கல்வித்துறை சார்பில் என்னுடைய வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவசரம் அவசரமாக கண்டனம் தெரிவிப்பது ஏன்?
அரசுப் பள்ளிகளுக்கு தனியார் பள்ளிகள் சிஎஸ்ஆர் மூலம் உதவி செய்கிறோம் என்றுதான் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதற்கு நாங்கள் நன்றி மட்டுமே தெரிவித்தோம். விளக்கமே கேட்காமல் அவசரம் அவசரமாக கண்டனம் தெரிவிப்பது ஏன்?
நிதி தராமல் மத்திய அரசு மிரட்டுகிறது. கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றுங்கள், நாங்களே கல்வியைப் பார்த்துக் கொள்கிறோம்.
அரசுப் பள்ளிகள் எங்களின் பிள்ளைகள்
அரசுப் பள்ளிகள் எங்களின் பிள்ளைகள். அவற்றைத் தத்துக் கொடுக்கவில்லை. கொடுக்க வேண்டிய அவசியமும் இல்லை. அரசுப் பள்ளிகளைத் தாரை வார்க்கவும் மாட்டோம்.’’
இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.