”இனி ஜெயிலுக்கு வரமாட்டோம்” உறுதிமொழி எடுத்த கைதிகள்! | Salem Prisoners new year
இனிமேல் சிறைக்கு வர மாட்டோம் என உறுதிமொழி எடுத்து சிறை கைதிகள் கேக் வெட்டிய சம்பவம் கவனத்தை ஈர்த்துள்ளது.
உலகம் முழுவதும் ஆங்கில புத்தாண்டு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சேலம் மத்திய சிறையில் கைதிகள் இணைந்து புத்தாண்டு கொண்டாட்டம் மற்றும் பட்டிமன்றங்களில் பங்கேற்று அசத்தியுள்ளனர்.
சேலம் மத்திய சிறையில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் என 1000க்கும் மேற்பட்டோர் உள்ளனர். இவர்களுடைய மன நலனை மேம்படுத்த சிறை நிர்வாகம் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. சிறை வளாகத்திலேயே கைதிகள் நடத்தும் பண்பலையும் இயங்கி வருகிறது. இதனிடையே ஆங்கில புத்தாண்டு தின விழா சேலம் மத்திய சிறை வளாகத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
மத்திய சிறை கண்காணிப்பாளர் வினோத் முன்னிலையில் 200க்கும் மேற்பட்ட கைதிகள் ஒன்று கூடி இனிமேல் சிறைக்கு வர மாட்டோம் என உறுதிமொழி எடுத்துக்கொண்டு கேக் வெட்டி புத்தாண்டினை கொண்டாடியுள்ளனர். இனிமேல் சிறைக்கு வர மாட்டோம் என உறுதிமொழி எடுத்துக்கொண்ட சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அதேபோல், குழந்தை திருமணத்தை தடுப்பது தொடர்பாக நடைபெற்ற பட்டிமன்றத்திலும் சிறைக் கைதிகள் ஆர்வத்துடன் பங்கேற்று பேசியுள்ளனர். இது போன்ற நிகழ்வுகள் மூலம் சிறைக்கதிகள் மனம் திருந்தி தண்டனை காலம் முடிந்து வெளியே செல்லும்போது புதிய வாழ்க்கையை தொடங்க முடியும் என மனநல ஆலோசகர்கள் தெரிவித்துள்ளனர்.