Minister Moorthy speech: ’’நான் பொதுவானவன்; அது அப்போ பேசினது’’ ஆண்ட பரம்பரை பேச்சு பற்றி அமைச்சர் மூர்த்தி விளக்கம்!
நான் பேசிய வீடியோவை எடிட் செய்துள்ளனர். அந்த வீடியோவை முழுமையாக பாருங்கள். 2 மாதங்களுக்கு முன்பு பேசியது எதற்காக தற்போது வெளியிடப்பட்டுள்ளது என தெரியவில்லை- அமைச்சர் மூர்த்தி.
''ஆண்ட பரம்பரை எனப் பேசியது குறித்த வீடியோவை எடிட் செய்துள்ளனர். அந்த வீடியோவை முழுமையாக பாருங்கள். 2 மாதங்களுக்கு முன்பு பேசியது எதற்காக தற்போது வெளியிடப்பட்டுள்ளது என தெரியவில்லை'' என்று அமைச்சர் மூர்த்தி விளக்கம் அளித்துள்ளார்.
மதுரை முக்குலத்தோர் இலவச கல்வி மற்றும் வேலை வாய்ப்பு அறக்கட்டளையில் படித்து கடந்த இரண்டு ஆண்டுகளில் அரசுப் பணிக்கு தேர்வாகியுள்ள 421 முக்குலத்து மாணவ மாணவிகளுக்கு பாராட்டு விழா நடந்தது. இந்த பாராட்டு விழாவில் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி கலந்துகொண்டு பேசினார். நிகழ்ச்சியில் அமைச்சர் சாதி ரீதியாகப் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது ஆண்ட பரம்பரை
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மூர்த்தி, ’’நம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் சுதந்திர போராட்டத்தில் 5,000 பேர், 10,000 பேர் இறந்துள்ளனர். அதை நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும். நம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் சுதந்திர போராட்டத்தில் முன் நின்றார்கள். அழகர் கோயில் உள்ளிட்ட இடங்கள் கொள்ளையடிக்கப்பட்டபோது, அதை எதிர்த்து போரிட்டவர்கள் இந்த சமூகத்தினர்.
ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்துச் சென்றபோது, அவர்களுக்கு எதிராக போராட்டத்தில், நம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் 5 ஆயிரம் பேர் இறந்த வரலாற்றை புரட்டி பார்க்க வேண்டும். தற்போது, 5 பேர் இறந்தால் கூட பெரிதாக பேசப்படுகிறது. இது ஆண்ட பரம்பரை’’ என்று கூறி இருந்தார்.
அமைச்சர் மூர்த்தி விளக்கம்
இது கடுமையான சர்ச்சைகளை ஏற்படுத்தியது. சாதி ஒழிப்பு நிலைப்பாட்டைக் கொண்டுள்ள திமுகவில் இருந்துகொண்டு, ஓர் அமைச்சரே இவ்வாறு பேசுவதா என்று கண்டனம் எழுந்தது. இந்த நிலையில், ஆண்ட பரம்பரை பேச்சு குறித்து அமைச்சர் மூர்த்தி விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, ''நான் பேசிய வீடியோவை எடிட் செய்துள்ளனர். அந்த வீடியோவை முழுமையாக பாருங்கள். 2 மாதங்களுக்கு முன்பு பேசியது எதற்காக தற்போது வெளியிடப்பட்டுள்ளது என தெரியவில்லை.
எல்லோருக்கும் நான் பொது
ராஜராஜ சோழன் காலத்தில் இருந்து உள்ளதை கூறினேன். அமைச்சராகிய நான் அனைத்து சமூகத்தினருக்கும் ஆனவன். எல்லோருக்கும் நான் பொதுவானவர். அரசால் தேர்வு செய்யப்பட்ட நீங்கள் எல்லோருக்கும் பொதுவானவர்களாக இருக்க வேண்டும் என்றே அந்த நிகழ்ச்சியில் பேசி இருந்தேன்'' என்றும் அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.