‛உங்க விவசாய ஆர்வத்திற்கு அளவே இல்லையா...’ கஞ்சா பயிரிட்ட 5 பேர் கைது: 160 கிலோ பறிமுதல்!
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் இத்தகைய சட்டவிரோத செயல்கள் அவ்வப்போது அரங்கேறிய வண்ணம் இருப்பது சமூகத்திற்கு ஆபத்தானதாக பார்க்கப்படுகிறது.
தேனி மாவட்டம் வருசநாடு அருகே ஓயாம்பாறை மலைப்பகுதி அமைந்துள்ளது. இயற்கை எழில் சூழ்ந்த மேற்குத் தொடர்ச்சி மலையின் ஓர் அங்கமாக விளங்கும் ஓயாம்பாறை பகுதியில் பல்வேறு விதமான தாவரங்கள் வளர்ந்துள்ளன. இதற்கிடையில் சட்டவிரோத செயல்பாடுகளும் அரங்கேறுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
‛வேடிக்கை பார்ப்பவன் கூட கேலியே செய்வான்...’ விரக்தியில் சினேகா கணவர் பிரசன்னா!
சில நாட்களுக்கு முன்பு ஓயாம்பாறை மலைப்பகுதியில் கஞ்சா செடிகள் பயிரிடப்பட்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. ஆண்டிப்பட்டி துணைகாவல் கண்காணிப்பாளர் ராமலிங்கம், வருசநாடு ஆய்வாளர் அருண் பாண்டியன் ஆகியோர் தலைமையிலான போலீசார் 10க்கும் மேற்பட்டோர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
இந்த தொடர் சோதனையில் கஞ்சா பயிர்கள் விளைவிக்கப்பட்டிருந்ததும். 60க்கும் மேற்பட்ட குழிகளில் கஞ்சா பயிரிடப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இதுபற்றி விசாரணை செய்தபோது 40 நாட்களான பயிர்கள் என்று தெரியவந்துள்ளது. 160 கிலோ எடையுள்ள பச்சை கஞ்சாவை போலீசார் அங்கேயே அழித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எஞ்சிய கஞ்சாவை மூட்டைகளில் வைத்து வருசநாடு காவல்நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.
இந்த சட்டவிரோத செயல்பாடுகள் குறித்து விசாரித்த போலீசார், கஞ்சா பயிரிட்ட காந்தி கிராமத்தை சேர்ந்த பழனிசாமி, வாலிப்பாறை கிராமத்தை சேர்ந்த சந்திரன், தும்மக்குண்டு கிராமத்தை சேர்ந்த பெருமாள், தண்டியன்குளம் கிராமத்தை சேர்ந்த பெருமாள் மற்றும் செல்வம் என 5 பேர் சிக்கினர். அவர்களை கைது செய்த போலீசார், ஆண்டிப்பட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விட்டு சிறையில் அடைத்தனர்.
விரைவில் அவர்களிடம் அடுத்தகட்ட விசாரணை நடத்தப்படும் என்று கூறப்படுகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் இத்தகைய சட்டவிரோத செயல்கள் அவ்வப்போது அரங்கேறிய வண்ணம் இருப்பது சமூகத்திற்கு ஆபத்தானதாக பார்க்கப்படுகிறது. எனவே போலீசார் ரோந்து பணிகளை தீவிரப்படுத்தி கஞ்சா பயிரிடுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்