தேனியில் பயோ மெட்ரிக் முறையால் ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்க முடியாமல் தவிக்கும் மக்கள்...!
தேனி மாவட்டத்தில் நியாய விலைக் கடைகளில் ரேசன் பொருட்கள் வாங்க பயன்படுத்தப்படும் பயோமெட்ரிக் முறையில் பயணாளிகள் பல்வேறு சிக்கல்களை சந்திப்பதாக புகார் எழுந்துள்ளது.
நியாயவிலை கடைகளில் நடைமுறையிலுள்ள பயோமெட்ரிக் முறையில் பல சிக்கல்கள் உள்ளதால், பயனாளிகள் ரேஷன் பொருட்களை வாங்க முடியாமல் தவித்து வருகின்றனர். இதனால் நவீன பயோமெட்ரிக் இயந்திரத்தை பயன்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் நியாய விலைக் கடைகளில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் பயோமெட்ரிக் முறை நடைமுறைக்கு வந்தது. அதன் மூலம் ஸ்மார்ட் கார்டில் இடம்பெற்றுள்ள குடும்ப உறுப்பினர்கள் யாராவது ஒருவர் மட்டுமே பொருட்களை வாங்கமுடியும். தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளில் இந்த பயோ மெட்ரிக் முறையிலேயே பொருள்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் இந்த பயோ மெட்ரிக் முறை சரியாக வேலை செய்வதில்லை என பொதுமக்கள் மத்தியில் இந்த திட்டம் அதிருத்தியை ஏற்படுத்தி உள்ளதாக தெரிகிறது.
தேனி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான நியாய விலைக் கடைகளில், பயோ மெட்ரிக் முறையில் பயனாளிகள் விரல் ரேகை பதிவாகாததால், பயனாளிகள் பொருட்கள் வாங்க முடியாமல் தவிக்கின்றனர். இலவச அரிசி, பருப்பு, எண்ணெய்,கோதுமை போன்ற பொருட்கள் வாங்க ரேஷன் கடைகளில் பயோ மெட்ரிக் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. பயனாளியின் ஆதார் அட்டையில் உள்ள விரல் ரேகை பொருட்கள் வாங்கும்போது வைக்கப்படும் விரல் ரேகையுடன் ஒத்துப்போக வேண்டும். ஆனால் பயனாளிகள் விரல் ரேகையை பதிவு செய்யும் போது பயோ மெட்ரிக் இயந்திரம் ஏற்க மறுக்கிறது. பயனாளிகளின் விரல் ரேகை பதிவாகவில்லை என ரேஷன் பொருட்களை தராமல் பணியாளர்கள் திருப்பி அனுப்புவதாக பொது மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் பயனாளிகள் ஆதார் அட்டையில் விரல் ரேகையை புதுப்பிக்க தாலுகா அலுவலகம் செல்ல வேண்டிய நிலை உள்ளது.
தாலுகா அலுவலக இ-சேவை மையத்தில் விரல் ரேகை அப்டேட் செய்வதற்கு தினமும் பலர் கூடுகின்றனர். ஆனால் தாலுகா அலுவலக இ-சேவை மையத்தில் தினமும் 50 பேருக்கு மட்டுமே டோக்கன் வழங்கி அவர்களுக்கான குறை சரிசெய்யப்படுகிறது. மற்றவர்கள் மறுநாள் வந்து காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. மேலும் ஆதார் அட்டையில் புதுப்பித்து அப்டேட் ஆகி வருவதற்கு ஒரு வாரகாலம் ஆவதால், அந்த ஒரு வாரம் நியாயவிலைக் கடைகளில் போடப்படும் பொருட்களை வாங்க முடியவில்லை என பயனாளிகள் வருத்தம் தெரிவிக்கின்றனர். தேனி மாவட்டம் முழுவதும் இதே நிலைதான் காணப்படுகிறது. எனவே சிக்னல், நெட் ஒர்க் குறைபாடு தவிர்த்து நியாய விலைக் கடைகளில் நவீன பயோ மெட்ரிக் இயந்திரம் பயன்படுத்த மாவட்ட நிர்வாகம் நட வடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களிடையே வேண்டுகோள் எழுந்துள்ளது.
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டத்தின் கீழ் தேனி மாவட்டத்தில் முதல் அர்ச்சகர் நியமனம்...!
கண்ணகி விண்ணுகலம் சென்ற பத்தினிக்கோட்டை... இது கம்பம் நகரம் உருவான கதை..!