கண்ணகி விண்ணுகலம் சென்ற பத்தினிக்கோட்டை... இது கம்பம் நகரம் உருவான கதை..!
’’சிலப்பதிகாரத்தில் மதுரையை எரித்த கண்ணகி வைகை கரை வழியே மேற்கு நோக்கி நடந்து வந்து கம்பம் நகர் அருகே உள்ள பத்தினி கோட்டையில் விண்ணேறினால் என்பது வரலாறு கூறும் சான்று’’
தேனி மாவட்டத்தில் உள்ள பழமையான நகரங்களில் கம்பமும் ஒன்று. சிலப்பதிகாரத்தில் மதுரையை எரித்த கண்ணகி வைகை கரை வழியே மேற்கு நோக்கி நடந்து வந்து கம்பம் நகர் அருகே உள்ள பத்தினி கோட்டையில் விண்ணேறினால் என்பது வரலாறு கூறும் சான்று. கம்பம் என்ற பெயரே வித்தியாசமானதுதான், கம்பம் என்பதன் பொருள் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. கம்ப நாயக்கன் மற்றும் உத்தம நாயக்கன் என்ற இரு குறுநில அரசர்கள் ஆட்சி செய்த பகுதி என்பதால் கம்பம் என்றும் உத்தமபுரம் என்றும் பெயர் வந்ததாக கூறப்படுகிறது. தற்போது கம்பம், உத்தமபுரம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய நகராட்சியாக கம்பம் நகராட்சி விளங்குகிறது.
வரலாறு :-
விஜயநகர சாம்ராஜ்ஜியதில் இருந்த கம்பநாயக்கர், தமிழகத்தின் தென்பகுதிகள் மீது கிபி 1374 படை எடுத்தார். இப்பகுதியை ஆண்ட மன்னனை வென்று இப்பகுதியில் பெரிய கோட்டை கட்டி ஆட்சி செய்ததால் கம்பம் என்று பெயர் வந்ததாக வரலாற்று சான்றுகள் கூறுகின்றன. மதுரையை ஆண்ட விஸ்வநாத நாயக்கர் கம்பம், கூடலூர் பகுதியை கைப்பற்ற தனது படைத் தளபதி ராம்பத்திர நாயக்கரை அனுப்பியுள்ளார். அப்போது கம்பத்தை ஆண்ட மன்னனுக்கும், ராம்பத்திர நாயகருக்கும் இடையே கம்பம், கூடலூர் பகுதியை கைப்பற்ற பெரும் போர் ஏற்பட்டு உள்ளது. போர் முடிந்த பின் வெற்றி பெற்ற மன்னன், கம்பத்தில் ஒரு கோட்டையைக் கட்டி அந்தக் கோட்டைக்குள் கம்பராயப்பெருமாள், காசிவிஸ்வநாதர் கோயிலை கட்டி உள்ளார்.
கோயிலை சுற்றி பெரிய கோட்டை கட்டப்பட்டு அந்த கோட்டையில் முன்பகுதியில் போர்வீரர்கள் தங்குவதற்கு கட்டிடங்களையும் கட்டியுள்ளார் அந்தக் கட்டிடங்கள் மீது எதிரிகளை கண்காணிக்க கண்காணிப்பு கோபுரங்களும் கட்டப்பட்டுள்ளது.
அந்த கண்காணிப்பு கோபுரம் ஒன்று தற்போது மொட்டையாண்டி கோயிலாக உள்ளது. இந்தக் கோயில் கம்பம்,உத்தமபுரம் என்ற இரண்டு கிராமங்களின் மையப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. இரண்டு கிராமங்களையும் பிரிக்கும் மையமாகவும் இங்கு உள்ளது. அதோடு விஸ்வநாதர் ஆட்சிக்காலத்தில் கம்ப நாயக்கர், உத்தம நாயக்கர் என்ற இரண்டு ஜமீன்தார்கள் சகோதரர்களாக இருந்து இப்பகுதியை ஆண்டுள்ளனர்.
கம்பராமாயண பெருமாள், காசி விசுவநாதர் கோயில் கோவிலும், கம்பம் கௌமாரியம்மன் திருக்கோவிலும் கம்பத்தின் அடையாளமாக விளங்குகிறது. தமிழக கேரள எல்லையை இணைக்கும் முக்கிய நகரமாக இருப்பதாலும் இந்த நகரத்தின் வளர்ச்சி வெகு விரைவாக வளர்ச்சி அடைந்து வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற
'இந்த வேளாண் பட்ஜெட்ல எங்களுக்கு ஒன்னுமே இல்ல'' - புலம்பும் தென் மாவட்ட விவசாயிகள்!