உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கவுன்சலிங்.. விசாரணை ஒத்திவைப்பு
ஓராண்டிற்குள் அடுத்த கவுன்சலிங்கில் பங்கேற்க முடியாது. பல மனுதாரர்கள் முந்தைய கவுன்சலிங்கில் பங்கேற்றுள்ளனர்

நீதிமன்றச் செய்திகள்
உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கவுன்சலிங்கை பொது மாறுதல் கவுன்சலிங் நடத்திய பிறகு நடத்த உத்தரவிட கோரிய வழக்குகள்.
தற்போதைய நிலை அறிக்கையைத் தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை.
பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கவுன்சலிங் வரும் 12ம் தேதி நடக்கிறது. பொது மாறுதல் கவுன்சலிங் நடத்திய பிறகே, பதவி உயர்வு கவுன்சலிங் நடத்துமாறு உத்தரவிட வேண்டுமென கூறியிருந்தனர்.இந்த மனுவை நீதிபதி ஜி.சந்திரசேகர் விசாரித்தார்.அரசு தரப்பில், ஜனவரி மற்றும் மார்ச்சில் இரு கவுன்சிலுங்கும் நடந்துள்ளது. தற்போது பதவி உயர்வுக்கான கவுன்சலிங் நடக்கிறது. ஓராண்டிற்குள் அடுத்த கவுன்சலிங்கில் பங்கேற்க முடியாது. பல மனுதாரர்கள் முந்தைய கவுன்சலிங்கில் பங்கேற்றுள்ளனர் என கூறப்பட்டது.
இதையடுத்து நீதிபதி, அரசுத் தரப்பில் தற்போதைய நிலை குறித்த அறிக்கைய தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை வரும் 11ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
புதுக்கோட்டை மாவட்டம், மனவிடுதி கிராமத்தில் வனப்பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்றக் கோரிய வழக்கில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.
புதுக்கோட்டை மாவட்டம், மனவிடுதி கிராமத்தை சேர்ந்த சிவகுமார் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனு.
அதில், "புதுக்கோட்டை மாவட்டம் மனவிடுதி கிராமம் பகுதியில் 2000 விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர்.பல்வேறு போராட்டங்களுக்கு பின் 2019ஆம் ஆண்டு மனவிடுதி கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டது.அதன் பின் 2021ஆம் ஆண்டு மனவிடுதி கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் போதிய வசதி இல்லை எனக் கூறி வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு நீதிமன்ற வழிகாட்டுதலின்படி மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவிட்டார்.
அதன்படி பழைய நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் நெல் கொள்முதல் நிலையம் மாற்றி அமைக்கப்பட்டது.புதிதாக அமைக்கப்பட்டுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையம் வனப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் இந்த இடத்திற்கு செல்வதற்கு செலவு அதிகமாக உள்ளது மேலும் வனவிலங்குகள் தாக்குவதற்கான அபாயம் உள்ளது. சாலை வசதியும் சரியாக இல்லை.
எனவே, புதிதாக வனப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை நீதிமன்ற உத்தரவின்படி அனைத்து வசதிகளும் இருக்கக்கூடிய வகையில் வேறு இடத்திற்கு மாற்றி உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது நீதிபதி, வழக்கு குறித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூலை 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

