மதுரையில் ஹனுமன் கோவிலில் தூய்மை பணி மேற்கொண்ட மத்திய இணையமைச்சர் எல்.முருகன்
மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு தமிழக அரசு விடுமுறை அளிக்க வேண்டும் என முருகன் பேட்டி
இந்தியா முழுவதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அயோத்தி ராமர் கோயில் நாளை திறக்கப்பட உள்ளது. ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு, ஒட்டுமொத்த அயோத்தியும் விழாக்கோலம் பூண்டுள்ளது.
ஏற்கனவே ராமர் கோயிலின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பக்தர்களை நெகிழ வைத்துள்ளது. தற்போது, அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலின் சாட்டிலைட் புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. விண்ணில் இருந்து ராமர் கோயில் என்ற வாசகத்துடன் இந்த படம் வெளியிடப்பட்டுள்ளது. இஸ்ரோ வெளியிட்ட புகைப்படத்தில் தஷ்ரத் மஹால், சரயு நதி ஆகியவை தெரிகிறது. புதுப்பிக்கப்பட்டுள்ள அயோத்தி ரயில் நிலையத்தின் புகைப்படமும் இடம்பெற்றுள்ளது. ராமர் கோயிலை நாளை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். இந்தியாவின் அனைத்து துறைகளின் பிரபலங்களும், பல மாநில முதலமைச்சர்களும், பல மாநில ஆளுநர்களும் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சிக்காக ஆயிரக்கணக்கான பாதுகாப்பு வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.
இந்நிலையில் மதுரையில் ஹுனுமன் கோவிலில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தூய்மை பணி மேற்கொண்டார். ஸ்வச் பாரத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள கோயில்களை சுத்தப்படுத்தும் முயற்சியை அனைவரும் கையில் எடுக்க வேண்டும் என சில நாட்களுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருந்தார். அதன்படி பிரதமரே மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாசிக் பகுதியில் அமைந்திருக்கும் காலாராம் கோவிலை பிரதமர் சுத்தப்படுத்தினார்.
இந்நிலையில் உலகப்புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து மதுரை மீனாட்சியம்மன் கோவில் தெற்கு கோபுரம் அருகில் உள்ள அனுமார் கோவிலிலும் சாமி தரிசனம் செய்த எல். முருகன் கோவிலில் தூய்மை பணி மேற்கொண்டார்.
கோவிலில் வேட்டியை மடித்துக்கட்டி குப்பைகளை அகற்றியதோடு, கோவில் பீடங்களில் தண்ணீர் ஊற்றி சுத்தப்படுத்தினார். கிட்டத்தட்ட 30 நிமிடங்கள் கோவிலில் தூய்மை பணி மேற்கொண்டார்.
முன்னதாக மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் பாஜக பெண் தொண்டர்கள் கோவில் முஜ்பு தாமரை கோலங்களை வரைந்தனர். மேலும் அங்கு வந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகளையும் தாமரை கோலங்களை வரைய வைத்து புகைப்படம் எடுத்தனர்.
தொடர்ந்து செய்தியாளர்களை மத்திய அமைச்சர் எல்.முருகன் சந்தித்து பேசுகையில்...,"அயோத்தியில் ராமருக்கு கோவில் கட்டுவதே ஒவ்வொரு இந்தியனின் கனவு. இது இந்தியர்களின் உணர்வுப்பூர்வமான தருணம். ஊடக வெளிச்சத்திற்காக பாஜகவினர் கோவில்களை சுத்தம் செய்யவில்லை.
கோவில்கள் எவ்வளவு அழுக்காக, குப்பைகளாக உள்ளது என்பது நான் தூய்மைப்பணி மேற்கொள்ளும்போது தெரிந்திருக்கும். கோவில்கள் அழுக்காகவும் குப்பைகளாகவே உள்ளன. ராமர் கோவில் திறப்பையொட்டி தமிழகத்தில் அரசு விடுமுறை அளிக்கப்பட வேண்டும். அது அனைத்து மக்களின் கோரிக்கையாக உள்ளது. மக்களின் விருப்பத்தை அறிந்து அரசு நிறைவேற்ற வேண்டும்.
22-ம் தேதி தமிழக கோவில்களில் ராமர் கோவில் திறப்பு விழா பூஜை நடத்த அரசு அனுமதிக்கவில்லை என செய்தி வெளியாகி உள்ளது. கடும் கண்டனத்திற்குரியது. எனது வன்மையான கண்டனங்களை தெரிவித்து கொள்கிறேன். ஜிப்மர் மருத்துவமனை விடுமுறை குறித்த கேள்விக்கு பல நூறு ஆண்டுகளுக்கு பின்பு அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. இதனை தீபாவளிபோல நாட்டு மக்கள் கொண்டாட வேண்டும். மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும். திமுக ஓட்டு வங்கி அரசியல் மட்டுமே செய்கிறது. தமிழக கோவில்களில் ராமர் கோவில் திறப்பையொட்டி சிறப்பு பூஜை செய்ய அனுமதி மறுத்திருப்பதற்கு வன்மையான கண்டனங்களை தெரிவித்து கொள்கிறேன். அதனை அறநிலையத்துறை அமைச்சர் வாபஸ் பெற வேண்டும்” என பேசினார்.