MK Stalin: திமுகதான் சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்ட உண்மையான இயக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்ட உண்மையான இயக்கம் திமுகதான் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

திருநெல்வேலியில் நடந்த மனிதநேய மகத்துவ கிறிஸ்துமஸ் பெருவிழாவில் சிறப்பு விருந்தினராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது, அவர் பேசியதாவது,
மனிதநேய மகத்துவ விழா:
மகத்துவ கிறிஸ்துமஸ் திருவிழா மூலமாக உங்கள் அனைவருக்கும் மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் உள்ள கிறிஸ்தவ மக்களுக்கு என்னுடைய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள். ஒரு மதத்தின் விழாவாக இல்லாமல் மனிதநேய மகத்துவ விழாவாக கொண்டாடும் உங்கள் எண்ணத்திற்கு பாராட்டுகள்.
எல்லாரும் ஒற்றுமையாக ஒருவர் மீது ஒருவர் அன்புடன் இருக்க வேண்டும் என்று நினைத்தே, கடந்த 15 ஆண்டுகளாக இப்படிப்பட்ட சமத்துவ விழாவாக இனிகோ இருதயராஜ் நடத்திக் கொண்டிருக்கிறார். அதனால்தான் இந்த அமைப்பிற்கு கிறிஸ்தவ நல்லெண்ண அமைப்பு என்று வைத்துள்ளார். அவருக்கும் அவரது நல்லெண்ணத்திற்கும் எனது வாழ்த்துகள், பாராட்டுகள்.
அமைதி காட்டும் விழா:
தன்னுடைய வாழ்நாளில் இந்தியாவிற்கு வராமலே தனது சகோதரி எழுதிய கடிதம் மூலமாக இங்கு நிலவிய பிற்போக்குத் தனத்தை போக்க கல்வி எனும் அறிவொளியை வழங்கிய மாற்றுத்திறனாளி பெண்தான் சாராள் தக்கர். தென் தமிழ்நாட்டில் ஏராளமான பெண்கள் படித்து கல்வியறிவு பெறுவதற்கு அடித்தளமாக இருப்பதற்கு இந்த சாரள் தக்கர் போன்ற கல்லூரிகள்தான். கிறிஸ்தவ விழா தேவாலயங்கள் மட்டுமின்றி தெருக்கள், வீதிகள், பணியிடங்களில் கொண்டாடப்படும் விழாவாக உள்ளது.
கிறிஸ்துமஸ் விழா நம்பிக்கையை விதைக்கும் விழாவாக பரிவு காட்டும் விழாவாக, அமைதிக்கு வழிகாட்டும் விழாவாக, மகிழ்ச்சியை கொண்டாடும் விழாவாக இருக்கிறது. அதனால்தான் மதங்களை கடந்து அனைத்து மக்களும் கிறிஸ்துமஸ் நாளில் வாழ்த்துகளை பகிர்ந்து கொள்கிறார்கள். அன்பு நெறியை, பண்பு நெறியாக வளர்த்து எடுப்பதுதான் கொண்டாட்டங்களின் அடிப்படையாக இருக்க வேண்டும்.
அன்புதான் பாவங்களை போக்கும்:
வெறுப்புணர்ச்சி பாவங்களைத்தான் செய்யத் தூண்டும். ஆனால், அன்பு என்பது அத்தனை பாவங்களையும் போக்கும். அப்படிப்பட்ட அமைதியான அன்பான சமுதாயத்தை சகோதரமிக்க உணர்வுமிக்க சமுதாயத்தை கட்டமைக்க வேண்டிய கடமை நம் எல்லாருடைய கடமையாக அமைந்துள்ளது. இதுதான் இன்றைய இந்தியாவிற்கு தேவை.
இந்துக்களும், கிறிஸ்தவர்களும், முஸ்லீம்களும் ஒருதாய் வயிற்றுப் பிள்ளையாக வாழ வேண்டும். அதற்கு இதுபோன்ற விழாக்கள் துணை நிற்க வேண்டும். பீட்டர் அல்போன்ஸ் பேசும்போது எண்ணிக்கையில் அதிகளவு இருக்கக்கூடிய பெரும்பான்மையினர் எப்போதும், சிறுபான்மையினர் நலனை, அவர்கள் மாண்பை போற்றி பாதுகாக்கக் கூடியவர்கள்தான் என்று சொன்னார்.
பொற்காலம்:
மதச்சார்பின்மை மத நல்லிணக்கத்தை விரும்புபவர்கள் உங்களுக்கு துணையாக பாதுகாப்பு அரணாக இருப்போம். என்றைக்கும் இருப்போம் உறுதியளிக்கத்தான் இந்த நிகழ்ச்சிக்கு வந்துள்ளேன். திமுகதான் சிறுபான்மையினர் நலனில் உண்மையான அக்கறை கொண்ட இயக்கம். திமுக ஆட்சியில்தான் சிறுபான்மை நலன் காக்கும் பொற்காலம் என்று சொல்லும் அளவிற்கு ஏராளமான முன்னெடுப்புகளை எடுத்துள்ளோம். கிறிஸ்தவர்கள் பலர் அதை எடுத்துச் சொன்னார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.





















